Tuesday, 30 January 2018

வீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .
 

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான  பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
           

கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :



எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
 " பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை


:தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக்  கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின்  "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில்  படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்


கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை  கவிதையில்  விமர்சனம் செய்தமுறை   சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின்  "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

      "ஒரு கன்னத்தில் அறைந்தால்
       மறு கன்னத்தைக் காட்டலாம்
      நாங்கள்
      அடி வயிற்றில் அல்லவா
      அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ்  ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :

வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

                    டீ குடிப்பது என்பது
                    டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .
பாராட்டு


அண்மையில் நூல் வெளியிட்ட எழுத்தாளர்களான கவிஞர் சாமி கிருஷ் மற்றும் கவிஞர் பாக்யராஜ் ஆகியோரை வீதி பாராட்டி கௌரவித்து மகிழ்ந்தது.

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது .

Wednesday, 24 January 2018

ஆண்டாள்

சீச்சீ என்றே
ஊடகங்கள் காலடியில் வீழ்ந்தால்
உண்மைகள் உறங்கிடுமே!
ஊமையாய் ஒளிந்திடுமே!

அறம் வீழ
அநியாயம் தலைவிரித்தாட
ஆயிரம் ஆண்டுகளாக
அறிவிலிகளாய் அடிமைப்பட்டு
அழிவதை உணரவில்லை.

தமிழன் வீழ
தமிழ் எண்ணுமா?
ஆண்டாளின் தமிழ் கூறி
என் தமிழால்
என்னையே வதம் செய்யவும் கூடுமா!

மதம் பிடித்த மதம்
கதம்கதம் ஆவது எப்போது.?
மனிதம் தழைக்கும் அப்போது...

Friday, 19 January 2018

சனவரி 2018 மாத வீதி கூட்டம்

இம்மாத வீதி அமைப்பாளராக கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின்....
இரண்டு வருடங்களுக்கு முன் பேரிழப்பாய் வைகறையை புதுக்கோட்டை இழந்தது.

அரசின் உதவி தொகை எதுவும் கிடைக்காது என்ற நிலையில் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் மகனை பாதுகாக்கும் முயற்சியில்.... வலைப்பதிவு நண்பர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் அனைவரின் உதவியில்  நிதி திரட்டி வீதி நிறுவனர் முனைவர் அருள்முருகன் அய்யா அவர்கள் தலைமையில் வழங்கினோம்.
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தங்கள் பள்ளியில் ரோஸ்லினுக்கு ஆசிரியப் பணி வழங்கி அவரின் வாழ்விற்கான தன்னம்பிக்கையை அளித்தது மறக்க முடியாத உதவி.
அரசு பணி வாங்குவதற்கான முயற்சிகளில் கவிஞர் முத்துநிலவன் மற்றும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் கவிஞர் வைகறை மற்றும் ரோஸ்லின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
இன்று தன்னம்பிக்கை உடைய ஆசிரியராக ரோஸ்லினை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது வைகறைஇல்லையே என்று.
இம்மாத வீதி கூட்டத்தை நடத்தும் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் அவர் செயல்படுவதை பார்க்கையில் மனம் பெருமிதம் கொள்கிறது.
வீதி தாங்கிய மகள் அவர்...
கோழிக்குஞ்சை போல பாதுகாத்துவாழ்வில் நிமிர்ந்து நிற்பவரை கண்டு மனம் நெகிழ்ச்சியுடன் ...
வீதி கலை இலக்கியக் களம் என்பது கலந்து பிரியும் கூட்டமல்ல.....
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வழிநடத்த அனைவரும் இணைந்து மகிழும் குடும்பம்....
அக்குடும்பம் அழைக்கிறது மகிழ்வாய் உங்களை தன்னோடு இணைய...
வாருங்கள்.....
அன்பின் மழையில் நனைய...
இம்மாத அமைப்பாளர்கள்
திருமிகு சுதந்திர ராசன்
திருமிகு ரோஸ்லின்....