Sunday, 30 March 2014

நட்பு

நல்ல நட்பில் மேலும் சில பூக்களென
..................................................................

 ஒரு பொன் மாலைப்பொழுதில் தஞ்சை புத்தகக்கண்காட்சியை காணும் வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது.தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் சகோதரரை பார்த்து வாங்கன்னு முத்து நிலவன் அய்யா கூறியிருந்தார்.நானும் ஜெயக்குமார் சகோதரரிடம் பேசிய பொழுது அவசியம் வருகின்றேன் என்றார்.

முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட கணினி பயிற்சியில் அவர் எங்களுக்கு வலைத்தளத்தில் என்ன எழுதுவது?என பயிற்சி அளித்தார்.ஆசிரியர் என்றாலே ஒரு மரியாதையும் அச்சமும் வருமல்லவா? அவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது .மிக எளிமையாக என்னை காண அவரின் துணைவியாரையும் அழைத்து வந்தது மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன்..

புன்னகை பூத்த முகத்துடன் தஞ்சை மண்ணுக்கே உரிய பாசத்துடன் அவரின் துணைவியாரைப் பார்த்ததும் வேற்று ஆளாகத்தோன்றவில்லை நீண்ட நாள் பழகிய உணர்வில் பழகினேன்.நல்ல உறவுகள் வாழ்வில் கிடைப்பது அரிது.வலைத்தளம் எனக்கு வழங்கிய கொடையில் இவர்களும் உறவுகளாக ....

   கீழே  அவரின் வலைத்தளத்தில் இருந்து ..
.நன்றி சகோதரருக்கும் ,தோழிக்கும்..

” நல்லாரைக் காண்பதுவும் நன்றே

------------------------------------------------------------
 நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
 குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
 இணங்கி இருப்பதுவும் நன்று

      நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
      கடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள், தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.

 நண்பர்களே, புத்தகத் திருவிழாவின்
நிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில் தென்றல் தவழ்ந்து வந்தது.

 தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்....

 தென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும் தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர் சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர், வேலு நாச்சியாரின் விழுது,


கவிஞர் கீதா அவர்கள்
தென்றல்

http://velunatchiyar.blogspot.com/

பேசினார்



     நான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றார்.

இதைவிட வேறு என்ன வேலை. பிற்பகல் எனது மனைவியுடன் சென்று சந்தித்தேன். நான் பேசியது குறைவுதான். அவர்கள் இருவரும் நெடுநாள் பழகிய தோழிகள் போல் பேசி மகிழ்ந்தனர்.

சகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,

விழி தூவிய விதைகள்

என்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.

 டீச்சர்
  எனக்குப் பிறந்த நாள் என
 மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தனர்  எனக்கு
நாற்பது குழந்தைகள்

----

”ஏன் படிக்கல?
கலங்கிய சிறுமியை
ஏன்டாம்மா? என்னாச்சு
சாப்டியா?
தலைவருடி இதமான வார்த்தைகளால்
பதமாய் மனம் வருட
விழி மேகம் மடை திறக்க
சாப்டல டீச்சர் .... பசிக்குது...”

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள் எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய், பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.

   நண்பர்களே, நீங்களே கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

                          - வெற்றி வேற்கை





6 comments:

  1. நன்றி சகோதரியாரே.
    வலை வழங்கிய கொடை
    சகோதரியாம் தங்களின் நட்பு.
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நட்பு என்றும் தொடரும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சகோதரரையும் அவர் துணைவியாரையும் உங்களையும் படத்தில் காண்பது மகிழ்வு தருகிறது..
    நானும் ஒரு நாள் சந்திப்பேன் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  4. நட்புக்கு எல்லையில்லை தொடரும் ....தொடர வேண்டி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி! நட்பு சிறக்கட்டும்! நன்றி!

    ReplyDelete
  6. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...