Sunday, 19 November 2017

புத்தகங்களே துணை .

புத்தகங்களே துணை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட50ஆவது நூலக வார விழாவில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை.

எழுத்து பூக்களால் நிறைந்த
எண்ணச்சோலையின்
எழில் வனம்.

அடர் வனத்தின்
மணமுணர்த்தும்
மனோரஞ்சிதம்.

பருக பருகத் தீராத
போதை தரும்
மதுக்கோப்பை.

தூக்குக் கயிற்றையும்
முத்தமிடத் தூண்டும்
துணிவின் ஊற்று.

கேட்பதை யெல்லாம்
கேளாமல் வழங்கும்
அட்சயப் பாத்திரம்.

சிதறுண்ட தேசத்தை
சித்திரமாக்கும்
தேவகானம்.

பதரென்று எதையும்
விலக்க முடியாத
அமிழ்தம்.

களரான மனதையும்
வளமாக்கி
பண்படுத்தி
தளராமல் காத்திடும்
உன்னத சக்தி.

புத்தகங்கள் வெடிகுண்டென
வெடித்த வரலாறு உண்டு.

வீணாய் மடியும்
மாந்தர்களுண்டு.

வீணாய்ப் போன
புத்தகங்கள் எதுவுமில்லை.

வாழ்ந்த புத்தகங்கள்
வாழ்கின்ற புத்தகங்கள்
எல்லாவற்றையும் விட

சாகாவரம் பெற்ற
புத்தகங்களே
சாதிக்கும்
வல்லமை தந்திடும்.

சாதனையாளர்களை
சமைத்திடும்
சமூகச்சிற்பியது.

ஓவியங்கள் அழகாகும்
வண்ணங்களால்.

மனித மனங்கள்
வண்ணமயமாகும்
நூல்களால்.

எண்ணங்களின் தூவல்களை
விசிறி மனவீட்டை
ஜொலிக்கச் செய்திடும்
மாயவித்தைக்காரன்.

அலைபேசிக்கருவியை
ஆர்வமுடன் இயக்கும்
குழந்தைகளின் கரங்களில்,
தவழ்ந்திடத் துடிக்கும்
புத்தகங்களைத் தந்திடுங்கள்.
அவர்களின் மனங்களை
மலரச்செய்யும்
தப்பாமல்.

நூல் தொட்ட கைகளே
தைத்திடும்
சமூகக்கிழிசல்களை.

நூல்களைத் தொட்டு
தைத்திடுவோம்
வாரீர்..

3 comments:

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...