Monday, 20 February 2017

பெண்ணாய் பிறக்க என்ன கொடுமை செய்தோம்?

இன்னும் எத்தனை நாள்
இந்த கொடுமைகள் நீடிக்கும்.

அண்ணாக்களும், அப்பன்களும்
உறவு மறந்த ஆண்களும்
உள்ளம் சிதைந்த மிருகங்களும்
வளரும் மார்பைக் கசக்கும் கொடுமை
வலிக்கும் வலியை யாரிடம் கூற..

உங்களால் குதறப்பட்டு குருதி வழியும்
உயிர் பிடுங்கும் வலியோடு,
எங்கள் யோனி சிதைக்கும் உரிமை
யார் தந்தார்?

உயிர் கொடுத்து, உயிர் வலிக்க
உயிர் படைக்கும் சக்தி நாங்கள்...

வெறி பிடித்த மிருகத்தின்
முகமூடியறியாமல்
வக்கிரமாய்ச் சாகின்றோம்...

நித்தம் நித்தம் வக்கிரங்களின் ஓலங்கள்
நித்திரையிலும் பயந்து அலறுகின்றோம்.

மெல்ல மலரும் மொட்டுகள்
மேனி கருகி எரிகின்றோம்...

என்ன செய்வதென விழிக்காதீர்
கொடுங்கோலனின் குறி அறுத்து
கொடுமை செய்யும் எண்ணம் அழிப்பீர்...

உங்கள் வீட்டுக்குழந்தை
உயிர் விடாமல் தடுப்பீர்..
 
ஏழாம் வகுப்பு படித்த ஹாசினி


மூன்று வயது நிரம்பிய ரித்திகா


Sunday, 19 February 2017

Two days one night-

Two days one night

புதுக்கோட்டை உலக சினிமா சங்கத்தின் மூலம் இன்று மாலை கந்தர்வன் நூலகத்தில் TWO DAYS ONE NIGHT -என்ற பிரெஞ்ச் படம் திரையிடப்பட்டது.

ஒரு பெண்ணை அவள் பணிபுரியும் நிறுவனம் ஆட்குறைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும்...அவளுடன் பணிபுரிபவர்கள் கம்பெனி போனஸாக தரும் 1000 ரூபிளை வேண்டாம் என்றால் அதற்கு பதிலாக அவளை பணிக்கு ஏற்பதாக ந்ர்வாகம் கூறுகின்றது.

அவள் குடும்பம் மட்டுமல்ல அவளுடன் பணிபுரிபவர்களும் மிகவும் கடன் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ...தனது பணியைத்திரும்ப பெற அந்தப்பெண் எல்லோரிடமும் தனக்காக போனஸை விட்டுத்தர கேட்டு தவிக்கும் தவிப்பை மிக யதார்த்தமாக படமாக்கியுள்ளனர்.

அவளுக்காக அவளது கணவனும் இணைந்து தவிப்பது அழகான இல்லறத்துணையாக பரிணமிக்கும் காட்சி.

தனக்காக அவள் போராடுவது பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க கூடிய ஒன்றாக.

இறுதியில் அனைவரிடமும் பேசி பாதிப்பேர் அவளுக்காக தனது போனசை விட்டுத்தர முன் வருகின்றனர்.

பணி உறுதி என்ற நிலையில் அவளது மேலதிகாரி அவளை அழைத்து கறுப்பின வாலிபரை நீக்கி விட்டு உங்கள் பணியை உறுதி செய்வதாக கூறுகையில் ,கறுப்பின தோழருக்காக தனது பணியை விட்டுக்கொடுத்து, மனப்பூர்வமாக வெளியேறுவது ....மனதில் நிலைத்து நிற்கின்றது.

அனைவரிடமும் கையேந்தி பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டதே என அவள் தவிக்கும் தவிப்பு ஆசம்...

எந்தவித பின்னணி இசையுமின்றி மிக யதார்த்தமாக படம் உள்ளது.

தனக்காக அவளே போராடி வெற்றி பெறுவதாக அமைந்துள்ள திரைக்கதையைக்காண்கையில் நமது தமிழ்ச்சினிமாவில் பெண்களின் நிலையை ஒப்பு நோக்காமல் இருக்க முடியவில்லை.

நம்நாட்டில் உயிரோடு வாழ்வதற்கே பெண்கள் போராடும் நிலையில் எங்கே அவள் சுதந்திரமாக தனது பணிக்காக போராட முடியும்.

இயல்பாக பெண்களுக்கு அவர்கள் தரும் மரியாதை பண்பாடுமிக்க நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

நம் தமிழ்ச்சினிமா யதார்த்தத்தை படமெடுக்க இன்னும் பலமைல் கடக்க வேண்டும்...

இவ்வாய்ப்பைத்தந்த இளங்கோ சாருக்கு மிக்க நன்றி.
.

Friday, 10 February 2017

என்ன செய்ய போகின்றோம்?

இன்று மாலை 6,7,8 வகுப்பு குழந்தைகளோடு பேசியபோது முதலில் அவர்கள் தயங்கினாலும் பின் இயல்பாக பேசத்துவங்கினர்.

நல்ல தொடுகை ,தீய தொடுகை பற்றி கூறிய போது சில குழந்தைகளின் கண்களில் மிரட்சி தெறிந்தது..அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிந்தது.

சில குழந்தைகள் கூறியதை சீரணிக்க முடியவில்லை..அவர்களைச்சுற்றியுள்ள ஆண்களின் வக்கிரத்தை குழந்தைத்தன்மையுடன் கூறிய பொழுது எச்சரிக்கத்தான் முடிந்தது.

சில குழந்தைகள் அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் அம்மா உங்ககிட்ட சொல்றோம்,அவங்க அடிப்பாங்க என்ற போது..வீடு அவர்களை நம்ப மறுப்பது எவ்வளவு கொடுமையானது.

நாம பெண்குழந்தைகளிடம் இன்னும் நெருங்க வேண்டும்..அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...எப்போது ?

Wednesday, 8 February 2017

வீதி கலை இலக்கியக்களம்-35

வீதி கலை இலக்கியக்களம்
கூட்டம் -35
நாள்:29.1.17
இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி.புதுகை

எனக்கு பிடித்த புத்தகங்கள்

முதல் நிகழ்வாக எனக்கு பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து சிறு அறிமுகம் செய்தனர்.

வீதியின் இளந்தலைமுறை செல்வி எழில் ஓவியா
தனக்கு பிடித்த நூல்களாக
பொன்னியின் செல்வன்
மின்மினிக்காடுகள்
சேகுவேரா வாழ்க்கை வரலாறு
பிடல்காஸ்ட்ரோ
போன்ற நூல்கலை அறிமுகம் செய்த போது மனம் மகிழ்ந்தது...நம்பிக்கை ஊட்டக்கூடிய விதையாக அவள் வீதியில் பரிணமிக்கின்றாள்.

மீரா.செல்வக்குமார்.
தனது ஆழ்ந்த அகன்ற வாசிப்பால் எல்லோர்க்கும் மிகச்சிறந்த நூல்களை வீதியில் அறிமுகம் செய்தார்.
கருப்பர் நகரம்-கரன் கார்க்கி
பழைய சென்னையின் வரலாறு அதில் வாழ்ந்த மனிதர்கள் சேரிமக்களின் வாழ்க்கை என அந்நூல் மிக ஆழமாக உண்மை வரலாறைஎடுத்துக்கூறுகிறது என்றார்.
மாவீரன் அசோகன் மறைக்கப்பட்ட வரலாறு-மொழி பெயர்ப்பு தருமி
புத்தம் எவ்வாறு இந்தியாவில் கோலோச்சியது.அசோகன் ஏறத்தாழ 95%இந்தியாவை எவ்வாறு ஆட்சி புரிந்தான் என்பதை தெளிவாகக்காட்டும் நூலாக உள்ளது என்றார்.

பேராசிரியர் விஜயலெட்சுமி
தமிழில் ஏதும் சந்தேகம் என்றால் இவரிடம் தான் புதுகையின் ஆளுமைகள் கேட்பார்கள்..ஆழ்ந்த புலமை கொண்ட இவர் பரிந்துரைத்த நூல்கள்.

திருக்குறள்
மு.வ.மொழிவரலாறு
ஊருக்கு நல்லது சொல்வேன்
கதாவிலாசம்
வீரபாண்டியன் மனைவி
வாய்க்கால் மீன்கள் -இறையன்பு
ஏழாவது உலகம் -ஜெயமோகன்
சோளகர் தொட்டி-பாலமுருகன்.
டாலர் தேசம்-பா.ராகவன்.
பாரதிதாசன்
ஜெயகாந்தன்.

கவிஞர் கீதா
இவர் தான் வாசித்த ,மறக்க முடியாத நூல்களை எடுத்து வந்து காட்டி அறிமுகம் செய்த நூல்கள்,

முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்
கடலும் கிழவனும்
எஸ்தர்-வண்ணநிலவன்
அபிதா
எங்கதெ
சோளகர் தொட்டி
மிளிர்கல்-முருகவேள்
சீவன் -கந்தர்வன்
மழைமான் எஸ்.ரா
பூமரப்பெண்-ச.மாடசாமி

வலைப்பதிவர் தமிழ் இளங்கோ திருச்சி

தென்னிந்திய மக்கள் குறித்த நூல்
மொழிவரலாறு ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

”ஆனந்த விகடன் “கவிஞர் சச்சின்

பால் அரசியல்-நக்கீரன்
காடோடி -நக்கீரன்
லைட்டா பொறாமைப்படும் கலைஞன் -இசை
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் பிராய்ட்-வெய்யில்
முன் கூறப்பட்ட சாவின் செல்வம்-அகதா
ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

கவிஞர் சிவக்குமார்

ஹெலன் கெல்லர்
அன்னை தெரேசா

விதைக்கலாம் கஸ்தூரிரங்கன்

காலம் தோறும் பிராமணீயம்
முறிந்த சிறகுகள்-பண்ணை பதிப்பு
டிரைய்ன் டு பாகிஸ்தான் -குஷ்வந்த் சிங்

ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சிகள்

வரவேற்புரை
விதைக்கலாம் கஸ்தூரிரங்கன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.


பாடல் -

எழில் ஓவியா தனது மென்மையான குரலால் மனதை நிறைக்கும்
”பெண்கள் கூடிப்பேச வேண்டும்” என்ற பாடலைப் பாடினார்.

கவிதை-

கவிஞர்.மீரா.செல்வகுமார்.

மாணவர் எழுச்சி

தைப்புரட்சி என அனைவராலும் வரவேற்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை

”நூறு இளைஞர்கள் கேட்ட விவேகானந்தரே” என்ற அழகிய வரிகளால் துவங்கி ,உணர்வுகள் தூண்டப்படும் விதமாய் மிக அழகாக கவிதையால் கூறிய விதம் மிகச்சிறப்பு.

கவிஞர் சிவக்குமார்

”மரணம் மரத்திற்கும் தான்” என்ற கவிதையை படித்தார்...

கவிஞர் சுகுமாரன்
”ஊற்றெடுக்கும் தாகம்” என்ற ஹைக்கூ கவிதைகளைப் படித்தார்.மகளுக்கான கவிதை தந்தையின் தவிப்பை கூறுவதாக சிறப்புடன் இருந்தது.

கவிஞர் மாலதி
”கழனியெல்லாம் மண்வாசம்”என்ற பொங்கல் கவிதையைப்படித்தார்.




சிறப்பு விருந்தினர்
திருமிகு தமிழ் இளங்கோ அவர்களின் வலைப்பூ அனுபவம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.யதார்த்தமான தனது பேச்சால் வலைப்பூவில் என்னவெல்லாம் எழுதலாம்..எதனை எழுதக்கூடாது என்று மிக அருமையாக விளக்கினார்.

தலைமை
திருமிகு சுதந்திரராஜன் தனது பரந்த வாசிப்பால்,எல்லோருக்கும் நிறைய தகவல்களைக் கூறினார்.பழமையான எழுத்தாளர்களின் நூல்களை சிலாகித்து கூறிய விதம் மிகச்சிறப்பு.

 
நூல் வரவு

வீதியில் தோழி தேன் மதுரத்தமிழ் கிரேஸின் இரண்டாவது கவிதை நூலான “பாட்டன் காட்டைத்தேடி” என்ற கவிதை நூலை அனைவரும் வாங்கி மகிழ்ந்தனர்.



நன்றியுரை

அனைவருக்கும் நன்றி கூறி வீதி கலை இலக்கியக்களம் -35 நிறைவாய் முடிந்தது.

அமைப்பாளர்
திருமிகு கஸ்தூரி ரங்கன் அவர்கள் மிகச்சிறப்பாக கூட்டத்தை நடத்தினார்.வீதி அவரைப்பாராட்டி மகிழ்கிறது..