நீர் தளும்பி வழியும்
கிணற்றருகே கட்டியிருந்த கோழியொன்று
அரிசி போட்டு ஆசையாய்
கொஞ்சிய சிந்நாட்களில்
கொதிக்கும் அகன்றச்செப்பு குவளையில்
முங்கி கழுத்தறு பட்டு கதறியதை
செப்புத்தவளையும் வரண்ட கிணறும்
உணர்த்தியபடி.....
சினிமாவிற்கு போக நிபந்தனையாய்
குளியலறை தொட்டி நிறைய
இழுத்து இழுத்து வேகமாய் கொட்டியதை
மீண்டும் ஊற்றமாட்டாயா என்பது போல்...
மீள்பதிவு செய்யச்சொல்லியபடி...
கிணற்றருகே துவைக்கும் கல்லே
என் கனவுகளைச் சுமந்து
ரகசியமாய் நீருக்குச்சொல்லும்..
என் சோகங்களை சுமந்து.
கண்ணீரில் நிரம்பித்தளும்புமது...
சற்றே இடறினாலும்
எனை விழுங்கும் கட்டையிருக்கையில்
பயமின்றி அமர்கையில்
துணைக்கு பட்டுக்கோட்டையாரும்
ராஜேஷ்குமாரும் ரமணிச்சந்திரனும்...
எப்போதும் என்னுடன்...
அடுத்த தெரு கலாக்கா
ஆசைப்பட்டவனை மறக்கவியலாது
பொத்தென்று குதித்து
மிதந்த கதையை அச்சத்துடன்
கூறி கிரீச்சிடும்....
நீரிலாடும் கலாக்காவின்
நிழல்...பயமுறுத்தியபடி
கற்பனைகள் உடைகையில்
கனவுகள் சிதறுகையில்
அம்மாவின் வசையால்
ஆதங்கத்துடன் விம்முகையில்
ஆறுதலளிக்கும் தோழியெனப்..
பகிர்கையில் வியக்கிறாள்
பாட்டிலில் பார்த்து ரசிப்பவள்...
வாழ்வின் ரகசியங்களை
ஆழ்மனதில் தேக்கி பொங்கி வழிந்த
நீரையெல்லாம் தொலைத்து
சுவடற்று காற்றில் கலந்தது
புதுவீடாய் எழும்பி...
கவிதை அருமை...
ReplyDeleteதுணை இருக்க பயமேன்...?
ReplyDeleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDelete