Monday 1 August 2016

வீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் 29

                                                                   வீதி 

                                       கலை இலக்கியக்களம் -கூட்டம் 29 

 முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் ”பாறை ஓவியங்கள் ”ஆய்வு நூல்                                                  அறிமுக விழா மற்றும் 

                 கவிஞர் வைகறையின் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு. 



 இன்று வீதி இலக்கியக்கூட்டம் ஒரு வித நெகிழ்வோடு துவங்கியது... 

வீணைவழி பாரதி

கவிஞரும் தமிழாசிரியருமான செல்வி ரேவதி பாரதியின் பாடல்களை வீணையில் இசைத்து இனிதாகத் துவங்கினார்.

 வரவேற்புரை 

 கவிஞர் நீலா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.அவரே தயாரித்து அளித்த இயற்கை சிற்றுண்டியால் அனைவரின் பசி தணிந்தது...

 தலைமை -
                      கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள்
 தனது உரையில் கூறிய, பாறை ஓவியங்கள் குறித்த களஆய்வு குறித்த அவரது நினைவுகள் வியப்பில் ஆழ்த்தின.

 சர் ஜான் மார்ஷல் என்ற வெள்ளைக்காரனே சிந்துவெளி நாகரீகத்தினை உலகுக்கு பறைசாற்றினான்...என்றும் இந்நூல் வீதியில் அறிமுகம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்கள்.

நூல் அறிமுகம்

 வீதியை நிறுவிய எங்களின் மதிப்பிற்குரிய முனைவர் நா.அருள் முருகன் அய்யா எழுதி, கடந்த வெள்ளியன்று தஞ்சையில் வெளியிடப்பட்ட“பாறை ஓவியங்கள் “என்ற ஆய்வு நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

 திருமிகு திருப்பதி,திருமிகு பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் அறிமுகமும் அவர்கள் இவ்வாய்வில் நேரிடையாக கலந்து கொண்ட அனுபவங்களையும்,இந்நூல் குறித்த அரிதான பிற செய்திகளையும் எடுத்துக்கூறிய விதம் நூலாசிரியரின் விடா முயற்சியையும், ஆர்வத்தையும்,நிறைவான பணியையும் காட்டின.

 திருமயம் கோட்டையை பாரம்பரியச்சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க அய்யாவின் ஆய்வே காரணம் என்று திருமிகு இராசி பன்னீர்செல்வம் அவர்கள் கூறிய போது வீதி கைதட்டி மகிழ்ந்தது.

 கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

 தனது உரையில் வீதியின் கட்டமைப்பே அதன் இத்தனை மாதங்கள் சிறப்புடன் நடக்க காரணம் என்றும் ,வீதி இலக்கியக்கூட்டம் மட்டுமே புதுகையில் மாதந்தோறும் நிகழ்கின்ற கூட்டமாக உள்ளது என்றும் கூறி ,புதுகையின் வரலாற்று சிறப்புகள் ,தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் கூறினார்.

 அவரிடம் வைகறையின் துணைவி ரோஸ்லின் அவர்களுக்கு அரசுப்பணி பெற உதவ வேண்டும் என்ற கோரிக்கையை  வீதி  உறுப்பினர்கள் வைக்க நிச்சயம் பெற்றுத்தருகிறேன் என்று கூறியதுடன் ,அதுவரை தற்போது செய்யும் உதவியாக ஆசிரியப்பணி முடித்துள்ள ரோஸ்லினுக்கு ,அவரது பள்ளியிலேயே ஆசிரியப்பணி தருகிறேன் என்றும் கூறி எங்களின் மனச்சுமையை கொஞ்சம் பகிர்ந்து நிம்மதி அளித்துள்ளார்.

இவர்களைப்போன்ற நல்ல உள்ளங்களால் மனித நேயம் தழைக்கின்றது..புதுகையும் சிறக்கின்றது.
மனம் நெகிழ்வாய் வீதி அவருக்கு நன்றிதனை சமர்ப்பிக்கின்றது.

 சிறப்பு விருந்தினர் 

திருமிகு நாறும்பூ நாதன் அவர்கள். 

 நெல்லையிலிருந்து வீதிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதிப்பிற்குரிய நாறும்பூ நாதன் அவர்கள் தனது யதார்த்தமான, உணர்வு பூர்வமான பேச்சால் அவர் வீதியில் ஒருவரானார்.



கவிஞர்கள்,எழுத்தாளர்கள் மறைந்ததும் அவரின் குடும்பம் புறக்கணிக்கப்படுவதே வழக்கம் என்பதை ஒரு கதை மூலம் கூறி ,ஒரு கோழி தனது குஞ்சை அரவணைப்பது போல் நீங்கள் வைகறையின் குடும்பத்தை காப்பதை நினைக்கையில் தமிழகத்திலேயே இப்படி ஒரு இலக்கியக்கூட்டம் ஒரு கவிஞனுக்காக பாடுபடுவதைக் கண்டதில்லை என வீதிக்கு பெருமை சேர்த்தார்.

 கோகிலா என்ற கணவனை இழந்த தஞ்சையைச் சேர்ந்த கைம்பெண் குளோரிண்டா என மாறிய உண்மைக்கதையைக்கூறி அனைவர் மனதையும் நிறைத்து சென்றது அருமை.

 மறக்க முடியாத இந்த வீதியின் 29 ஆவது கூட்டத்தில் அவரின் வருகை சிறப்புக்குரிய ஒன்றாக வீதி கருதி மகிழ்கின்றது.யாரைப்பார்க்க வேண்டுமென்று வைகறை ஆசைப்பட்டாரோ அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள,அவரது முன்னிலையில் வைகறையின் குடும்ப நிதியை வழங்கியதை வீதி தனது கடமையாக எண்ணுகின்றது.

புதுகையை நம்பி வந்தவரல்லவா வைகறை...அவரின் குடும்பத்தை புதுகை விட்டுவிடாது.

 ஏற்புரை

முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் 

                                  தனது ஏற்புரையில் வீதி என்பது பிரித்து வைக்கும் என்பது வழக்கம் ..ஆனால் இவ்வீதி எல்லா வீதிகளிலிருந்து வருபவரையும் ஒன்றிணைக்கும் கருவியாக செயல் பட்டு வருவதைக்கூறி, அதன் சமூகப்பங்களிப்பை கூறி பாராட்டினார்.          



               
                                பின் நவீனத்துவக்கோட்பாட்டில் ஒரு நூலை எழுதியவுடன் அந்நூலாசிரியன் இறந்துவிடுகின்றான் என்றார்.

 வீதியின் முன்பு நடந்த கூட்டத்தில் கவிஞர் முத்துச்சாமி அவர்களை உலகறியச்செய்து தமிழக அரசின் நிதி உதவி பெற சிறு காரணமாய் வீதி இருந்துள்ளது.
தற்போது ஒரு கவிஞனுக்கு வீதி தனது பங்களிப்பைச்செய்திருக்கிறது என்றும் கூறினார்.

 ”பாறை ஓவியங்கள் “ நூல் வெளியீட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாத நிலையில் தனது மகள் அவ்விழாவில் கலந்து கொண்டதை கூறி தாய் வழிச்சமூகத்தின் பிரதிபலிப்பாய் அவள் அவ்விழாவில் கலந்து கொண்டார் என பெருமையுடன் கூறி மகிழ்ந்தார்.

 கவிதைநூலை காதலியைப்பார்ப்பது போலவும்,
கட்டுரை நூலை சகோதரனைப்பார்ப்பது போலவும் ,
ஆய்வுநூல்களை முதியவர்களை, பழமையை பார்ப்பதும் போலவும் பார்க்கிறார்கள்....என்று கூறி பாறைஓவியங்கள் என்ற அமைப்பில் வெளிடப்பட்டுள்ள முதல்நூல் இந்நூலே என்று கூறி மகிழ்ந்தார்.

நிதி அளித்த விவரம்


கவிஞர் கீதா கவிஞர் வைகறைக்காக உலகெங்கிலும் இருந்து நேரிடையாகவும் ,வங்கியின் மூலமும் பெறப்பட்ட தொகையைக்கூறி அதை அளித்தவர்களின் பெயர்களையும் ,அளித்த தொகையையும் கூறினார்.


                                          வங்கி மூலம் வரவு           =ரூ 73,000
                                          கையில் வந்த வரவு         =ரூ 1,79,905
                                                கூடுதல்                             =ரூ 2,52,905

எல்.ஐ.சியில் நிரந்தர வைப்புத்தொகையாக போடப்பட்ட தொகை ரூ 2,03,753
கவிஞர் வைகறை மகன் ஜெய்க்குட்டியின் கைகளில் தரப்பட்டத்தொகை ரூ 50,500.
  
விரைவில் நிதி அளித்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

நிதி வழங்கும் நிகழ்ச்சி

கவிஞர் வைகறையின் மகன் ஜெய் குட்டி அவர் நடத்திய 26 ஆவது கூட்டத்தில் எப்படி துள்ளி விளையாடிக்கொண்டிருந்தானோ ,இப்போதும் அப்படியே வீதிக்கூட்டத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சியென பறந்து கொண்டிருந்தான்.



 கவிஞர் வைகறையின் குடும்பத்திற்கான உலகெங்கும் பெறப்பட்ட ரூ 2,52,905  தொகையில் ரூ 2,03,753 எல்.ஐ.சியில் ஜெய்க்குட்டியின் பெயரில் நிரந்தரவைப்புத்தொகையாக போடப்பட்ட இரசீதும்,ரூ 40,500+10,000[இன்று ஜெயாம்மா கொடுத்த தொகை]சேர்த்து ரூ50,500 தொகையை ஜெய்க்குட்டியின் கையில் வழங்கி நெகிழ்ந்தார் அய்யா.

 வைகறையின் குடும்ப உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரோஸ்லின் வைகறையின் ஜெய்க்குட்டி குறித்தக்கனவை நிறைவேற்ற முயற்சி செய்வதாக கூறி அனைவருக்கும் நன்றி கூறினார். 

நன்றியுரை

 கூட்டத்தை சிறப்புடன் நடத்திய கவிஞர் மலையப்பன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 வீதியின் வரலாற்றில் இந்த 29 ஆவது கூட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியகூட்டமாக ,அனைவரும் மனம் நெகிழ்வான நிலையில் வைகறையின் நினைவலைகளோடு,அவரின் குடும்பத்தோடு கலந்து கொண்ட கூட்டமாக அமைந்தது.






 கூட்ட அமைப்பாளர்களான கவிஞர் நீலா மற்றும் கவிஞர் மலையப்பன் இருவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வளவு தொகையை அள்ளி வழங்கிய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்தநன்றி.

தொடர்ந்து அளிக்கின்ற நிதி உதவியை வீதி கூட்டங்களில் வைகறையின் குடும்பத்திடம் அளிக்கப்படும்.

5 comments:

  1. மகிழ்ந்தேன் சகோதரியாரே

    ReplyDelete
  2. வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்? - புதுக்கோட்டை வீதி கவிஞர்கள், வலைப்பதிவர்கள் மனதில் நின்று விட்டார் கவிஞர் வைகறை.

    ReplyDelete
  3. நிகழ்வுப்பகிர்வினைக் கண்டேன். வீதியின் செயல்பாடுகள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மகிழ்ச்சி..... தொடரட்டும் வீதியின் வெற்றி.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...