Monday, 15 October 2018

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018
இரண்டு வருடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் புத்தகத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 முதல் டிசம்பர் 3 தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.சென்ற ஆண்டு
பத்து லட்சம் பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று புத்தகங்கள் வாங்கும் வகையில் உண்டியல்கள் வழங்கி கிராமப் புற மாணவர்களும் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.
சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஆகச் சிறந்த பேச்சாளர்கள் சிறந்த சொற்பொழிவாற்றினார்கள்.
இந்த வருடமும் அதிக மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இந்த அறிவுத்திருவிழாவிற்கு  அளிக்கும் முக்கியத்துவமே சமுதாயத்தை அறிவின் பாதையில் பயணிக்க செய்யும்.
புதுக்கோட்டை கணினி தமிழ்ச் சங்கம் மற்றும் வீதி கலை இலக்கியக் களம் சார்பில் ரூபாய் 50,000 தருவதாக உறுதி அளித்து உள்ளோம்.
ஊர்கூடித் தேரிழுக்க விரும்பும் இவ்விழாவில் உங்கள் கரங்களும் இணைய வேண்டுகிறோம்.
முதல் கரமாக தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள்₹1000 நிதி அளித்து இணைந்துள்ளார்கள்....
சமுதாய மேம்பாடே நமது வருங்கால சந்ததிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய கடமை.
உதவும் கரங்கள் இணைந்திட
கவிஞர் முத்துநிலவன்-9443193293 மு.கீதா 9659247363.


Monday, 1 October 2018

பரியேறும் பெருமாள் -திரைவிமர்சனம்

பரியேறும் பெருமாள் .
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைக் கூறும் துன்பியல் கவிதை .
கறுப்பி ரயிலின் முன் அடிபட்டு சிதறும் காட்சியில் துவங்கும் படம் நமது ஆதிக்க மனதையும் அடித்து நொறுக்கி கலங்க வைக்கிறது என்றால் மிகையில்லை .ஏன் சிகப்பி தண்டவாளத்தில் கட்டிவைக்கப்பட்டாள்என்பதை குறியீடாக துவங்கி இறுதியில் இரட்டைக்குவளைகளில் குறியீடாக முடிக்கும் இயக்குனர் படத்தில் வாழ்ந்திருக்கிறார் .

தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைக் கண்டு பயப்படும் நிலையும் ,ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தமிழைக் கண்டு பயப்படும் நிலை மிக யதார்த்தம் .

மாணவர்களுக்குள் சாதீயத்தை புகுத்துபவர்கள் வெறி பிடித்த மிருகத்தை விடக் கொடுமையானவர்கள் .
மூத்திரத்தைக் குடின்னு சாதாரணமாக திட்டுவதைக் கேட்டதுண்டு ஆனால் அதை அனுபவிக்கும் கொடுமையை உணர வைத்துள்ளார் கதிர் மிக அற்புதமான நடிப்பால் .

எல்லோரையும் இயல்பாகக் காட்டும் இயக்குனர் கதாநாயகியாக வருபவர் சிகப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை என்ன சொல்வது .தாழ்ந்தவர்களை விட தாழ்ந்து இருக்கும் பெண்கள் குறித்த பார்வை மாறுவது எப்போது ?
கருப்பு அழகு என்று திரைப்படங்கள் உண்மையைக் காட்டுவது எப்போது ?

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆதிக்கவாதிகளின் மனதில் படிந்திருக்கும் மனநிலையை ,அதை உடைத்தெறியத் துடிக்கும்விளிம்பு நிலை மக்களின் மனதை காட்சிப்படுத்தியவிதம் அருமை .
மனதில் குடியேறிய பரியன் வாழ்வில் உயரட்டும் .

சீழ் பிடித்த சாதீயத்தை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற வில்லை என்றால் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வது என்பது சிக்கலே .

மனிதநேயமின்றி ,மனிதர்களை அடக்கி ஒடுக்கி மிதிக்கின்ற மனிதர்கள் வாழும் நாடு பண்பாட்டில் எப்படி சிறந்ததாகும் ....?

சாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தயாரிப்பாளர் திருமிகு இரஞ்சித் மற்றும் இயக்குனர் மாறி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்

Monday, 10 September 2018

வளரிளம் பெண்கள்


புதுக்கோட்டை ரோட்டரி சங்கக் கூட்டம்.
இன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர்."வளரிளம் பெண்களும் ஊடகங்களும்'என்ற தலைப்பு.என் நோக்கத்தை காட்டிய தலைப்பில் பேசினேன்.
அனைவர் மனதிலும் வருங்காலச்சந்ததிகளை வழி நடத்த வேண்டும் என்று மனதார நினைத்ததால் தங்கள் ஆதங்கத்தை கூறினர். புதுக்கோட்டை மாவட்டம் ரோட்டரி சங்கத்தின் வருங்கால கவர்னர் பெருமைக்குரிய திருமிகு சொக்கலிங்கம் அவர்கள் ரோட்டரி சங்கத்தின் மூலமாக நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.
பாடத்திட்டக்குழு பேராசிரியர் சங்கீதா அவர்களிடமும் பேசிய போது நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.
இது மிகப்பெரிய சவால்.அனைவரும் இணைந்து வளரிளம் குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டிய கடமை உள்ளது.
இணையும் கரங்கள் என்ற முகநூல் குழுவை உருவாக்கியதன் நோக்கத்தை செயல் படுத்தும் காலம் வந்துவிட்டது.
இணைவோம் ..செயல்பட..
இவ்வாய்ப்பை அளித்த புதுகை செல்வா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
#pc புதுகை செல்வா


Tuesday, 31 July 2018

20.7.88ஆசிரிய வாழ்வில் 30ஆண்டுகள்

முப்பது ஆண்டுகள்பணி நிறைவு சூலை 2018 உடன்.
 20.7.1988.ஆசிரியப்பணியில் பணி ஏற்ற முதல் நாள்.
இன்று தான் பணியேற்றதுபோல நினைவு.முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

19 வயதில் ஆசிரியராக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூரில் பணி ஏற்ற போது  ...இருந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை.

இரண்டு பேரூந்துகள் ஏறி புதுப்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.பெட்டிக்கடை கூட இல்லாத நிலையில்...... மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி,கிராம மக்களுக்கு தேவையான மாத்திரைகள் அரியலூரிலிருந்து  வாங்கிச் செல்வது வழக்கம்.இன்று வரை மாத்திரை குழந்தைகளுக்காக பையில் ....பள்ளிக்கு முன் பன்றியை நெருப்பில் வாட்டிக் கொண்டு இருந்தனர்.ஈசல் வறுத்து உண்பார்கள்.நகரிலேயே வாழ்ந்த எனக்கு ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.
வெள்ளந்தியான மக்களும் மாணவர்களும் அன்பான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.... இன்று வரை தொடரும் உறவுகள்.
1989சூன் மாதம் பளிங்காநத்தம் என்ற பள்ளிக்கு மாறுதலில் சென்றேன்.அங்கும் பேரூந்து வசதி இல்லை.3கிமீ நடந்து போக வேண்டும்.மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு 5கி.மீ நடந்து போக வேண்டும்.மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் வருகையில் ஒருவர் பின் ஒருவராக கைப்பிடித்து ஆடைநனைந்து பள்ளிக்குச் சென்றதும்.முதன்முதலில் டி வி எஸ் 50 யில் பள்ளிக்கு சென்றதும் மறக்க முடியாத அனுபவம்..

அடுத்து மேலப்பழுவூரில் பணி மாறுதலில் சென்றேன்.அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் பெரிய பள்ளி.23 பேருடன் பணி.... அங்கு பணியாற்றிய 10 வருடங்களில் அப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக .... ஆசிரியர்களின் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக விளங்கியது.

அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் நல்ல பணியில்... நேர்மையாக பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களால் முடிந்த அளவு சமுக சேவை செய்கின்றனர்....என்னுடன் இன்றும் தொடர்பில் உள்ளனர்.

அப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது நானும் சில ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளிக்கு உட்படுத்தப் பட்டோம்.

அரியலூரைச் சுற்றியுள்ள சிமெண்ட் ஆலைகள் என்னுடலை பாதிக்க வேறு ஊருக்கு பணிமாறுதல் பெற வேண்டிய நிலை . கிடைத்த தலைமை ஆசிரியர் பணியையும் உடல் நிலை காரணமாக மறுக்க வேண்டிய நிலை.

வாழ்க்கை சூறாவளியாக சுழற்றி அடித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர் அ.உ.நி.பள்ளிக்கு 2002 ஆம் ஆண்டில் வந்தேன்.

தங்கை குடும்பம் மற்றும் நல்ல தோழமைகள் அமைந்ததால் பிற மாவட்டத்திற்கு வந்த உணர்வு இல்லை.





2005 ஆம் ஆண்டில் இப்போது பணி புரியும் அ.ம.மே.நி.பள்ளிக்கு நானும்எனது இனிய தோழி கிருஷ்ண வேணியும் மாறுதலில் வந்தோம்.வாழ்க்கை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து எத்தனையோ பிரச்சினைகளிலும் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்.. வாழ்க்கை அதிசயமானது மரணம் தொடும் பிரச்சினைகளைக் கொடுக்கின்றது.....

சிலநேரம் விண் தொடும் மகிழ்வைத் தருகின்றது.எது வந்த போதும் சமமாய் ஏற்கும் பக்குவத்தை உருவாக்குகிறது.

எள்ளல் செய்வோரை அலட்சியப்படுத்தி குறிக்கோளை நோக்கி நடக்க வைக்கின்றது.





முப்பது ஆண்டுகள் முடிவில் ஒரு கவிஞராக ,எழுத்தாளராக,சமூக அக்கறை நிறைந்த ஆசிரியராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

  புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளை 2015 ஆம் ஆண்டு

புதுக்கோட்டை ஆனந்தஜோதி இதழ் கவிக்குயில் விருது,

சென்னை தென்றல் சமூக அறக்கட்டளைகளை மூலம் புரட்சி தென்றல் விருது.

,எனது முதல் கவிதை நூலான "விழி தூவிய விதைகள்" நூலுக்கு வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா 2015 ஆண்டுக்கான விருது..,

2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது.....

என் எனது உழைப்பிற்கும் ...இனியும் உழைக்கவும் ஊக்குவிக்கும் காரணிகளாய்அமைந்துள்ளன.

அன்பான கண்டிப்பான  அம்மாவாகவே ஆசிரியப் பணியை முப்பது வருடங்கள் முடித்தாயிற்று.

எனைப் போலவே என் தோழிகள் கிருஷ்ண வேணி மற்றும் சுமதியும் முப்பது வருடங்கள் முடித்த மகிழ்வை பள்ளியில் கொண்டாடினோம் ...

எங்களுடன் பணிபுரிந்த ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள் எங்கள் மகிழ்வில் பங்கு பெற்று வாழ்த்தியதை மறக்க முடியாது.அனைத்து ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கி அன்பால் திணற அடித்தனர்.

மனிதர்களை சேர்த்து வைத்த மகிழ்வில் ஆசிரியப் பணியைத் தொடர்கின்றேன்.

வீதி கலை இலக்கியக் கள ஒருங்கிணைப்பாளராக... இலக்கிய வாழ்விலும்...
முப்பது ஆண்டு காலப்பணியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் விரும்பும் அம்மாவாகவும் மாறியுள்ளேன் ...என்பதே...மனநிறைவான ஒன்று.

நான் பிறந்த அரியலூர் என்னை நல்ல ஆசிரியராக உருவாக்கியது.

நான் வாழ்கின்ற புதுக்கோட்டை என்னை நல்ல கவிஞராக செதுக்குகின்றது.



தற்போது பாடநூல் தயாரிப்பு பணியில் இருப்பது என்ஆசிரியப்பணியின் உச்சம் எனலாம்.

மனநிறைவாக முப்பது ஆண்டுகள் முடித்து இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையின் தூரம் அதிகம்.....

வாழ்வதற்கான பொருளை உண்டாக்கி தடம் பதித்து மறைய வேண்டும்..
காலம் தான் வாய்ப்பு அளிக்க வேண்டும்....

Wednesday, 30 May 2018

பணி நிறைவு விழா

அரசுப் பள்ளிக்கு உதவிடும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி
 தாளாளர்.... கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்... மற்றும் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள்.

இன்று புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று பட்டதாரி ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி அவர்களின் பணிநிறைவிற்காக சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நன்கொடையாக ரூபாய் 1,50,000மற்றும்‌ கணினி..... ஆசிரியரின் 58 வயதை நினைவூட்டும் வகையில் பள்ளி நூலகத்திற்கு 58 நூல்கள் வழங்கி மகிழ்ந்தனர்...
இவ்விழா புதுக்கோட்டை எம்.ஏ . கிராண்ட் உணவு விடுதியில் நடந்தது.
விழாவில் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்....
ஆசிரியர்கள் உறவினர்கள் புதுக்கோட்டை மகாராணிரோட்டரிமற்றும் பேலஸ்சிட்டி ரோட்டரி நண்பர்கள் வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர்.

எனது வாழ்த்து கவிதை

திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி
தஞ்சமடைந்தோரின் சரணாலயம்
எஞ்சாது உதவிடும்
கஞ்சமில்லாப் பெருமனம்
பெண்மையில் ஒளிர்ந்திடும்
பேராழியும்,போராளியுமானவர்.
கம்பீரம் பணியும் இவரின்
கலக்கமில்லா கலங்காததிடம் கண்டு.
தன்னம்பிக்கையின் மறுவடிவம்
தளரா மனதுடன் போராடித்
தன்னுயிர் மகளை
காலனிடமிருந்து மீட்ட
நவீன சாவித்திரி.
பெருமலையில் பிறக்கும் பேரருவியென
இறுக்கமாகத் தோன்றும்
இவரின் மனதில்
பெருகும் பேரன்பு
திக்குமுக்காட வைக்கும் அனைவரையும்.
உலகம் போற்றும் கவிஞராக
உன்னதமான கல்வியாளராக
புதுக்கோட்டையின் புகழுக்கோர்
அணியாரமாக
பார் போற்றும் மனிதராக
கவிஞர் தங்கம் மூர்த்தி திகழ
தன் கவித்திறமையை மறைத்து
அஸ்திவாரமாகத் திகழ்பவர்.
இரு கண்களாய் குழந்தைகள்
இதயமாக கணவர்.
வாழ்க்கைப் போராட்டத்தில்
வாடிவிடாமல் போராடி
வெற்றி பெற்ற போராளி.
பெருங்களூரில் ஆசிரியப் பணியைப்
பெருநதியாய்த் துவங்கி
செட்டிவிடுதியில் செழித்து
அன்னவாசலில் ஆர்ப்பரித்து
இராஜகோபாலபுரத்தில்
இராஜநடை பயின்று
சந்தைப்பேட்டையில் நல்ஆசிரிய
ஆழியானவர்.
இவரால் சந்தைப்பேட்டை பள்ளியின்
இன்னல்கள் கரைந்தன.
மகாராணி ரோட்டரி சங்கத்தின் மூலம்
மின் மோட்டார், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மின் விசிறி, தையல் இயந்திரம் மட்டுமல்ல...
புதைந்து கிடந்த
புரவலர் திட்டம்
புத்துயிர் பெற்றது இவரால்...
ஒரு நாள் பள்ளியின் மின் மோட்டார்
ஓய்ந்து போன கணத்தில்
நீரின்றி தவித்த மாணவிகளின்
துயர்களைந்த ஆதர்ச தம்பதியர்
கவிஞர் தங்கம் மூர்த்தி . திருமிகு அஞ்சலி தேவி.
பள்ளிக்கு பீரோ...
பத்தாம் வகுப்பு மாணவிகள்
பொதுத்தேர்வில் வரலாற்று
பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்றால்
ஆயிரம் ரூபாய்....
என் வாரி வழங்கும் கரங்களுக்குச்
சொந்தக்காரர்...
தங்கமனம் படைத்த
திருமிகு அஞ்சலி தேவி அவர்கள்..

இன்று பள்ளிக்கு கணினியும்
புரவலர் திட்டத்தில் ரூபாய் 1,50,000இலட்சம்...
இனி வருடந்தோறும் பொதுத்தேர்வில்
முதல் மற்றும் இரண்டாம்மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000 இப்பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியில் இருந்து
வழங்கவேண்டி நன்கொடை
வழங்கிய நல்ல உள்ளங்களை
எப்படி வாழ்த்துவது..
அரசுப் பள்ளி வாழ
அள்ளி வழங்கும்
தனியார் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மற்றும் திருமிகு அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி...
கண்கள் கலங்குகிறது....
இவர்களைப் போன்ற தாங்கும்
இதயங்களால் ஏழை மாணவர்கள்
கற்கும் அரசுப் பள்ளி தழைக்கின்றது....

பணி நிறைவில் நிறைவாக
பள்ளிக்கு உதவிய
ஆசிரியர் அஞ்சலி தேவி மற்றும் கவிஞர்தங்கம் மூர்த்தி
ஆகியோருக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்....








..

Wednesday, 9 May 2018

ஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18

ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018
பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது.
குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பிடிவாதமாக கொண்ட மதிப்பிற்குரிய செயலர் திருமிகு உதயச்சந்திரன் அவர்களின் கீழ் பணிபுரிந்த அற்புதமான காலங்கள்..... அவரின் எண்ணத்தை செயலாக்கம் செய்பவர்களாக இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் , மற்றும் துணை இயக்குனர்கள்...
வருங்கால சந்ததியினருக்கான அறிவு விதை உலகின் மிகச் சிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஊன்றப்பட்டது...
தமிழ் நாட்டில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களின் குழுவில் நானும்....
வாழ்வில் முதன் முதலாக பள்ளி கல்வி துறை வளாகத்தில் நுழைந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.மேலாய்வாளராக முனைவர் மணமலர்ச்செல்வி,
ஆசிரியர்கள் செல்வி,இராஜலெக்ஷ்மி,விமலா ,  ஜானகி, பேச்சாளர் தமிழ் திருமால், கவிஞர் சிவ.முரளி, ஜீவானந்தம்,ஆன்டனி,அன்புச் செல்வி  கலைவாணி,சக்திவடிவு,சாந்தசுந்தரி, தலைமைஆசிரியர்கள் ஜோதி லெக்ஷ்மி,ரமாதேவி மெய்யப்பன் ஆகியோருடன் நானும்..... குழந்தையின் மொழியில் இருப்பதற்காக எழுத்துகளை செதுக்கப்பட்ட காலங்கள்....ஒரு எழுத்து கூட பிரச்சினைக்குரியதாக அமைந்து விடக் கூடாது என்பதில் கூர்ந்த கவனம் எங்களை வழி நடத்தியவர்களிடம் இருந்தது.
வீடு ,வாசல், குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து....ஒரே சிந்தனையுடன் எல்லோரும் இரவு பகல் பாராது எழுதிக்குவித்ததை இரவு முழுதும் படித்து சீரமைத்து மறுநாள் எங்களை வழிநடத்திய தலைமை....
கல்வியாளர்களின்... எழுத்தாளர்களின்.. முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துகளை கேட்டு வடிவமைக்கப்பட்ட பொருண்மைகளுக்கு தொடக்கக் கல்வி முடித்து ஆறாம் வகுப்பு வரும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்து..... எழுதப்பட்ட நூல்....தமிழ் மொழி மட்டும் அல்ல அறிவியல்....சமூகம் சார்ந்த ஒன்று...என்ற எண்ணத்தை உருவாக்கும் படி.....
வினாக்கள் குழந்தைகள் புரிந்து கொண்டு எழுதும் வகையில் அமைய வேண்டும்...புத்தகத்தை பார்த்த உடன் மாணவர்கள் நேசிக்கும் படி இருக்க வேண்டும்.அவர்களைச் சிதைத்து விடக் கூடாது....என்ற உறுதியான கொள்கை கொண்ட சீரிய தலைமையின் கீழ் உருவாக்கிய அனுபவம் என் வாழ்வில் படிமமாக...
என் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் சிறப்பாக பாடப்புத்தகப் பணியைச் செய்யுங்கள் என்று கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையுமே என்னால் மனநிறைவோடு இப்பணியைச் செய்யக் காரணமாக அமைந்தது.
அனுபவங்களே ஆசான் என்பதை உணர வைத்த காலங்கள்....
குழந்தைகளுக்கானத் தேடலில் ஏற்பட்ட பற்றாக்குறை.....
குழந்தைகளுக்கான உலகை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
பாடப்புத்தகம் மட்டுமே கல்வி அல்ல என்ற எனது எண்ணத்தை மேலும் உறுதி படுத்தியது...
பேராசிரியர் ச.மாடசாமி அய்யாவின் அன்பை,
கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்பை . ஏராளமான தோழமைகளைப் பரிசாக தந்த காலங்கள் இது . ஆனந்த விகடன் தடம்'இலக்கியமேமாத இதழில்  என்னை அங்கீகரித்த நாட்கள் இவை....
முழுமையான சிறப்பான நூல் என்பதாக இருக்கிறதா என உறுதியாக கூற முடியாது என்றாலும் குழந்தைகளுக்காக தரமாக அமைந்த நூல்....குறைகள் இருக்கலாம்.... எங்கள் குழந்தையல்லவா..... எங்களுக்கு பெருமிதமே..... வாழ்வின் பொருளை..... வாழ்க்கை நமக்காக அல்ல எல்லோருக்குமான ஒன்று என்ற விரி வானத்தை தொட முயலும் முயற்சி....என்பது இனிமையான ஆசை தானே....
என்னுடன் பணிபுரிந்த அத்தனை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..... உங்கள் கரங்களில் தவழும் எங்கள் குழந்தை .....நம் குழந்தைகளின் மனதோடு விளையாடட்டும்.....


Wednesday, 2 May 2018

தடம் இலக்கிய இதழில் இம்மாதம் மே 2018


நம்ப முடியல
மே மாத தடம்'இலக்கிய இதழில்...
சிறுவயதில் இருந்து என்னைத் தொடர்ந்து வரும் தோழன்....
அவனுடன் பழகும் ஒவ்வொரு நிமிடமும் என்னைப் புத்துயிர் கொள்ள வைக்க அவனால் மட்டுமே முடியும்....
என்னை ஓவியராக்கி அழகு பார்ப்பான்...
இலக்கியச் சுவையை குருதியில் உறைய வைத்தவன்...
காலம் கடந்தும் இளமையைத் தக்க வைத்து கொள்ளும் தந்திரக்காரன்
அவனது இலக்கிய இதழில் இடம் பெறுவது என்பது நம்ப முடியாத ஒன்று... ஆனந்த விகடனின்
தடங்களைப் பதிவு செய்யும்" தடம்"இலக்கிய இதழில்
என்னையும் அங்கீகரித்து உற்சாகப்படுத்திய ஆனந்த விகடனுக்கு மனம் நிறைந்த நன்றி...
இன்றைய காலை கவிஞர் சுரேஷ் மான்யா அவர்களின் வாழ்த்துடன் புலர்ந்தது.
என் தமிழ் என்னை கைகோர்த்து
இலக்கிய உலகின் முதல் படியில் அடியெடுத்து வைக்கச்செய்துள்ளது...
அறிமுகம் செய்த நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த  நன்றி...

Wednesday, 25 April 2018

வீதி 50 பொன் விழா அழைப்பிதழ்

வீதி கலை இலக்கியக் களம் பொன்விழா. ட

அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: வருவாய்த்துறை அலுவலர் சங்கக்கட்டிடம்.புதுக்கோட்டை.
நாள் 29.4.18ஞாயிறு காலை 9.30 மணி..
50 பேர் உடல் தானம்
வீதி உறுப்பினர்களின் கவிதை ஓவியக் கண்காட்சி.
"வீதி 50 "புகைப்படக்காட்சி.
சமூகத்தோடு இணைந்து பயணிக்க , இலக்கியம் சுவைக்க "வீதி"உங்களை அன்புடன் வரவேற்கிறது..

Saturday, 14 April 2018

veethi 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..