World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 24[21.02.16]

Tuesday 1 March 2016

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 24[21.02.16]

                                    வீதி கலை இலக்கியக்களம்-24 
நாள்:21.02.16
இடம்;ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரி,புதுகை


 வீதிக்கூட்டம் இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் துவங்கியது....சிறப்பு அழைப்பாளராக ’எருது ”மொழிபெயர்ப்பு சிறுகதை நூலாசிரியர்.திருமிகு கார்த்திகை பாண்டியன் அவர்கள் [விகடன் விருது2015 பெற்றவர்] கலந்து கொண்டார்..

 வரவேற்பு;அமைப்பாளர் திருமிகு .குருநாத சுந்தரம் அவர்கள் 

அனைவரையும் உலகத்தாய் மொழிதினத்தில், கனித்தமிழில் வரவேற்றார்.தனது அயராத பணிகளுக்கிடையேயும் வீதிக்கூட்டத்திற்கு கவிதைகளாய் அழைப்பிதழை வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

பாடல்: சோலச்சி

 தலைமை: திருமிகு கு.ம.திருப்பதி அவர்கள் 

தனது நகைச்சுவையான ,சிந்தனையுடன் கூடிய பேச்சால் துவங்கியதுடன்,அரிய பல செய்திகள், கதைகள்,நிகழ்வுகளைக்கூறி கூட்டத்தைச்செம்மைப்படுத்தினார்.இவரது அயராத உழைப்பாலும்,தலைமைப்பண்பாலும் புதுகை தமிழாசிரியர் கழகம் சிறப்புடன் நடைபோடுகின்றது. இம்மாதத்தில் இருந்து இலக்கிய உலகில் ஆகச்சிறந்தவர்களின் தொகுப்புகளைப்படித்து விமர்சனம் பண்ண வேண்டும் என்ற வீதியின் முன்னத்தி ஏர் ஆக விளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் கருத்துப்படி கவிதைக்கு கந்தர்வன் கவிதைகளும்,சிறுகதைக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைத்தொகுப்பும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கந்தர்வன் கவிதைநூல் விமர்சனம்-மு.கீதா.

வீதிக்கூட்டத்திற்காக கந்தர்வன் கவிதைகளைப்படித்த போது சின்ன விசயமாக என்னுள் இருந்த கவிஞர் கந்தர்வனைப்பற்றிய பார்வை படிக்க படிக்க என்னை விசாலமாக்கியதுடன்,பிரமாண்டத்தைப்பற்றி படித்துக்கொண்டுள்ளேன் எனத்தோன்றியது...மெல்ல கந்தர்வன் என்னுள் விஸ்வரூபமெடுக்கத்துவங்கினார்.
தொழிற்சங்கவாதியாக,ஏழைக்களுக்காகப்போராடும் அதிகாரியாக,பொது உடைமைச்சிந்தனையாளராக,கொண்டாட்டத்தைக்கொண்டாடுபவராக,மாண்பாளராக விளங்கிய கந்தர்வன் வாழ்ந்த புதுகையில் நானும் வாழ்கிறேன் என்பதை விட வேறென்ன வேண்டும்...
புதுகையின் பெருமைக்குரிய கவிஞர்களை எல்லாம் உருவாக்கிய,செதுக்கிய பெருமைக்குரிய கவிச்சிற்பி அவர்.
அப்பெருமைக்குரிய  கவிஞரைப்பற்றி கவிஞர் கீதா எடுத்துரைத்த விதம் அனைவரையும் படிக்கத்தூண்டுவதாக இருந்தது.

அவரைப்பற்றிய நினைவலைகளை கவிஞர் முத்துநிலவன் கூற அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

கவிதை 
கவிஞர்:மீரா.செல்வக்குமார்

”வீடு எனக்கு புதுக்கோட்டை
அவள் இருப்பதோ சென்னையில்” என அவர்களின் வாழ்வியலை அழகிய கவிதையாக்கித்தந்தார்...

கவிஞர் அமிர்தா தமிழ்
தனது கோலம் பற்றியக்கவிதையில்

”வாசலில் ஒருநாள்
சூரியனை வரைந்து
வெயிலில் காயவிட்டிருந்தேன்”என காட்சிப்படுத்திய கவிதையை சிறப்பாகப்
படைத்தார்.

கவிஞர் வைகறை
மரத்தைக்கடப்பது,இரண்டாவது தோசைக்காக,கற்பிதங்களுக்குள் நீந்தும் என்ற மீன் பற்றிய கவிதையை வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


வைரமுத்து சிறுகதைகள்:கவிஞர் த.ரேவதி

40 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் தூரத்து உறவு,வேதங்கள் சொல்லாதது,ஏழையின் தாஜ்மகால்,நீரில் எழுதிய காதல் ,புத்தருக்கும் அடி சறுக்கும் ஆகிய கதைகளை அவர் சிலாகித்து கூறிய விதம் மிக அருமை..

சிறுகதை வாசிப்பு;கவிஞர் முருகதாஸ்

தனது மிடறு நூல் வெளியீட்டு விழா மாலையில் உள்ளபோதும் காலையில் வீதியில்” தூக்குகூடை” என்ற கட்டுமானத்தொழிலாளர்களின் நிலையினைக்கூறும் சிறுகதையை  வாசித்தார்...கதை எளிமையான நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வாசித்தது மிகநன்று.

நூல் அறிமுகம் :அய்யப்ப மாதவன் கவிதைகள்-திருமிகு இரா.ஜெயா.

மிகச்சிறந்த ரசிகையான அவர் தனது பணிச்சிரமத்திற்கு இடையிலும் நூலை அறிமுகம் செய்தார்.இருக்கும் நிலையிலிருந்து வாழும் நிலைக்கு அய்யப்பமாதவனின் கவிதைகள் தன்னை மாற்றியதாக கூறி அம்மா,சும்மா. மற்றும் நண்பர்கள் கவிதைகளை  ரசித்து கூறிய விதம் அந்நூலை மேலும் படிக்கத்தூண்டியது.

சிறப்பு விருந்தினர் அறிமுகம்.கவிஞர் துரைக்குமரன்.

எருது நூலாசிரியர் எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களை அறிமுகம் செய்தார்.அவருக்கு நூல்கள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.

ரஷ்யாவில் பணிபுரிந்த பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று ,எஸ்.ராமக்கிருஷ்ணனின் நூல்களைப்படித்ததன் மூலம் தமிழ் இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வெளிநாட்டுப்பணியைத்துறந்து திருநெல்வேலில் கல்லூரியில் பேராசிரியராகப்பணி புரிந்து கொண்டே நவீன இலக்கிய வாசிப்பின் மூலம் மொழிபெயர்ப்பு நூலாசிரியராக,எழுத்தாளராக மாற்றம் பெற்றேன் என்று அவர் கூறிய போது வியந்து தான் போனோம்.

தமிழ் தனக்கான நவீனப்பாதையில் நடைப்போட்டுக்கொண்டுள்ளதென்றும் இடைவிடாத வாசிப்பே இலக்கியங்களை மேன்மைக்கு கொண்டு செல்லுமென்றும்.உலக இலக்கியங்கள் வெகுவாக முன்னேறிய நிலையில் தமிழ் இலக்கிய உலகம் இன்னும் முன்னேற வேண்டிய பாதை அதிகமென்றும் கூறிய போது சரியென்றே அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
வாசிப்பு மகிழ்வின் உச்சம்,அது மதிமயங்கி  வனம்.8 வருட வாசிப்பில் வாசித்தைச்செரித்து பின் எழுதத்துவங்கியுள்ளதகவும்,முன்னோடிகளின் மீது விமர்சனம் செய்யாமல் இலக்கியம் முன்னேற முடியாதென்றும் ,1948 இல் ஜப்பானில் எழுதிய நூலை தற்போது முகமூடியும் ஒப்புதல் வாக்குமூலமும் என்று மொழிபெயர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.மிகச்சிறந்த நவீன இலக்கிய வாசகரை அன்று வீதி இனம் கண்டு பூரித்தது.

வீதி தனது பாதையை மென்மேலும் சிறப்பித்துக்கொண்டு வளர்கின்றது என்பது மறுக்கவியலா உண்மை.
அமைப்பாளர்களான திருமிகு குருநாதசுந்தரம் மற்றும் திருமிகு துரைக்குமரன்
ஆகியோருக்கு வாழ்த்துகள்.

அடுத்த கூட்டம் 25 ஆவது கூட்டத்தை சிறப்பாக அமைக்கும் பணியில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.வழிகாட்ட கவிஞர் முத்துநிலவன் அண்ணா இருக்கும் போது வீதிக்கு என்ன கவலை..அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்..






5 comments :

  1. விழா சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள் அடுத்த வெள்ளி விழாவில் கலந்து நானும் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. விழா சிறப்புக்கு வாழ்த்துக்கள்
    அடுத்த விழாவில் முடிந்தால்
    கலந்து கொள்கிறேன் நானும்...

    ReplyDelete
  3. மிக நல்ல தொகுப்பு...அருமை..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ..அருமையான பகிர்வுகள்

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு சகோ! விழா சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...