Monday 23 November 2020

உவமைக்கவிஞர் சுரதா

உவமை கவிஞர் சுரதா நூற்றாண்டுவிழா
தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம்.

உயிரில் கலந்து உணர்வில் உறைந்த
உன்னதத் தமிழே தாயே!
மேதினி வியக்கும் உயர்ந்தோர் போற்றும்
மேன்மையானவளே!
வணங்குகின்றேன் உனையே!

நல் ஏரென்றே
சொல் ஏரெடுத்து
பல்லோர் போற்ற
பாரினில் சிறக்கும் தலைவா!
சின்னவள் நானும்-உனையே
சீரியத் தமிழால் வணங்குகின்றேன்.

கவிச்சரம் தொடுத்து
கனிவுடன் படைத்து
மணியென தந்திடும்
மக்காள்!
மலைவாழைத்தமிழை 
பாமாலையெனவே
மகிழ்ந்தே படைத்திடுவோம் வாரீர்!

கனித் தமிழைச் சுவைக்கவே
அணிஅணியாய் திரண்ட
சான்றோரே!
படைக்கின்றோம்
செவிமடுத்து கேளீரென வணங்குகின்றோம்.

உவமைக்கவிஞர் சுரதா
--+++++++++++++++++++++
சங்கம் போற்றியத் தமிழே!
அங்கம் மரபாயான தமிழே!
சங்கத் தமிழ் மலர்ச்சோலையில்
சிந்தும் தேனை எடுத்தே
சிதறாமல் தமிழைச் சுவைத்தீர்.
தங்கத் தமிழே!- எங்கும்
பொங்கி முழங்கிடும் சிங்கத் தமிழே!
மங்கா புகழுடைய வேந்தே
தங்கிடும் புவியில் நிலைத்தே
எங்கும் சிறந்திடும் உம்பாட்டே!

ஏற்றிடும் தமிழில், கற்றோர்
போற்றிடும் தேன்தமிழ் கவிதனை
சாற்றிடும் அமிழ்தென படைத்திட்டீர்.
நாற்றென செழித்து வளர்ந்திடவே
ஏற்றமிகு கவிதனைப் பதியமிட்டீர்.

ஊற்றென உவமைகள் உம்மில் முகிழ்த்திட
காற்றென கவிமழை பொழிந்தே
நூற்றாண்டு கடந்தும் வாழ்கின்றீர்!
நூறாயிரம் வாழும் தமிழெனவே!

பாட்டினில் கற்பனை எதற்கென்றே-தமிழ்
காட்டினில் இயல்பாய் உவமைகளை
ஏட்டினில் எழுதிட உரைத்திட்டீர்.
நாட்டினில் நிலவிடும் தீமையெல்லாம்
வாட்டிடும் துன்பத்தீயில் என்றே
தீட்டிய வரிகளில் சுடர்விட்டே
சாட்டியே நீரும் தமிழ்ச்சாட்டையை எடுத்தீர்.
கூட்டினில் பறவையென இருந்தமிழை
பாட்டினில் படைத்தே விண்புகச் செய்தீர்.

கற்றிடு மரபை ,கற்றிடு சங்கத்தமிழை
பெற்றிடு உயர்வை, ஏற்றிடு பெருமை என்றீர்.

உன்னதத் தமிழால் உலகு பாடியே
கன்னல் தமிழைக் களிப்புடன் தந்தீர்.
மலரினில் வழிந்திடும் மதுஉண்ட வண்டென
மயங்கியே உம்மால் கிடக்கின்றோம்.


என்றென்றும் தமிழாய் வாழ்ந்தீரே
நன்றே நன்றே உம்பாட்டு
சென்றே திக்கெட்டும் சிறத்திடுமென்றே
வாழ்த்தியே நானும் அமைகின்றேன்.

மு.கீதா
புதுக்கோட்டை
 





,

2 comments:

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...