Tuesday 11 March 2014

எது கல்வி

அன்புள்ள அம்மா,
பிரியமான உன் அண்மையை
பிரியாது அப்பாவின் கரம் கோர்க்கும் ஆசையை
அண்ணனுடன் வம்பு செய்யும் மகிழ்வை
தாத்தாவின் பழம் பெருமைச் சொற்களை
பாட்டியின் மடி சுகத்தை
எனக்காக நீ செய்யும் பண்டங்களை
என் சிறுவயது விளையாட்டுக்களை
எப்போதும் இணைபிரியா நண்பனை
ஊரில் நடந்த விழாக்களை
எல்லாவற்றையும் இழந்தேன்மா
எதற்காக.....?

நீங்கள் விரும்பியதால்
நானும் ஆசைப்பட்ட படிப்பை
படிக்க முடியாதம்மா இனி
இயற்பியல் பாடத்தில்
இல்லைம்மா முழுமதிப்பெண்..

மாட்டுப்பண்ணையை விட கொடுமைம்மா
மாணவப்பண்ணை...
அசைபோட்டதெல்லாம் வீணானதை
தாங்க இயலாமல் போகின்றேன்மா..

எல்லா மாணவர்களின் துயரங்களின்
எல்லையாய் ..சாட்சியாய்...

தொண்டை சுருக்கு
குரல்வளையை இறுக்கும் போதும்...
என் கைகளும் கால்களும் துடிதுடித்து
வலியுடன் உயிர் பிரியும் போதும்
உன் நினைவோடே சாகின்றேன்மா...



நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுச் சாவு

நாமக்கல்லிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் அருகேயுள்ள கொசவம்பாளையத்தைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜெயம்மாள். இவர் ராமாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை.
 இவர்களது இரண்டாவது மகன் மயில்விழிச்செல்வன் (17). நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 2 கணிதப் பிரிவில் படித்து வந்தார். பள்ளிக்கு அருகே உள்ள வாடகை வீட்டில் மயில்விழிச்செல்வன் பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், மயில்விழிச்செல்வன் திங்கள்கிழமை பிளஸ் 2 இயற்பியல் பொதுத் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். தேர்வு முடிந்து பிற்பகல் 1.15 மணிக்கு வீட்டுக்கு வந்த மயில்விழிச்செல்வன், உள்புறமாக தாழிட்டுக் கொண்டு தனது தாயின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் ஜன்னல் திறக்கப்பட்ட நிலையில் இருந்ததால், வெளியே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர்கள், மாணவர் தூக்கிட்டதை அறிந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் மயில்விழிச்செல்வனின் உயிர் பிரிந்துவிட்டது.
 தகவலறிந்த நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் பாஸ்கரன், முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலைக் கைப்பற்றி வீட்டில் சோதனையிட்டனர். அப்போது மாணவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், நன்றாகப் படிக்க முடியாத காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ராமமூர்த்தி, ஜெயம்மாள் தம்பதியினர் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
 பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மூன்றாவது சம்பவம்
 நாமக்கல் காவெட்டிப்பட்டி தனியார் பள்ளி மாணவர்களைப் பொருத்தவரையில், மயில்விழிச்செல்வனின் தற்கொலை நிகழ் கல்வியாண்டில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவமாகும்.
 இதற்கு முன்பு சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் மோகன்ராஜ், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு அந்தப் பள்ளி விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வெங்கடேசன், ஜனவரி 4ஆம் தேதி காலை பள்ளி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 மாணவர் மோகன்ராஜ் இறந்த சம்பவத்தில் அந்தப் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், சக மாணவர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலும் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், இரு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.









 












4 comments:

  1. வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்காத,
    வாழ்வியல் துன்பங்களை எதிர்கொள்வதற்னான துணிச்சலைக் கொடுக்காத க்ல்வி முறையாக நம் கல்வி முறை மாறி வெகு காலமாகிவிட்டது.
    தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வி நிறுவனங்களுக்குள் போட்டி, ஆனால் பலியாவதென்னவோ மாணவர்கள்தான்

    ReplyDelete
  2. கோழிப்பண்ணை போல் ஆகி விட்டது...

    தவறு முதலில் பெற்றோர்களிடம் உள்ளது...

    கல்வி என்பது சேவை என்பது எப்போது வருமோ...?

    ReplyDelete
  3. போட்டிகள் நிறைந்த உலகில் தனது குழந்தைகள் வாழ வேண்டும் என்ற சமூக அழுத்தத்தில் பெற்றோர் செய்யும் இந்தத் தவறு அவர்களுக்கு எப்படி ஒரு கொடூர தண்டனையைத் தருகிறது என்பது நெஞ்சை அழுதும் சோகம்...

    மாணவர்களை மனிதர்களாக்காது மார்க் மெஷின் ஆக்குவதால் எழும் பிரச்னை...

    எல்லாம் மாறும் என்பதே நம்பிக்கை ...
    நம்புவோம்..

    ReplyDelete
  4. மனசுவலிக்குதது நம்ம பிள்ளைகள்கிட்ட எந்ததிறமை வெகுவாக இருக்குதுன்னு பார்த்துஅதில்அவர்களை பிரகாசிக்கச் செய்வதே பெற்றோரின்கடமை அதைவிடுத்துஅந்தப்புள்ளமாதிரி மார்க்கெடு.............ப்ச பகிர்விற்குநன்றி தோழி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...