Tuesday 9 December 2014

-பேரூந்து எப்படி இருக்கும் சார்?




பேரூந்து எப்படி இருக்கும் சார்?


                                                            சார் பாத்ரூம் போனும்...இங்க ரெஸ்ட்ரூம் இல்லயாமேப்பா..வெளியே போய்ட்டு வர்றீங்களா?

 ....ம் என கூறி வெளியே போய்விட்டு திரும்பிய குழந்தைகளைக் கல்லூரியின் காவலர் உள்ளே விட மறுத்து வெளியே துரத்துகின்றார்... காலில் செருப்பின்றி கசங்கிய சீருடையுடன் காணப்பட்ட அவர்கள் அந்த ஆடம்பரச்சூழலுக்கு ஒவ்வாதவர்களாகத்தெரிந்தனர்.

ஏனெனில் அவர்கள் அந்தியூர் அருகே உள்ள கோங்காடை மலைக்கிராமத்தில்  குழந்தைத்தொழிலாளருக்கான  முறை சாராப்பள்ளியில் படிக்கின்றனர். இதுவரை முறைசார்ந்த பள்ளியையே பார்த்தறியாதவர்கள்..அது மட்டுமல்ல ...பேரூந்து,தொடர்வண்டி எதுவும் பார்த்தறியாக்குழந்தைகள் இந்த பயணத்தில் தான் பார்க்கின்றனர், விழிகள் வியப்பில் விரிய நகரத்து மக்களை சந்தித்தனர். அவர்களின் எளிமை காரணமாக அவமானப்படுத்தப்படுவதைத்   தாங்கவியலாது...

அவர்களை அழைத்து வந்த தோழர் செல்வா இக்காட்சியைக்கண்டு மனம் கலங்கி ...உடனே தனது நண்பர் பஷீர் அலி அவர்களிடம்  இக்குழந்தைகட்கு புதிய ஆடை வாங்கித்தரமுடியுமா எனக்கேட்க.உடனே அவர் சம்மதித்து வாங்கிதந்துவிட்டார்...

காலில் செருப்பு வாங்க யாரை அணுகுவது என்ற நினைவில்..தோழர் செல்வா இருக்க..

பத்தாம் வகுப்பு செய்யுள் காட்சிகளைப் படம் பிடித்து முடித்த சிடியைக் காணும் ஆவலில் அவர்களாகத்தரும் வரை பொறுமையின்றி நானும் ரேவதி ஆசிரியரும்  தோழர் செல்வா அவர்களின் அலுவலகம் சென்று பார்த்தோம்... எங்கள் பள்ளிக்குழந்தைகள் தானா என மலைத்து வியந்தோம்...ஒலி ஒளியமைப்புடன் அருமையாக வந்துள்ளது...என பேசிக்கொண்டிருந்த போது ...

இருவர் உள்ளே வந்தனர்..அவர்களை தோழர் அறிமுகப்படுத்தி இவர்கள் அந்தியூர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள குழந்தைகளை அழைத்துக்கொண்டு மௌண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான அறிவியல் இயக்கம் நடத்தும் விஞ்ஞானிகள் சந்திப்பு மற்றும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள வந்துள்ளனர் என்றார்....!

ஒரு உதவி செய்ய முடியுமாவெனக்கேட்டு....அமைதியாய் இருந்தார்..என்னிடம் கேட்க சங்கடப்பட்டு தயங்கி வனக்குழந்தைகட்கு செருப்பு வாங்கித்தர இயலுமாவெனக் கேட்டார்...

நல்லா செய்யலாமே என்று கூறியபின், நண்பர் தாமரைச்செல்வனை அறிமுகப்படுத்தி இவர் சப்பானியக்கலையான ஒரிகாமி[பேப்பரில் பொம்மை] செய்வதில் வல்லவர்...உங்கள் பள்ளியில் உள்ள குழந்தைகட்கு நீங்கள் விரும்பினால் அவர் செய்து காட்டுவார் என்றார்..

.தேர்வு நெருங்கும் சமயமென்பதால்...தலைமையாசிரியரிடம் அனுமதி கேட்டபின்  சொல்கின்றேன்என்றேன்...எங்கள் தலைமையாசிரியரும் ஆர்வமுடன் சம்மதிக்க....


இன்று காலையில் 11.30 மணி அளவில் நண்பர் தாமரைச்செல்வன் 6-8 வகுப்புமாணவிகட்குஒரிகாமிக்கலையைக்கற்றுக்கொடுத்தார்..குழந்தைகள் ஆர்வமுடன் பாட்டுப்பாடிக் கற்றுக்கொண்டனர்...

மாலை 3.00மணியளவில் ஆவலுடன் சந்திக்க காத்திருந்த ,அந்தியூருக்கு[வீரப்பன் காடு] அருகில் உள்ள கோங்காடைப்பகுதியைச் சேர்ந்த சோளகர் என்ற அழைக்கப்படும் பழங்குடி இனக்குழந்தைகள் ....சூர்யா,சக்திவேல் ஐந்தாம் வகுப்பு,லெட்சுமி,ரோஜா 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்...வந்தனர்...

எங்கள் பள்ளிக்குழந்தைகளுடன் அவர்களும் கலந்துரையாடினர்.வகுப்பில்பாட்டு பாடியதுடன், எதற்காக இந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பதை தங்களுக்கே உரிய வெள்ளந்தியான பேச்சில் கூறினர்..

”எங்க ஊர்ல மருத்துவ முகாம் நடந்துச்சு அதுல 75% பேருக்கு ரத்த சோகை நோய் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க ...இதுக்கு என்ன காரணம்னு நாங்க கேட்டோம்  சத்துக்குறைவான உணவை உண்பது தான் காரணம்..என்று கூறினர்கள் ..நாங்க முன்பு ஆரியம்[ கேழ்வரகு] தான் சாப்பிடுவோம் ..கீரை சாப்பிடுவோம் ஆனா இப்ப சிறுதானியங்கள பயிர் செய்றத விட்டுட்டு பணப்பயிரான மரவள்ளிக்கிழங்க பயிர் செய்வதால்  எங்களின் பாரம்பரிய உணவை விடுத்து மரவள்ளிக்  கிழங்கை உணவாக உண்ணுவதாலும், அரிசி சோறு உண்ணுவதாலும் தான் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்”

என்றனர் இதற்கு என்ன தீர்வு எனக்கேட்கையில்காடுகள அழிக்காம நிறைய மரங்கள நட்டா மழை வரும் நாங்களும் எங்க பாரம்பரிய உணவான சிறு தானியங்கள பயிர் செஞ்சு சாப்பிடுவோம் என்று மழலை மொழியில் இனிமையாகக்கூறினர்.

காட்டில் யானை பார்த்திருக்கின்றீர்களாவென மாணவிகளின் கேள்விக்கு பார்த்திருக்கின்றோமே நாலஞ்சு பேர கொன்றதையும் பார்த்திருக்கின்றோம் என சாதாரணமாகக்கூறினர்.பள்ளி நேரம் போக காட்டில் தங்களது பயிர்களைக்காட்டு விலங்குகளிடமிருந்து பாதுக்காக்க இரவெல்லாம் சென்று விடுவார்களாம்..8கிமீ வரை நடப்போம் என்று சொன்னதும் எங்கள் பள்ளி மாணவிகள் மலைத்து விட்டனர். தங்கள் கையிலிருந்த பேனா, நோட்டு,திண்பண்டம் வாங்க வைத்திருந்த காசு என அள்ளி கொடுத்து

அவர்களைப்பிரிய மனமின்றி வழியனுப்பிவைத்தனர்..

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  அவர்களுக்கு ஏதும் வாங்கிக்கொடுங்கன்னு பணம் கொடுக்க ,குழந்தைகட்குத்தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு , அவர்களுக்கு காலணிகளை வாங்கிக்கொடுக்கையில், அவர்களின் ஆசிரியரான நித்யானந்தத்திடம் அவர்களுக்கு வீட்டில் இருக்கும் ஆடைகளை வழங்கலாமாவென தயக்கத்துடன் கேட்க அவரோ மேடம் ஆடைதான் முக்கியமா வேணும், அரசு கொடுக்கும் சீருடை ஒரு மாதத்தில்  அவர்களுக்கு கிழிந்து விடும் நான் எப்படி கேட்பதெனத் தயங்கிக்கொண்டிருந்தேன் எனக்கூறியபோது மனம் பிசைந்தது...

ஆசிரியர்கள் மற்றும் தோழமைகள் நான் கேட்ட உடன் தங்கள் வீட்டிலுள்ள  ஆடைகளை  வழங்கி குவித்துவிட்டனர்..

அவர்களுக்கு செல்வா அவர்களின் வீட்டில் விருந்து...அவர்களை இந்த அளவிற்கு முன்னேற்றிய தோழர் நடராஜன் என்பவர்....காட்டில் திரிந்த பள்ளிக்குச்செல்லாத குழந்தைகளுக்கு முறை சாரப்பள்ளி வைத்து[பெரியக்குடிசை தான் பள்ளிக்கூடம்] கல்விகற்றுக்கொடுத்து பின் அவர்களைத் தகுதியான முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதையே நோக்கமாகக்கொண்டு  இதுவரை 210 மாணவர்கள் இவரிடம் பயின்று பின் முறை சார்ந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துக்கொண்டுள்ளனர்...400 குழந்தைகள்  தனது கவனிப்பில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர் என்றும் வாழ்வின் குறிக்கோளாய் 1000 குழந்தைகட்கு கல்வியறிவு கொடுக்க வேண்டுமெனெ என்ணியிருப்பதையும் கூறினார்..இதற்காக அவர் அம்மாவட்ட ஆட்சியரிடம் செய்த முயற்சிகளைக்கேட்ட போது மலைப்பாக இருந்தது.அவர்களோடு மகிழ்வாய் உணவருந்தி பிரிய மனமில்லாத நிலையில் வீடு வந்தேன்...
மலைவாழ் மக்களைப் பற்றி செல்வா  கூறுகையில்  அவர்களிடம் கேரட் வாங்கி உண்டதையும் அதற்காக பணத்தை அவர்கள் வாங்க மறுத்து..பூமி எங்களுக்கு வழங்கியதை நாங்கள் உங்களுக்கு தருகின்றோம். காசு வச்சுகிட்டு என்னா செய்றதுன்னு வாங்க மாட்டோமுன்னு மறுத்து விட்டார்கள் என்றார்....இன்னும் அவர்களால் இயற்கை வாழ்கின்றது...







13 comments:

  1. இப்படியும் சிலர் இருப்பதால்தான்
    எல்லோருக்கும் மழை
    படங்களுடன் சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    சொல்லிச்சிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது... பகிர்வுக்குநன்றி
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மனம் நெகிழ்கிறது. செல்வா, நித்யானந்தம், நடராஜ் அவர்களுக்கும் உங்கள் பள்ளி ஆசிரியர், மாணவர் மாணவியர்ககளுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  4. என்னவொரு அற்புதமான இயற்கை மனது...?

    ReplyDelete
  5. நல்ல மனம் படைத்தவர்கள் உள்ளவரை உலகம் அழிவது தள்ளிப்போகும்.... ஆனால் உதவும் மனப்பான்மை உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவதுதான் வேதனை.
    த.ம.2

    ReplyDelete
  6. ஒரு கோப்பை மனிதம் தேடிய நமக்கு ஒரு பரந்த கடலாய் தெரிகிறார்கள் பசீர் அய்யா, செல்வா சார் முதலான இந்த கட்டுரையின் மனிதாபிமானிகள்!! இனம் இனத்தை செர்ந்திருகிறது!! நல்ல உள்ளங்களை சொன்னேன்:)

    ReplyDelete
  7. மனம் நெகிழ்ந்த பதிவு. ஆனால் மிகவும் நல்ல ஒரு நிகழ்வு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இது போன்ற மலை வாழ் கிராமங்களை வேர்ல்ட் விஷன் (world vision) எனும் ஒரு ஸ்தாபனம் செய்துவந்தது. ஒவ்வொரு மலை வாழ் கிராமத்திலும் உள்ள குழந்தைகளை வசதி படைத்தவர் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்கானப்பள்ளிச் செலவுகளையும், உடைகள் போன்றவற்றிற்கான செலவையும் ஏற்றுக் கொள்ளச் செய்து சிறப்பான சேவை செய்துவருகின்றது. நீங்கள் அந்த ஸ்தாபனத்தையும் கூட அணுகலாமே என்று தோன்றியது. மிக நல்ல ஒரு சேவை.

    ReplyDelete
  8. முகநூலில் படித்தேன் சகோதரி...
    மிக நல்ல சேவை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மனம் நெகிழ்ந்து போனது சகோதரியாரே

    ReplyDelete
  10. மலைவாழ் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவியதில் மகிழ்ச்சி! நல்லபகிர்வு! நன்றி!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் உதவியவர்க்கு/

    ReplyDelete
  12. மனம் நெகிழ வைத்த பதிவு. நல்ல மனம் கொண்ட அவர்களுக்கு எனது வாழ்த்துகள்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...