பெயரிடாத நட்சத்திரங்கள்
ஊடறு +விடியல் வெளியீடு
ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல்
-------------------------------------------------------------------------
”பெண்ணின்
அழகு ,அன்பு,தாய்மையென
கடிவாளமிட்ட குதிரையென
கவிதைகளின் பாதையில்...
பெண்ணின்
அறிவு,வீரம்,தெளிவு,அரசியல்
போற்றும் கவிதைகள் காணாமல்
கலைந்தோடுகின்றேன்
பாலை நிலத்தின்
சுழல் காற்றாய்... ”
என்ற என் கவிதைத் தேடலின் முத்தாய் கிடைத்த புதையல் இந்நூல்.
சமையல் ,குழந்தை ,குடும்பம் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழலும் சராசரி பெண்ணின் வாழ்வியல் அல்ல இது.
வேலுநாச்சியும்,குயிலியும் விதையாய் விதைத்து எழுந்த வீரியப்பெண்கள்.
தாய்நாட்டைக் காக்க போர்க்களம் கண்ட வீரப்பெண்கள்.களத்தில் கண்டதை கவிதையாய் வடித்து ஆவணப்படுத்தியுள்ளனர் ஈழப்பெண்போராளிகள்
26 கவிஞைகளின் 70கவிதைகளைக் கொண்ட ஆவண நூல்.
பெண்ணின் வீரியத்தை ,தன்னம்பிக்கையை,பாசத்தை,காதலை,போரடி இழந்து தவிக்கின்ற வாழ்க்கையை இன்னுமின்னும் என என்னை இழுத்து ஈழநாட்டில் தூக்கிப் போட்டக்கவிதைகள் இவை.
இது உயிரின் வலி,தாய் நாட்டை மீட்கப்போராடிய பெண் போராளிகளின் அறைக்கூவல்,இதை கடந்து நம் மனம் போக முடியாதபடி நம்மை உள்ளிழுக்கும் ஆவணச் சிதறல்கள்.தமிழ் இனத்தின் வாதை.நம் சகோதரிகளின் துன்பம்.சிதைத்து அழிக்கப்பட்ட தமிழினச் சகோதரிகளின் சில கவிதைகள்,இந்தியாவையும்,தமிழரையும் குறை கூறுவதை மறுக்க இயலாது.நம்மீது நாமே ஏற்படுத்திக் கொண்டக் கறையை வெட்ட வெளிச்சமாக்குகின்றன சில கவிதைகள்.
போரில் ஆணை விட பெண்களுக்கே உடல் சார்ந்த பாதிப்பு அதிகமென்பதை கூறுகின்ற கவிதைகள்சில.
ஒவ்வொரு கவிதையும் ஒரு விருட்சத்தை தன்னுள் அடக்கிய விதையாய்,தன்னம்பிக்கையின் ஊற்றாய்த் திகழ்கின்றது.அவர்களது வீரம் நிறைந்த தன்னம்பிக்கயைக் காட்டும் கவிதையில் ஒன்றாய்...
மலைமகள் கவிதை
--------------------------------
அவள் ஒன்றுக்கும் அசையாள்
மழைக்காலத்தில் எதிரியை நோக்கும் அவள்
” சாக்குத் தொப்பியில்
மழைநீர் ஊறி
தலையெல்லாம் கனக்க
கருவியோடு தானும்
நனைந்தே
குளிரில் பல்கிடுக்க
மரத்தின் மறைவிலிருந்தே
பகைத்தளம் நோக்கி தன்
விழிவிரித்த வீரி ஒருத்தி
சற்றும் அசைந்தாளில்லை
மழை வெள்ளமென
பகைவெள்ளம் வந்தாலும்
அவள் அசையாள் வெல்வாள்”
இக்கவிதையில் கிழிந்த தன் காற்சட்டையை தைக்கும் ஒரு பெண்போராளி
கொட்டும் மழையைப் பார்த்து
” வானமும் பீத்தலாய் போய்ச்சுது
இது முடிய அதையும் நான்
பொத்தி தைக்கப் போறன்”
கூறுகிறாள் .எப்படி சொல்வது அவளது வீரத்தை...?
அம்புலியின் கவிதையில் வெளிப்படும் விதமாய்
” கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி
எல்லை வேலியில்
நெருப்பேந்துகிறது என் இதயம்
ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான
என் காவலிலிருந்து....
நாளையும் நான் வாழவேண்டும்....”
என்பதில் மிளிறும் தன்னம்பிக்கை அளவிட முடியாதது.மேலும்
நான் எப்போதும் மரணிக்கவில்லை -என்ற கவிதையில்
” யுத்தம் எனக்கு பிடிக்கவில்லை
குண்டுமழைக்குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடைக் கலந்த சுவாசிப்புகளில்
வெறுப்படைகிறேன்”
என்பது யுத்தம் அவர்களுக்கு திணிக்கப்பட்ட ஒன்றானதை உணர முடிகின்றது.
அவர்களின் வன்மையிலும் மென்மையைக் காட்டும் கவிதையொன்று
அவளின் இயல்பான ஆசையைக் கூறுவதாய்
” ஒரு வண்னத்துப்பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாகத்
தாலாட்டவும்
என்னால் முடியும்”
என்பது அவசரமாக ஓடும் நாட்களில் நாம் கவனிக்க மறந்த ,சின்னச்சின்ன மகிழ்வுகளுக்காய் ஏங்கும் மனதை உணர வைக்கின்றார்.
மேலும் அவரது கவிதைகளில்
சிதைக்கப்பட்ட பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தையின் ஆசையாய் ,தந்தையும்,சமூகமும் தன்னை ஏற்காத நிலையிலும் ,உவகையுள்ள உலகைக் காண விழைகின்றதாகவும்,குழந்தைக்கு அத்தகைய இனிமையான உலகை காட்ட வியலாத தாய்மையின் தவிப்பையும் உணர வைக்கின்றார்.
நாமகளின் யதார்த்தம் கவிதையில்
”ஈழத்தின் ஒரு நாள் காட்சியாய் டீ குடிக்கும் ஒருவன் முன் விழும் ஷெல் அவனை துண்டுதுண்டாக சிதறுகின்றது.அதுவரை மண்ணெண்ணெய்காய் நீண்டு நிற்கும் வரிசை சட்டென்று கலைந்து அவனை அம்புலன்ஸ் கொண்டு சென்ற அடுத்த நொடியில் மீண்டும் இயல்பாய் எதுவுமே நிகழாத மாதிரி வரிசை எனக் கூறுகையில் ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்க்கை போராட்டமாகவே உள்ளதைக் காட்சிப்படுத்துகின்றது.”
காதல் அவர்களுக்கும் முகிழ்க்கும் என்பதை காதலின் புதிய பரிணாமம் என்ற கவிதையில் முகாம்களில்
” எப்போதாவது தெருவில்
அவசர இயக்கத்தில்
கண்டுவிட நேர்கையில்
சந்திப்பை வரவேற்பதாய் அவன்
கண்கள் ஒருமுறை விரியும்
மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும்
அவனுக்குத் தெரியும்
எனக்கு அது போதுமென்று”
போராளிகளிக்குள் உள்ள காதலையும் அதையும் தாண்டி அவர்களின் நோக்கமாய் தாய்நாட்டு வெற்றியையும் காண்கையில், திரைப்படம் நோக்கி ஓடும் நம் இளைய சமுதாயத்தை எண்ணி நாண வைக்கின்றது.
சில கவிதைகளில் பெண்ணியச் சார்பு இருப்பதையும் உணர முடிகின்றது.
மலைமகளின் அம்மா கவிதையில்
தனக்குள் உள்ள எரிமலையான போர்க்குணத்திற்கு காரணம் என்ன என அறியும் வேளையில்....தன் அம்மாவை எண்ணி
”ஒரு வேளை அவள்
ஒடுக்கப்பட்ட ஒவ்வொருமுறையும்
அடக்கி வைத்த ஆத்திரம் தான்
என்னிலிருந்து
பெரும் பொறியாய் எழுகிறதோ”
என்பதும் தமிழவளின் -”புரிந்துணர்வே அடித்தளமாய்”கவிதையில்
” பெண்மையே பேதமை என
வரன்முறை வகுத்தவர்
வாழ்ந்திட வழிதரார்
வழியை நீயே செய்
ஆணும் பெண்ணும்
உலகின் இயக்கம்
புரிந்து கொள்”
என்பதில் பெரியாரின்
” பூனையிடமிருந்து எலிக்கு விடுதலைஎப்போதும் கிடைக்காது .உன் விடுதலையை நீயே எடுத்துக் கொள்”
என்ற கூற்று வெளிப்படுவதை உணரலாம்.
மன்னம் பெரி,கிருஷாந்தி என்ற பள்ளிக்கூட மாணவி, அழகிய ரஜனி இவர்களின் அழகே இவர்களின் உயிருக்கு எமனாய் மாறி அவர்களின் வாழ்க்கை சிதைத்து சீரழிக்கப்பட்ட காட்சிதனை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன இவர்களின் கவிதைகள்.
” இடப்பெயர்வு,இன அழிப்பு
சீதனம்,அவலவாழ்வு
யாவும் துரத்தியதால்
உலகத் திசையெங்கும் பரந்த
பிள்ளைகளின் பிள்ளைகள்
ஈழத்து அகதி என்ற
அவலம் சுமந்த வாழ்வு
அழிந்தொழிந்து
ஈழத்து மானுடர் என்ற மதிப்போடு
உலகெல்லாம் வலம் வருவோம்”
என்ற நம்பிக்கை மிளிறும் கவிதையுடன்
ஆதிலெட்சுமியின் -
”உங்களுக்காய் நான் உருகித் துடிக்கிறேன்”என்ற கவிதையில் ருவாண்டாவில் நடக்கும் கொடுமையைக் கண்டு பொங்கிச் சீறும் கவிதையாய்
”மொழி வேறு என்றாலும்
எங்களுக்கும் உங்களுக்கும்
மூச்சு ஒன்று”
என்பது அவர்களின் பரந்து பட்ட பார்வையை உணர முடிகின்றது.அதுமட்டுமின்றி நமது கடுகு உள்ளத்தையும் சுட்டி அறைகின்றது.
”ஏறி மிதிக்கும் கால்களை உதறி
நான் எழுவேன்
வல்லவன் தான் வாழ்வானெனில்
நானும் வல்லமை பெறுவேன்
என்னவர்களை அடைவேன்
இறைமைகளுக்காய்
ஊழியென எழுவேன்”
என்ற ஆதிலெட்சுமியின் வரிகள் ஓங்கி ஒலிக்கும் பெண்களின் குரலாய் அமைகின்றது.
முடிவுரை
முடிந்து போன கதை எதற்கு?,அந்நிய நாட்டு கவலை நமக்கு ஏன்?என ஒதுக்கித் தள்ள முடியாது.அழிந்தது நம் இனம், தமிழினம்.ஆனால் நாம் செய்தியாய் செரித்து பொருளற்ற வாழ்க்கை வாழ்கின்றோம்.அவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளது.எத்தனை பேர் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவோம் என்ற தன்னம்பிக்கையின் ஊற்றாய்,தாய் நாட்டிற்காய் தன்னையே தந்த பெண் போராளிகளின் அதிர்வலைகள் இக்கவிதைகள்.
ஒரு சாதாரண தமிழ் நாட்டு பெண்ணிடம் காண இயலாத வீரியம்,அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஆதித்தாயின் வீரம் இப்போராளிகளிடம் வெளிப்படுவதைக் காண முடிகின்றது.
தாய் நாட்டின் மீதும் ,தாய் மொழி மீதும் பற்று வைப்பவர்களை விமர்சிக்கும் தமிழனின் இன்றைய நாகரீகம் ,
எத்தனை சுதந்திரமாய்,கவலையின்றி நாம் வாழ்கின்றோம்,நம் சோதர சோதரிகளின் கன்ணீர் துடைக்க ஏன் மனமின்றி ஈன வாழ்வு வாழ்கின்றோம் என சுய பரிசோதனைக்குள்ளாக்குகின்றது இந்நூல்.
ஈழத்து இன்னல்களை எடுத்துரைக்கும் நெஞ்சை பிழிய வைக்கும் அருமையான பதிவு. நன்றி! வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதன்னம்பிக்கை, வீரம், ஆசை, யதார்த்தம் என் அனைத்து கவிதையும் அருமை...
ReplyDeleteஉண்மையான சிறப்பான போராளி...
புத்தகம் வேண்டும் கீதா..அலைபேசியில் அழைக்கிறேன்
ReplyDeleteமிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். நம் தமிழ்நாட்டுப் பெண் கவிஞர்களின் பெரும்பாலான நூற்கள், நிறைவேறாத காம இச்சையைப் பற்றியும் , தம் உடல் உறுப்பு வர்ணனை களை வெளியிடுவதாகவுமே இருக்கின்றன . சர்வதேசிய மகளிர் பிரச்சினைகள் இவர்களுக்குப் பாகற்காய்.
ReplyDeleteஅப்படியே சுட்டு வீதி தளத்தில் சேர்த்து விடலாமா?
ReplyDeletehttp://www.malartharu.org/2013/02/blog-post_7031.html