Friday 19 September 2014

மொட்டின் துயரமாய்

{ஆனந்த ஜோதி மற்றும் ஆத்ம சங்கமத்தில் வெளியான சிறுகதை}மீள்பதிவு
               

  முதல் பருவத் தேர்வு விடுமுறை கழித்து  பள்ளி துவங்கிய முதல் நாள் ....மாணவிகளைக் காணப் போகும் மகிழ்வில் ஆர்வத்துடன் வகுப்பில் நுழைந்தேன் .மலையேறுபவரைப் போல முதுகில் புத்தக மூட்டையும் ,கையில் சாப்பாட்டுக் கூ டையுமாக தோழிகளைக் காணும் ஆசையில் இங்கும் அங்கும் சிட்டுக்குருவிகளாய் மாணவிகள் ஓடிக்கொண்டிருந்தனர் .என்னைக்கண்டதும் பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்கள் பூவில் அமரும் தேனிக்கள் போல அவரவர் இடத்தை சரணடைந்து சலசலத்துக் கொண்டிருந்தனர் சிற்றோடையாய் ...

                                          டீச்சர் ...டீச்சர் ..விடைத்தாள் தருவீங்களா ?என பிரியா கேட்டதும் ...கோரஸாக பேப்பர் தாங்க ,பேப்பர் தாங்கன்னு டீச்சர்னு ..குரல்கள் ஒலிக்க ...சிரித்துக் கொண்டே ...சரிம்மா தருகிறேன் எனக் கூறி  ஒவ்வொருவராய்  அழைத்து ஆங்கிலப் பாடத்திற்கான விடைத்தாட்களை வழங்கி, தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தேன் .நன்கு படிக்கும் மாணவிகள் ஆசையும் ஆர்வமுமாய் விடைத்தாளை பார்த்துக் கொண்டிருக்க ...
                             அனீஸ் இங்க வா என்றேன் ,ரோஜா நிறத்தில்  பயந்த கண்களும் ,நோஞ்சான் உடம்பும்,எப்போதும் ஒரு வித அச்சத்துடனே யாரிடமும் பழகாது அமைதியாகவே இருக்கும் அவள் தயங்கித் தயங்கி வந்தாள் .மிகவும் குறைந்த  மதிப் பெண்ணே  பெற்றிருந்த அவளை நோக்கி ..ஏன்டா ..எளிய வினாக்களை கூட எழுதல ...ன்னு கேட்டதற்கு அச்சப் பார்வையுடன் கண்ணில் நீர் தளும்ப சிறு பிள்ளையாய் தேம்பி அழத் துவங்க ,சரிம்மா பரவால்ல ..அடுத்த தேர்வுல நல்லா எழுதனும்னு ..முதுகில் தட்டிக் கொடுக்க, கலங்கிய கண்களுடன் பருந்தை கண்ட கோழிக்குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தாள் .எது சொன்னாலும் செய்யாத சில மாணவிகளில் ஒருத்தியாய் அனீசும் இருப்பாள் .இந்த மதிப்பெண்கள் தான் குழந்தைகளை என்ன பாடு படுத்துகின்றது என்ற கவலையுடன் அடுத்த வகுப்பிற்குச் சென்றேன் ...
                                            ஒருநாள் மதியம் மணி அடித்ததும் மாணவிகள் வேகமாக கையைக் கழுவி சாப்பிட அமர்ந்து டிபன் பாக்ஸை திறந்து கொண்டிருந்தனர் .வகுப்பில் நோட்டுகளை திருத்தி முடித்து நான் செல்லும் வழியில் ,வட்டமாக சாப்பிடுவதற்கு அமர்ந்திருந்த மாணவிகளைக் கண்டதும் ...என் பள்ளி நாட்களின் பசுமையான நினைவுகள் வந்தது .மெதுவாக மாணவிகளிடம் ...டேய் ,நானும் உங்களோட சேர்ந்து சாப்பிடலாமான்னு கேட்டதும் நம்ப முடியாமல் அனீசின் பெரிய கண்கள் தாமரைப் பூவாய் மேலும் விரிந்தது . நி..ச..மா..வா.. டீச்சர் ..நம்ம கூட உட்கார்ந்து சாப்பிடுவாங்களா ? தயக்கமும் ஆர்வமுமாய் எனைப் பார்த்து ..வாங்க டீச்சர் என சந்தோசமாய்க் கையைப் பிடித்திழுத்தாள் ..சிரித்துக் கொண்டே சும்மாத்தான்மா கேட்டேன்னு சொல்லிவிட்டு ஆசிரியர் அறைக்கு வந்தேன் மனதில்  ஏக்கத்துடன் ...
                                       அன்று மாணவிகளின் செயல்பாடுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கிக் கொண்டிருந்தேன் .அனீஸ் தயக்கத்துடன் அருகில் ...என்ன என்ற என் பார்வைக்கு ஒரு சார்ட்டில் கிறுக்கலாய் எழுதி என்னிடம் காட்டலாமா ?வேண்டாமா ?என்ற சந்தேகத்தில் ஒரு வழியாய் காட்டினாள் .மனதில் மகிழ்வு பொங்க.. அடேடே பாருங்கடா ...அனீஸ் அழகாக எழுதிருக்கா எல்லோரும் கை தட்டுங்கன்னு சொன்னதும் முதல்முதலாய் அவள் முகத்தில் அச்சம் மறைந்து மகிழ்ச்சி மலர்ந்தது.ஒரு துள்ளலுடன் அவள் இடத்தில் அமர, அவள் பக்கத்துல இருந்த மகாலெட்சுமி பாத்தியா ...நான் சொன்னேன்ல டீச்சர் பாராட்டுவாங்கன்னு....நீ காட்டுறதுக்கு பயந்தியேன்னு அவளிடம் கூறிக்கொண்டிருந்ததை மெல்ல சிரித்தபடி கேட்டுக்கொண்டு என் பணியை தொடர்ந்தேன்.
                       பூ மலர்வது போல அனீஸிடம் இருந்த அச்சம் சூரியனைக் கண்ட பனியாய் விலகியது...மற்ற மாணவிகள் போல் இயல்பாக பழக ஆரம்பித்தாள்.படிப்பிலும் ஆர்வம் காட்டினாள்.மாணவிகளுக்கான ஸ்மார்ட் கார்டு படிவம் முடிக்க வேண்டும் என்பதாலும்,அதிக வேலை காரணமாக  தலைவலியும் சேர மாணவிகளிடம் பேசாமல் எழுதிக்கொண்டு இருந்தேன்.ஏதோ உறுத்த நிமிர்ந்து பார்த்தால் அனீஸ் என்னையே பார்த்துக் கொண்டு...என்னடா என்றேன்...
                    டீச்சர் நீங்க எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க...ஆனா இன்று உடம்புக்கு முடியலயான்னு அக்கறையுடன் கேட்ட போது மனம் நெகிழ்ந்து,எவ்ளோ கவனிக்கிறான்னு மனதில் வியந்து...ஆமாண்டா...சரியாகிடும் நீ போய் எழுதுடா என்றேன்.கட்டாயம் மாத்திரை போடுங்க டீச்சர்னு எனக்கு அறிவுரை வழங்கியது அந்த பிஞ்சு மனம்...அவள் மற்றவர்களிடம் பழகும் முறை ..படிப்பில் ..செயல்பாடுகளில் முன்னேற்றம் அவளிடம் ஏற்பட்டுள்ளதை அறிந்தேன்.இரண்டாம் பருவத்தேர்விலும் ஓரளவு மதிப்பெண்கள் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டி பாராட்டியவுடன்மனதில் மகிழ்ச்சி பொங்க குதூகலமாய் இருந்தாள்.

                            மாணவிகளிடம் நாளை மிலாடிநபி..எனவே பள்ளி.... என்றதும் லீவுன்னு ஒரே சத்தம் .ஆனா அதைத் தொடர்ந்து வரும் குடியரசு தின விழாவிற்கு அவசியம் பள்ளிக்கு வந்திடனும் சரியான்னதும் வேகமாய் தலையாட்டி மூன்று நாள் விடுமுறை கிடைத்த மகிழ்வில் மாணவிகள் உற்சாகமாய் பறந்தனர்.அனீஸும்...என்னைப் பார்த்துக் கொண்டே ஓடினாள்.
           பள்ளியில் குடியரசு தினம் வழக்கம் போல் கொடியேற்றி விட்டு மாணவிகள் நடனம் ஆடிக் கொண்டிருக்க ...ஏழாம் வகுப்பு மாணவி நாகமணி என்னை பார்த்து ஏதோ சொல்ல ஓடி வந்தாள் டீச்சர்...டீச்சர்.. என்னம்மா என்ற என் கேள்விக்கு அவளின் பதிலைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்
...                                         மிலாடி நபி ..நபிகள் நாயகம் பிறந்த நாள்...அனைத்து பள்ளிவாசலிலும் சிறப்புத்தொழுகை .அனைவரும் மகிழ்வுடன் விழா செய்திகளை பரிமாறிக் கொண்டு,புத்தாடை அணிந்து தொழுக வந்து கொண்டு இருந்தனர்.அன்று அனைவருக்கும் பிரார்தனை செய்து தரப்படும் கந்திரியானம்(கறிக்குழம்பு}மணக்கும் வாசனையுடன் பெரிய பாத்திரத்தில்தயாராகிக் கொண்டு இருந்தது.அதை வாங்கிச் சென்று  அனைவரும் அண்ணல் நபிகளின் பிறந்த நாளை மகிழ்வுடன் உண்டு முடிப்பர்.                               அனீஸின் அம்மாவும் அனீஸும் விழாவைக் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர்.அனீஸ்,தன் அம்மாவிடம் இப்போதெல்லாம் பள்ளியைப் பற்றி அதிகம் பேசுகிறாள்   ....என அவள் அம்மா என்னைச் சந்திக்கையில் கூறியதுண்டு.ஊருக்குச் சென்ற போதும் அனீஸின் நினைவுகள் பள்ளியிலேயே இருந்துள்ளது..குழந்தைகள் அனைவரும் உற்சாகமாய் பள்ளிவாசலில் விளையாடிக்கொண்டிருக்க ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஆட்டமிட அனீஸும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை கவனித்துக் கொண்டே அவளின் தாயார் தனது அக்காவிடம் வா அந்த மரத்தடியில் உட்கார்ந்து பேசலாம் என்று சொல்லிக்கொண்டே அமர...மாலைச்சூரியன் தன் பணி முடித்து உறங்கச் செல்ல நிலவுத்தாய் இருட்டு கள்வனை விரட்டி பூமிக் குழந்தைகளை   உறங்க வைக்க தகதகவென பொன்னிறமாய் கிளம்பினாள்.... திடீரென பள்ளிவாசலில் பளீரிட்ட விளக்குகள் இருளில் மூழ்க, பயந்த குழந்தைகள் இங்குமங்கும் அலைமோதின...அமைதியை கிழித்து கிலை நடுங்கும்படி காப்பாத்துங்கன்னு ஒரு ஓலம்...துடிதுடிக்கும் குழந்தையின் ஓலம் கேட்டு அனைவரும் எங்கிருந்து வருகிறதென தெரியாமல் அனைவரும் அலைபாய  .....கண்ட காட்சி ...யோ....எப்படி தடுமாறி விழுந்திருப்பாள்...காண்பது கனவா நனவான்னு செய்வதறியாது அனைவரும் பதறித்துடிக்கும் படி கந்திரியானச்சட்டியில் உடல் மூழ்கி தலையும் கால்களும் வெளியே துடிக்க.....அய்யோ.....அய்யோ மகளே என அனீஸின் அம்மா கதற...கொதிக்க கொதிக்க மூடி வைத்த குழம்பு சட்டியில் வெந்த அவளை தூக்கி அள்ளி எடுத்து மடியில் போட தாயின் கதறிய முகத்தை பார்த்து அ..ழா..தீ..ங்..கம்மான்னு கூறிய நொடியில் அனீஸின் தலைதொங்கியது.......

மொட்டு ஒன்று விரியாமலே கருகி விட்ட துயரம்.......


இதை முடிக்க முடியாமல் மனம் கதறுகின்றது.இப்போதும் என் மேசையில் அவளின் புகைப்படம் அவளின் நினைவுகளைக் கூறிக்கொண்டு....அவளுக்கான சாதிச்சான்றிதழ் வந்துள்ளது வாங்க அவள் தான் இல்லை.என்னுள் உறைந்து விட்டாள்.நான் இறக்கும் வரை அவள் என்னுடனே.....நினைவுகளாய்..
.வரப்போகும் குடியரசு தினம் அவளின் ஓராண்டு நினைவுநாள் ....இது என் கதை எழுதும் திறமைக்காட்ட அல்ல...என் மனச்சுமையை இறக்கி வைக்க...

2 comments:

  1. உண்மையில் கண்கலங்கிவிட்டேன்... இனி எச்சரிக்கையோடு...

    ReplyDelete
  2. ஹையோ.....!எதிர் பாக்கலை இந்த முடிவை...நானும் ஆசிரியை என்பதால் உங்கள் அனுபவம் என்னோடதாகவே உணர்ந்து மகிழ்ந்து கொண்டே....ஆனா கடைசியா...அனீஸ்....ரொம்பவே கலங்கடித்து விட்டாள்...!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...