Thursday 23 October 2014

ஒரு கோப்பை மனிதம்-மதிப்புரை

ஒரு கோப்பை மனிதம்-மதிப்புரை

                                    எனது நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள கவிஞர் வைகறை முகநூலில் அறிமுகமாகிய இனிய தோழர்...நந்தலாலா இணைய இதழ் ஆசிரியர்,கவிஞர்கள் சூழ வாழும் வரம் பெற்றவர்...இவரின் ஆகச்சிறந்த கவிதைகள் இவரை  சிறந்த கவிஞரென உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன.தனது இடைவிடாத பணிச்சூழலிலும் எனது நூலுக்கு மதிப்புரை தந்த தோழமைக்கு என் மனம் நிறைந்த நன்றி....

மதிப்புரையாக.....

காலத்தின் காலடித்தடங்களாய் ஒலிக்கும் வரிகள்..

                          ஒரு கலை எப்போது உண்மையான படைப்பாக முழுமையடைகிறது? அதன் விரல்கள் இயற்கையழகில் மெய் மறக்கையிலேயா? கற்பனை வர்ணனைகளால் அலங்கரிக்கப் படுகையிலேயா? பிரச்சாரப் பேருரைகளாலா? இல்லை. எப்போது ஒரு கலை சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்கிறதோ அப்போதுதான் அது உண்மையான படைப்பாகிறது.



                                        கவிதாயினி மு.கீதா அவர்கள் இக்கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே நிகழ்காலத்தைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறார். அவை பெரும்பாலும் கண்ணீர்த் துளிகளாகவே அமைந்திருப்பது நமது கசப்பான முகத்தைக் காட்டிக் கொடுக்கும் கண்ணாடியாக அமைகின்றன.

                               ‘இலங்கையில தானே நடக்குதுன்னு லேசா நினைச்சீங்க. இதோ சேலம், சென்றாயன் பாளையத்திலும் வேடிக்கை பார்ப்பதேனோ?’ எனும் பூங்கொடியின் கதறலாகவும், இந்த தீபாவளிக்காவது வானவேடிக்கை உண்டா என ஏங்கும் மகனின் கண்முன்னே தானே வெடித்துச் சிதறும் தாயின் வடிவாகவும், எல்லைப் போரில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை வழியனுப்பி வைக்கும் அவரது மகளின் குரலாகவும், முதியோர் இல்லத்து மகனைத் தீண்டவியலாத முதிய தாயொருத்தி தன் வயிற்றைத் தடவிப் பார்ப்பதாகவும், தோட்டிச்சிப் பாட்டிக்காய் பரிந்து பேசும் குழந்தையின் குரலாகவும் ஒலிப்பவை கவிஞரின் குரல்தான்; குமுறல்தான்.
                                 தொடர்வண்டிப் பயணத்தில் பார்த்ததாய் வரிசைப்படுத்தப்படும் காட்சிகளும், மூன்றாம் இனத்தாரின் மேல் கொள்ளும் கரிசனத்திலும், அடுக்குமாடிகளைக் கான்கிரீட் கல்லறைகளாய்க் காணும் கண்களிலும் நிகழ்காலத்தின் பிம்பங்கள் நிழலாடுகின்றன.

                                      மேலும் பலகவிதைகள் நம் பால்யத்தின் புதையல்களாகவும் திகழ்கின்றன. இத்தொகுப்போடு பயணித்துத் திரும்புகையில் நிச்சயம் நம்மில் படிந்திருக்கும் பல கண்ணிர்த்துளிகள்... இவை இக்கவிதைத் தொகுப்பு நமக்குத் தந்தவை என்பதை விட, திருந்த மறுக்கும் நாம் இக்கவிதைகள் வழியே நமக்கு நாமே பரிசளித்தவை. இவற்றை நாம் புரிந்து கொள்வதற்காகத்தான் எழுதப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன் இக்கவிதைகளை.

அன்பு வாழ்த்துக்களுடன்

வைகறை
நந்தலாலா.காம் இணைய இதழாசிரியர்.


        முகநூலில் நுழையும் முன் மிகவும் அச்சத்தோடுதான் காலடி வைத்தேன்...நான் நினைத்தை விட அன்பான உள்ளங்கள் நிறைந்த உலகம் இதுவென உணரவைத்துள்ளது...இதில் சில கலைகளும் உள்ளதென முகநூல் தோழமைகளே அடையாளம் காட்டின...கவிஞர் ஆரா அக்கறையுடன் களையை காட்டி களையெடுக்க அறிவுறித்தினார் .மிக்கநன்றி கவிஞர் ஆராவிற்கு..இன்று வரை தரமான செய்திகளையே தரவேண்டும் ,ஒரு துளி பயனாவது விளைய வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு, எனது முகநூல் இருக்கவேண்டும் என்ற என் விருப்பத்திற்கு ஒத்துழைத்து,பாராட்டி ,விமர்சித்து என் கவிதைகளை பக்குவப்படுத்தி வளர்த்தெடுத்த முகநூல் மற்றும்,வலைப்பூ தோழமைகள் ...

          என் எழுத்து இன்னும் வன்மையாக இருக்க வேண்டும் நெறிப்படுத்திய எட்வின் சார்,எனது வலைப்பூ சிறக்க பயிற்சி அளித்த எங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் அருள்முருகன் மற்றும் கவிஞர் முத்துநிலவன் அய்யா,திண்டுக்கல் தனபாலன் மற்றும் கரந்தை ஜெயக்குமார் ஆகியோர்..

புதுகையில் என்னைவிட என் மீது நம்பிக்கை வைத்து என்னை உயர்வடையச்செய்யும் ஏணிப்படிகளாய் தோழமைகள் சூழ நான் வாழ்வது வரமே....

இவர்களுக்கு எல்லாம் என்ன கைம்மாறு செய்ய முடியும் எனது நூலை இவர்களுக்கு சமர்ப்பிப்பதை விட...

மனம் நெகிழ்ந்து என் அன்பையும் நன்றியையும் காணிக்கையாக்குகின்றேன் அனைவருக்கும்..


9 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ..

      Delete
  4. வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...