பன்னாட்டு கவியரங்கம்
என் தலைப்பு'வயல்'
வயல் குறித்துக் கவிபாட
வரப்போரம் தேடினேன்.
பாலங்கள் விழுந்த ஒலி கேட்டதுண்டு
பாளம் பாளமாய் வெடித்த வயலின்
விம்மல் ஒலி கேட்டதுண்டா?
கேளுங்கள்.
வயலின் வலியிது.
ஏன் மறந்தாய் மனிதா?
எலும்பென வரப்பெடுத்து,
உதிரமாய் நீரெடுத்து,
என்மார்பு சுரந்து,கருப்பை பிளந்து
நிலையாய் ஓரிடத்தில் உன்னை
வசிக்க வைத்த
வயல் கேட்கின்றேன்.
பச்சை பட்டுடுத்தி
பசுங்கிளிகள் கவிபாட,
சேற்று நீரில் மீன் துள்ள,
ஒற்றைக்கால் குருகு பசியாற,
சற்றும் அயராது உழைத்த
உன் பாட்டனின்வியர்வையினை
தென்றலது துடைத்து விட.
அயர்வு கலைந்து ,அசதி கலைந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
வரையாது பசிநீக்கி மகிழ்ந்தானே!
ஏன் மறந்தாய் மனிதா?
புரிகிறதா? புரிகிறதா?
வயல் அழித்து,
வரட்டு நாகரிகமென
நீ தேடி ஓடியதெல்லாம்,
இன்று உனக்கு எதிராக! எதிரியாக!
உணர்வழித்து,உணவிழந்து,
உறைகின்ற வீடாக்கி
மகிழும் மனிதா..
இனி எதை உண்ணப் போகின்றாய்?
கான்கிரீட் கற்களையா?
விவசாயப் புரட்சி என்றே
விளைநிலங்களை விடமாக்கினாய்.
தொழிற்புரட்சி என்றே
தொழிற்சாலை கழிவுகளை
என் கருப்பைக்குள் புகுத்தி
கருவறுத்தாய் .
ஏன் மனிதா?
அது மட்டுமா!அது மட்டுமா!
சுரங்கம் வெட்டி, சுரங்கம் வெட்டி
கனிமங்கள் அழித்தாய்-நான்
பாதுகாத்த புதையல்கள் அழிவதை
பார்த்தே நீயும் கடக்கின்றாய்.
சோழநாடு சோறுடைத்து.
சோறின்றி விவசாயி
எலிபிடித்து உண்டநிலை
ஏன் மறந்தாய்?
மீதமிருக்கும் மிச்ச நிலத்திலும்
மீத்தேன் எடுக்க அலையும்
கூட்டத்தோடு கூடியே களிப்பாயோ!?
வள்ளுவா
'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்றாய்.
பட்டறிவு, பகுத்தறிவு ஏதுமின்றி,
கெட்டநிலையறியாது
பறந்து பறந்து ஓடுகின்றான்.
ஒரு வீடு போதாது
இருவீடு,பலவீடென
ஊர்ஊராய்ச் சேர்க்கின்றான்.
ஒரு காரு போதாதென
கார்களாய் வாங்கிக் குவிக்கின்றான்.
வயலை விற்று கார் வாங்கி
கார்ப்பரேட் முதலாளிகளின்
கால்நக்கும் ஏவலாளியானான்.
உழவனோ கூலியாய்.
நீ தூங்கும் வீட்டினிலே,
நிச்சலமான நேரத்திலே,
விதை முட்டும் சத்தம் உணர்ந்தாயோ,
விதை முட்டி முட்டி
முளைக்க முடியாமல் மரித்தவற்றின்
ஓலங்கள் கேட்டாயோ!
உழவன் உயிர் துறந்தாலும்
உணவளிக்கும் வயல் மறவான்.
தொழுதென்னை
வணங்கியே பயிரிடுவான்.
தொண்டு காலமாய்
எனக்கும் அவனுக்குமென
அறுபடாத உறவை
அறுத்தாய் நீ!
காவிரித்தாய் கைவிரிக்க
கையேந்தி அலைகின்றான்.
கைகழுவினர்,
காலால் எட்டி உதைத்தனர்.
கோமனத்துடன் எனது மகன்
உருண்டு புரண்டு அழுதானே!
உணர்விருந்தால் அவனுக்காக
உயிர்க் குரல் கொடுத்திருப்பாய்.
உப்பிட்டுத்தான் உண்கிறாயா?
உணர்வின்றி அலைகிறாயா?
ஏன் மறந்தாய் மனிதா?
பசியென்று வந்தோரை வாழவைத்து
பாரெல்லாம் கொடை கொடுத்து
வாழ்ந்த மனிதா...
இன்று
பீட்ஸா ,பர்கர் உண்டு
பீஸ்பீஸாக அறுத்துக் கிடக்கின்றாய்
தடுக்கி விழும் இடத்திலெல்லாம்
முளைத்து விட்ட மருத்துவமனைதோறும்.
பாரம்பரிய உணவு மறந்தாய்.
பாரமானாய் உலகிற்கே!
தீநுண்மி உயிர் பறிக்க காத்திருக்க,
கூட்டுக்குள் புழுவென
வீட்டுக்குள் முடங்கினாய்.
அயல்நாட்டு விதை விதைத்து,
அன்னை வயலை மலடாக்கி,
அடுத்த வேளை உணவிற்கே
அந்நியரிடம் கையேந்தும்
நிலை தாழ்ந்தாய்.
தகுமா? இது தகுமா?
நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை
தமிழ் நாடு
இந்தியா.
மனதைத் தொட்ட கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteஆகா! அருமை கீதா. நான் காணொலி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.
ReplyDelete//விதை முட்டும் சத்தம் உணர்ந்தாயோ,
விதை முட்டி முட்டி
முளைக்க முடியாமல் மரித்தவற்றின்
ஓலங்கள் கேட்டாயோ!
உழவன் உயிர் துறந்தாலும்
உணவளிக்கும் வயல் மறவான்.// பிரமாதம்!! முழுக் கவிதையும் அருமை கீதா.
மிக்க நன்றி மா
ReplyDelete