Wednesday, 26 March 2014

எது தேர்வு?

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
------------------------------------------------------------

தேர்வறை மாணவர்களின் எண்ணங்களை வெளிக்கொணரும் பரவசத்தில் இருந்தது.

முள்புதரில் வீழ்ந்த விதையொன்று முளைத்தெழுவதாய் வறுமையின்  பிடியில் சிக்கி,நாளை நகர்த்த பாடுபடும் ,குடும்பச் சிக்கல்களை கண்முன் கண்டு அதற்குள்ளே உழன்று வாழும் முதல்தலைமுறை கல்வி பயிலும் அழுக்கடைந்த உடையில் புரியாத உலகில் அடியெடுத்து வைக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருபுறமும்,

வளமான நிலத்தில் விதைக்கப்பட்ட விதை உலகு காணும் மகிழ்வில் முளைத்தெழுவது போன்று வசதியான ,வறுமையறியாத,கல்வி ஒன்றே நோக்கமாய் ,வாழ்வின் சிக்கல்களை அறியாத,தூய்மையின் முகங்களாய், இரண்டு அல்லது மூன்றாம் தலைமுறை கல்வி பயிலும் தனியார் பள்ளி மாணவர்கள் மறுபுறமும் அந்த அறையில் நிறைந்திருந்தனர்...தேர்வெழுத வேண்டி...!

அரசுப்பள்ளி மாணவர்களில்....
ஒரு மாணவன் விடைத்தாளை பெற்றதும் குனிந்த தலைநிமிராமல் எழுதிக்கொண்டிருக்க, மற்றொருவனோ திருவிழா கூட்டத்தில் தொலைந்தவனாய் திருதிருவென...கேள்வி மட்டுமே பார்த்து எழுத அத்தனை சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.நண்பன் படத்தில் வருவது போல எழுத்துக்கள் அவனைப் படாத பாடு படுத்தியக் காட்சியை காணமுடியவில்லை.அவனை எழுத பயிற்றுவிக்க அந்த ஆசிரியர்களின் சிரமங்கள் கண்முன்னே விரிய,அதை விட அவனுக்கு பிடிக்காத கல்வியைப் பயில அவன் என்ன பாடுபட்டிருப்பான் என்ற நினைவுகளோடு நான்.....

தனியார் பள்ளி மாணவர்கள் மூளைக்குள் நிரப்பியதை அங்குமிங்கும் திரும்பாமல் கொட்டிக்கொண்டிருந்தனர் விடைத்தாளில்.

வர்க்க போராட்டத்தின் சாட்சியாய் தேர்வறை காட்சியளித்தது.

எனக்குப் புரியவில்லை எந்த அரசுப்பள்ளி மாணவர்களும் தோல்விக்காக மரணத்தை நாடியதில்லை .வாழ்க்கை அவர்களுக்கு தோல்வியை ஏற்க,போராட கற்று கொடுத்துள்ளது.அவர்கள் வாழ்வில் போராடும் துணிவைக் கற்றிருக்கின்றனர்.மேலும் பெற்றோர்களும் மதிப்பெண்களை விட குழந்தையைப் பெரிதாகவே மதிக்கின்றனர்.

கல்வியைத் தவிர வேறொன்றரியாத மாணவர்களே தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலையை நாடுகின்றனர்...

யார் மீது தவறு?

குடும்பம் வளமுடன் இருக்க இருவரும் சம்பாதிக்க ஓடி குழந்தைகள் நினைத்தை எல்லாம் வாங்கித்தந்து,தோல்வியைக் கற்றுத்தராத பெற்றோர்களா?

குழந்தமையை நினைத்துப்பாராத கல்விநிலையங்களா?
மதிப்பெண் நோக்கி ஓடும் சமூகமா?

4 comments:

  1. அனைத்திற்கும் முதலில் பெற்றோர்களே காரணம்... ஏனென்றால் அவர்கள் தான் முதல் ஆசிரியர்கள்...!

    ReplyDelete
  2. மூன்று காரணங்களும் என்று நினைக்கிறேன்..அதற்கு அடித்தளமாக இருப்பது பணம் மற்றும் சுயம்!!

    ReplyDelete
  3. பெற்றோர்கள் முதல் காரணம் என்பதை மறுக்க இயலாது.

    ReplyDelete
  4. கற்றுக்கொடுக்க மறந்த பெற்றோரும் சமூகமும்தான்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...