Sunday, 16 February 2014

பால்யங்களின் புதையல்கள்

கறம்பக்குடி த.மு.எ.க.ச நடத்திய கவிதைப்பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.மிகவும் மனதிற்கு இனிய நிகழ்வுகளாக அனைத்தும்.இதற்கு காரணமான ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் மற்றும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
அங்கு வைக்கப்பட்டிருந்த கவிதைகளை காட்சிகளாக வண்ண ஓவியங்களை படைத்த மாணவி காது கேளாத,வாய் பேசமுடியாத ஆங்கில இலக்கியம் பயிலும் கல்லூரி மாணவி என்று அறிந்ததும் கலங்காமல் இருக்க முடியவில்லை.அவளின் ஓவியங்கள் அனைத்தும் பேசின.முத்தாய்பென அமைந்தது சுழலும் கவியரங்கம் அருமை அருமை...
என் சிறிய பங்களிப்பாய்...



கவிதையொன்று......
 

இழந்த உறவுகளின்
இருப்பென
நினைவு சின்னங்களாய்..

இருக்கும் உயிர்களின்
இறந்த காலத்தை உணர்த்தும்
பொக்கிஷங்கள்...
மகிழ்வான தருணங்களை
கூறாமல் கூறும்..

முதன்முதலில்
 அணிந்த ஆடை
நடந்த நடைவண்டி
குடித்த பால்புட்டி
இப்போதும் விளையாடக்
காத்திருக்கும் நாய் பொம்மையும்
சொப்புச்சாமான்களும்...குழந்தைமையை
பறைசாற்றி மீண்டும்
 குழந்தையாகத்துண்டும்...

மரப்பாச்சியின் உடைந்தகை
மறைந்துவிட்ட அண்ணனுடன்
ஆக்ரோஷமாய்சண்டையிட்டு
 உடைத்த காலத்திற்குள்
சட்டென்று எனை இழுக்க..

அத்தை மகளுடன்
அடித்துப்பிடித்து வம்பாய்
பெற்ற வெற்றியைக்கூறும்
புழுதி படிந்த பல்லாங்குழி...

கனவிலும் கொத்தி மிரட்டிய
பாம்பினை நினைவூட்டும்
நைந்த பரமபதம்...

விடுமுறையில்
மாமா வீட்டிலிருந்து
அம்மாவிற்கு எழுதிய
மடலொன்று கிழிந்த நிலையில்
மறைந்துவிட்ட அம்மாவின்
நாட்குறிப்பில் பாதுகாப்பாய்...

எத்தனையோ எத்தனையோ
மனக்குழியில் புதைந்தவைகளை
மீட்டெடுக்கின்றன
பழையகுப்பைகளான
பால்யங்களின் புதையல்கள் ...


14 comments:

  1. நினைவுகளை மீட்டிப் பார்த்து மீண்டும் வாழ்ந்திட ஆசை குழந்தையாய் இல்லையா.
    வாழ்த்துக்கள் தோழி....!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி.வாய்ப்பில்லையே என்ற வருத்தம்.நன்றிம்மா

      Delete
  2. வணக்கம்
    நல்ல முயற்சி...... கவிதை மனதை நெருடியது... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.உடனுக்குடன் உங்களின் டிடி சாரின் பதிவை பார்க்கையில் மேலும் எழுதத் தோன்றுகிறது.

      Delete
  3. இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நினைவடுக்குகளில் சில...நன்றி சார்

      Delete
  4. ---//எத்தனையோ எத்தனையோ
    மனக்குழியில் புதைந்தவைகளை
    மீட்டெடுக்கின்றன
    பழையகுப்பைகளான
    பால்யங்களின் புதையல்கள் ...///
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.அரியலுர் போகும் போது உங்களை பார்க்க நினைத்தேன் ,வாய்ப்பிருப்பின் வருகின்றேன்.

      Delete
  5. கவிதை அருமை...
    நீங்கள் வாசித்ததும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.உங்கள் மாணவி பரிசு வாங்கிய கவிதை படிக்க வேண்டும் .நல்ல முயற்சி உங்களுடையது.வாழ்த்துக்கள் சார்

      Delete
  6. மரப்பாச்சியின் உடைந்தகை
    மறைந்துவிட்ட அண்ணனுடன்
    ஆக்ரோஷமாய்சண்டையிட்டு
    உடைத்த காலத்திற்குள்
    சட்டென்று எனை இழுக்க..- உங்கள் கவிதையைக் கேட்க முடியாமல் கிளம்ப வேண்டியிருந்ததற்கு வருந்தினேன். “மரப்பாச்சியின் உடைந்தகை
    மறைந்துவிட்ட அண்ணனுடன்
    ஆக்ரோஷமாய்சண்டையிட்டு
    உடைத்த காலத்திற்குள்
    சட்டென்று எனை இழுக்க..“ எங்களையும் அவரவர் பால்யத்திற்கு இழுத்துச் சென்ற கவிதை அருமை கஸ்தூரி சொன்னது போல நன்றாகவும் அழுத்தம் திருத்தமான உச்சரிப்போடு நீங்கள் வாசிப்பதுபோலப் படித்துப் பார்த்தேன். இன்னும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...