Tuesday, 25 October 2016

பள்ளி பரிமாற்றம் திட்டம்.-அனைவருக்கும் கல்வித்திட்டம்

அனைவருக்கும் கல்வித்திட்டம்-பள்ளி பரிமாற்றம் திட்டம்[25.10.16]

நகரத்து பள்ளிகளுடன் கிராமத்து பள்ளிகள் இணைப்பு

                                        ,கிராமத்து பள்ளிக்குழந்தைகள் நகரத்து பள்ளிகளின் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளவும்,நகரத்து குழந்தைகளுடன் இணைந்து பழகவும்,நகரத்து ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை உணரவும்,அவர்களின் மனதில் நாம் கிராமத்தில் படிக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மையை மாற்றவும் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இது போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 நகரப்பள்ளிகள் 22 கிராமப்பள்ளிகளுடன் இணைத்து இத்திட்டம் செயல்படுகின்றது.ஒரு ஆண்டுக்கு 12 நாட்கள் இத்திட்டம் செயல்படும் படி திட்டம்தீட்டப்பட்டு வழிகாட்டப்பட்டுள்ளது.

அதன்படி 25.10.16 அன்று காலை 9.00 மணியளவில் கரம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து ,புதுக்கோட்டை நகரத்தில் உள்ள  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு [எங்கள் பள்ளி] 20 மாணவிகளும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சந்திரா அவர்களும் பொறுப்பாசிரியர்கள் இருவரும் வந்தனர்.

அவர்கள் பள்ளியில் நுழைந்ததும் அவர்களை என் பள்ளி ஜே.ஆர்.சி. மாணவிகள் வரவேற்றனர்.

பள்ளியில் அவர்களுக்காக வழிபாட்டுக்கூட்டம் நடந்தது .பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வித்தனர்.






செவ்வாய்ப்பட்டி தலைமை ஆசிரியர் தனது வாழ்த்துரையில் பள்ளிக்கு வந்துள்ளது மகிழ்வாக உள்ளதென்றும் படிப்பில் மட்டுமின்றி ஒழுக்கத்திலும் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

அறிமுகம்


மாணவிகளின் பெயர்களை அறிந்து கொள்ளும் வகையில் வட்டமாக நின்று பந்தை தூக்கிப்போட்டு தங்கள் பெயர்களை வரிசையாக சொல்லி விளையாடினர்.

வரவேற்பு


பள்ளிக்கு முதல்முதலாக வந்த குழந்தைகட்கு பூங்கொத்து ,சாக்லேட் கொடுத்து எட்டாம் வகுப்பு மாணவிகள் அன்புடன் வரவேற்றனர்.

பாடம்

முதல்நாளான இன்று தமிழ்ப்பாட வகுப்பு ....பள்ளியின் தமிழாசிரியர் சுமதி அவர்கள் காட்டுயிரிகள் என்ற உரைநடைப்பாடத்தை மிகச்சிறப்பாக விலங்குகளின் முகமூடிகளை மாணவிகளுக்கு அணிவித்து ,காட்டுவிலங்குகளின் ஒலிகளை வகுப்பில் ஒலிக்கச்செய்து  வகுப்பையே காடாக்கி பாடத்தை நடத்திய விதம் மிக அருமை.

கலைப்பயிற்சி

பள்ளியின் தையற்கலை ஆசிரியர்கள் திருமிகு யோகேஸ்வரி ,திருமிகு விமலா மற்ரும் ஓவிய ஆசிரியர் ஜெயா ஆகியோர் மாணவிகளுக்கு வீணாகும் பொருள்களிருந்து பூங்கொத்து செய்வதையும்,வண்ணத்து பூச்சி செய்யும் முறை,பூங்கொத்து சாடி செய்யும் முறையையும் மிக அழக்காக சொல்லிக்கொடுத்தனர். விழிகள் விரிய மாணவிகள் மிக ஆர்வமாய் கற்றுக்கொண்டனர்.

I.C.T.பயிற்சி

மாணவிகளுக்கு மதிய உணவு இடைவேளைக்குப்பின் தமிழாசிரியர் திருமிகு கிருஷ்ண வேணி அவர்கள் தலைமேல் வீழ்த்தி கருவி மூலம் காட்டுவிலங்குகள் குறித்த வீடியோ,ஐம்பூதங்கள் படம்,உணவுச்சங்கிலி நகரும் காட்சி,ஒரு நீதிக்கதை,ஆகியவற்றை மாணவிகளுக்கு காட்டி மாணவிகள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

செயல்திட்டம்







                                 பள்ளியின் ஆசிரியர் திருமிகு கீதா அவர்கள் மாணவிகளை ஐந்து குழுக்களாகப்பிரித்து , காட்டுவிலங்குகள் மாதிரிகளை வைத்து காடு தயாரிக்கவும்,சிறுவர் கதைப்புத்தகங்களைத்தந்து கதை விமர்சனம் எழுதவும்,வண்ணத்துப்பூச்சி மரம் ஒயர் மற்றும் சாக்லேட் பேப்பரிலிருந்து தாயரிக்கவும்,செய்தித்தாளிலிருந்து உயிர் எழுத்து ,மெய் எழுத்து சொற்களைக் கண்டுபிடிக்கவும் கூறினார்..மாணவிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்தனர்.

வழியனுப்புதல்

மாலை 4.30 மணியளவில் செவ்வாய்ப்பட்டி மாணவிகள் அவர்கள் பள்ளிக்கு போக மனமின்றி புறப்பட்டனர்.

காலையில் வரும்போது சிறிது அச்சத்தோடு வந்த குழந்தைகள் போகும் போது போக மனமின்றி சென்றது எங்கள் பள்ளிக்கு கிடைத்த வெற்றி.27.10.16 அன்று எங்கள் பள்ளிக்குழந்தைகளுடன் நாங்கள் செல்ல உள்ளோம்....
                                                                                         
                                                                                      மீண்டும் சந்திப்போம்.
                                                                                              அன்புடன் கீதா.


veethi 32 வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 32

                                     வீதி கலைஇலக்கியக்களம் -32

இன்று 23.10.16 வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக திருநங்கையர்களுக்கான சிறப்புக்கூட்டமாக நடந்தது.

வரவேற்புரை

ஒளிப்பதிவாளர் செல்வா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்க கூட்டம் துவங்கியது .

தலைமை


திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமை வகித்து கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்தி திருநங்கைகள் குறித்த கவிதை வாசித்தார்.


சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்களாக பாண்டிச்சேரியிலிருந்து திருமிகு செல்வக்குமாரி அவர்களும்,மதுரையிலிருந்து திருமிகு பிரியாபாபு அவர்களும் கலந்து கொண்டனர்.
உணர்வுபூர்வமான ஒரு விழாவாக அமைந்தது .

Saturday, 22 October 2016

வீதி கலை இலக்கியக்களம் 32 -23.10.16

வீதி கலை இலக்கியக்களம்

அன்புடன் அழைக்கின்றோம்...

இம்மாதச் சிறப்பு-திருநங்கைகளுக்கான வீதி...

”பாலின சமத்துவ வீதி”யாக நாளை புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் ..காலை 9.30 மணி அளவில்...

வேறு உலகத்தினரோ? என நினைத்தவர்கள் ஆனால் இன்று என் பெரு மதிப்பிற்குரியவர்கள்.

சிறு வயதில் அப்படித்தான் நினைத்தேன்...அவர்களை மோசமாக திரைப்படங்களில் காட்டிய போது ..ஏதோ ஒன்று அவர்களிடமிருந்து விலக்கியது....

ஒடுக்கப்பட்டவர்களில் கீழ்சாதி மக்கள்..அவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற எனது கருத்தை மாற்றி பெண்களை விட ஒடுக்கப்பட்டவர்களாக மாற்று பாலினத்தவர்கள் இருப்பதைக்காட்டியது...

”லிவிங் ஸ்மைல் வித்யா “என்ற நூல்..முதன் முதலாக அவர்களை நேசிக்க ஆரம்பித்த கணம் அது.அந்நூலை எழுதிய சரவணன் அலைஸ் வித்யா அவர்களிடம் பேசும் வாய்ப்பு தம்பி வி.சி. வில்வம் மூலம் கிடைத்தது.வாழ்வில் முதன் முதலாக தன்பால் மாறிய சகோதரியிடம் பேசிய போது மனம் பிரமித்தது.

அவர்களின் வலியை உணர்ந்து அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் தொடர்வண்டியில் அவர்கள் விழுப்புரம் பகுதியில் ஏறுகையில் ,புதுகையில் பார்க்கையில் அவர்களின் கை பிடித்து உங்களை நான் நேசிக்கின்றேன் சகோதரி என சொல்லத் தோணும்.

ஒரு நாள் புதுகை செல்வா சார் அலைபேசியில் அழைத்து நீங்க வர அலுவலகம் வர முடியுமா எனக்கேட்டார்.அங்கு சென்ற போது எனது முகநூல் நண்பரும் ,நான் ஆவலுடன் சந்திக்க விரும்பிய எனது தோழி Priya Babu அவர்கள் வந்திருந்தார்கள்...மனம் நிறைய அன்புடன் அவர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.சங்க இலக்கியத்தில் அவரது புலமை வியக்கத்தக்க ஒன்று.


அவரின் தேடல் மிக விரிவான ,ஆழமான ஒன்று..தன்னை போன்றவர்களுக்காக அவர்களின் மதிப்பை மற்றவர்களுக்கு உணர்த்தும் மாபெரும் தேடுதலில்..உள்ளார்.
எப்போதும் புதுமையாக வித்தியாசமாக யோசிக்கக்கூடிய Selva Kumar& புதுகை செல்வா இருவரும் இம்மாத வீதிக்கூட்டத்தின் அமைப்பாளர்கள்..அவர்களால் நாளை ”பாலின சமத்துவ வீதி”யாக பொலிவு பெற உள்ளது...

வீதி கலை இலக்கியக்களம் மனித நேயத்துடன் வளர்கின்றது..அனைவருக்கும் மதிப்பளித்து ,மதிக்க கூடிய களமாக வீதி செயல் படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக வீதி நாளை திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான முழு வீதியாக செயல் பட உள்ளது..

அன்புடன் அனைவரையும் வீதியின் சார்பாக அழைக்கின்றோம்...

உங்களின் அன்பை அவர்கள் பெற்றுச்செல்ல வருவீங்க தானே....


Thursday, 20 October 2016

kavithai potti-படைப்பு

                                             நதிக்கரை ஞாபகங்கள்

என்ன சொல்ல
நினைவலைகள் மணலில்
தடம் பதிக்கின்றன...

கரை புரண்டோடியும் ,கரையழித்து பொங்கியும்
கடல் காதலனை கைபிடித்த காலங்கள்

சிறு பிஞ்சு பாதங்களை வருடி,
சிறார்களின் துள்ளலில் கொஞ்சி மகிழ்ந்ததும்...

காதலர்கள் களிப்பில் மீனாக
அவர்தம் மேனி சிலிர்க்க வைத்ததும்..

பரிசலும் படகுகளும் என் மேனியில்
அலைந்து கடந்ததும்..
படிமங்களாகின..

நீராடை அணிந்து வலம் வந்தவளின்
மணலாடையையும் உரித்தனர்..

உலகுக்கே நாகரீகம் தந்தவளை
நாகரீகமற்று ,
உதிரம் உறிஞ்சிய போது
கொஞ்சம் கொஞ்சமாய் மறித்தேன்...

சலசலத்து ஓடிய கால்கள்
வெடிப்புகள் கண்டு புண்ணாகின..

பெண்பெயர்களைக்கொண்டதாலோ
வாழ வழியற்று தவித்தேன்...

மென்மலர் பூக்கள் சுமந்து
தாகம் தீர்த்தவள்
தடமற்று மறைந்தே போனேன்.





 

செத்து போ பாப்பா

அம்மா அம்மா
என்னடா வேணும் ?
ஏன் தொல்லை பண்ற..

மனம் ஒடிய
சுவரோரம் ஒடுங்கினேன்..

எனக்கு எல்லாம் அம்மாதான்
எட்டு வருடங்களுக்கு பின்
எட்டாக்கனியாகப் பிறந்தவனென
கொஞ்சிமகிழ்பவள் தான் இன்று
கொல்லாதே தள்ளிப்போ என்கிறாள்.

எப்பவும் என்புராணம் பாடியே
எனை இடுப்பில் தூக்கிக்கொண்டே
அலைவாள்...

குலம் தழைக்க வந்த ராசா
மலடி பட்டம் போக்க வந்த துரை
கொண்டாடி மகிழ்ந்தாள்

கை நீட்டியதற்காகவே காட்டிய பொருளை
எல்லாம் வாங்கித்தந்து குதூகலித்தாள்

வீட்டில் நான் வைத்தது தான் சட்டமென்றாள்
எது வாங்கினாலும் எனக்கே தந்தாள்.

வீடு மட்டுமல்ல தெருவே
கொண்டாடியது என்னை.

சொந்தங்கள் அனைத்தும்
தூக்கி கொஞ்சி மகிழ்ந்தது.

அம்மா ஏன்மா வயிறு பெருசாருக்கு
நிறைய சாப்பிட்டியான்னு
என் கேள்விக்கு பதிலாய் 
ஒருகுட்டி பாப்பா இருக்கான்னா...

 அம்மாவின் முட்டிய வயிற்றிலிருந்து
அழுதுகொண்டே பிறந்தாள்
.
 சின்ன சின்ன கைகளுடன்
சின்னூண்டு வாயுடன்
கண்விழிக்க முடியாது விழித்தவளை
கொட்ட கொட்ட பார்த்தபோது
அவள் என் அம்மா பக்கத்தில்

அடம் பிடித்தேன் அருகில் படுக்க..
 அப்பா எனை தூக்க
 அம்மா எனக்கு எட்டாக்கனியானாள் ..
விழுந்து கால் உதறி அழுதேன்



அம்மா வீட்டுக்கு வந்தவுடன்
வேகமாய் அவள் மடியில்
பொத்தென்று விழுந்தேன்.
சொத்தென்று முதுகில் அறைந்தாள்
மூன்று வயதில் முதல் அடி வாங்கினேன்

அம்மாவா அடித்தது நம்ப முடியாது
அம்மா என்றழுதேன்

சனியனே வயிற்றில் விழுறியே
போ தூர என்ற போது
அவள் என் அம்மா இல்லைனு தோணுச்சு

இரவிலாவது அம்மா பக்கத்துல படுக்க
காத்திருந்தேன்...
 அம்மாகிட்ட குட்டிபாப்பாவை
போட்டுவிட்டு ஆச்சிக்கு அருகில்
எனை படுக்க வைக்க ....
தூங்காது இரவு முழுதும் அழுதேன்.

என் அம்மா எனக்கில்லையா..
பாராட்டு எல்லாம் திட்டாக மாறின
அம்மா எப்பவாவது எனைக்கொஞ்சும் பொழுது
அம்மா மடிமீது விழுந்து புரளுவேன்.

 பாப்பா அழுதால் எனை
உதறி அவளைகொஞ்சுவாள்.

என்னை யாருக்கும் பிடிக்கல
பாப்பா வந்ததுல இருந்து ...

எனக்கு பாப்பா வேண்டாம்
செத்து போ பாப்பா.



Sunday, 9 October 2016

அப்போ...

                                                     த.மு.எ.க.ச வின்
                                                            திடல்
                          இலக்கிய சந்திப்புக்காக எழுதப்பட்ட கவிதை

அப்போ
           தண்டால் பயிற்சி இனி
           தண்டம் தானா...

          குனிந்த முதுகெல்லாம்
           நிமிர மறுக்குதே..
     
        கப்சிப் வாயிலிருந்து
         கரமுர ஒலி எப்படி...

இப்போ
        பன்னீர் தூவி வரவேற்க வேணுமோ..
 அப்போ

படக்கென்று எழுந்து நடந்து
பதற வைக்குமோ...

யார் சொல்வது உண்மை
தடுமாறுகிறது மெய்..

சொல்வது தமிழச்சி எனில்
வெல்வது யார்?

சரியான வாய்ப்பு உனக்கு
முடிந்தால் நோய் நீக்கு

இல்லையெனில் முற்றிலுமாக
அழித்துவிடு

லோலோ என அலையவைக்காமல்
அப்போலோ மௌனம் கலை
இறுக்கம் தளர்..

அப்பாவாவது சுவாசிக்கட்டும்
நிம்மதியாக..





Saturday, 8 October 2016

ரெமோ

ரெமோ

படிக்க வேண்டாம்
பணிபுரிய வேண்டாம்
டாக்டர் பொண்ணா பாத்து
டாவடிச்சு லவ்பண்ண வச்சு ஏமாத்தி
கல்யாணம் பண்ணா போதுமா?
சிவகார்த்திகேயன்..

Thursday, 6 October 2016

இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...

இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...

சிலநாட்களுக்கு முன் அன்புடன் ,சகோதரி நல்லாருக்கீங்களா..கொஞ்சம் அலுவலகத்துக்கு வர்றீங்களா..என்று அழைத்த போது கூட இப்படி எதிர்பார்க்கவில்லை..அலுவலகம் நிறைந்த புத்தாடைகளைக்காட்டி உங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புதிய ஆடைகள் வழங்க நினைக்கின்றேன்...என்று எவ்ளோ வேணும்னு கேட்ட போது மலைத்தே போனேன்...ஒரு 50 குழந்தைக்கு கொடுக்க முடியுமா அண்ணா என்றேன்..எவ்ளோ வேணுமோ எடுத்துக்குங்கம்மா என்றார்..இன்று 68 குழந்தைகளுக்கு ரூ 50,000 மதிப்புள்ள ஆடைகளை மாணவிகளுக்கு மனம் நிறைய வழங்கி மகிழ்ந்தார்.
 
இவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கவிஞர் முத்துநிலவன் அண்ணாவும் கலந்து கொண்டதைக்காண கண் கோடி வேண்டும்..நன்றி அண்ணாஸ்..


புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் இன்று[6.10.16] மாலை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வண்ணஆடைகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சங்கத்தின் மாநில உறுப்பினரான திருமிகு முத்துநிலவன் அவர்களும் திருமிகு ஏ.ஆர்.எம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் திருமிகு இரவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

தலைமையாசிரியர் திருமிகு கோ.அமுதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து தலைமையுரை ஆற்றினார்.








புதுக்கோட்டை ஐக்கியநல கூட்டமைப்பின் மாவட்டத்தலைவர் திருமிகு பஷீர் அலி அவர்கள்..மாணவர்களுக்கு சேவை செய்வதன் அவசியத்தைக்கூறி மேலும் பல உதவிகள் செய்ய காத்திருப்பதாகக் கூறிய பொழுது மாணவிகள் கரவொலியால் தங்களது மகிழ்வைத் தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமிகு ஏ.ஆர்.எம்..அவர்கள் தங்களது சகோதரிகள் இப்பள்ளியின் முன்னால் மாணவிகள் என்றும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகக்கூறியது அனைவர் மனதையும் நெகிழ வைத்தது.

கவிஞர் முத்துநிலவன் அவர்கள்..மாணவிகளுக்கு புதிய வண்ண ஆடைகளை வழங்கிய போது அவர்கள் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை.மேலும் அவர்.தனது சிறப்புரையில் பாடம் படிப்பது மட்டும் கல்வியல்ல..அடிப்படையில் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் அனைத்துமே அறிவாகும்...பெண்கள் எதற்கும் துணிவுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற வேண்டும்.சமூக சூழ்நிலை உங்கள் கல்விக்கு இடையூறு தந்தாலும் கல்வியில் முன்னேறி வெற்றி பெறுவதே வாழ்வின் இலட்சியமாகும் ..மதிப்பெண்கள் மட்டும் கல்வியில்லை...நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதும் முக்கியமான ஒன்றாகும் என மாணவிகள் மகிழும் படி சிறப்பானதொரு உரையாற்றினார்.


தமிழாசிரியர் கிருஷ்ண வேணி அவர்கள் அனைவருக்கும் கவிதை நடையில் நன்றி பாராட்டி நன்றியுரை கூறினார்.

முதுகலைத்தமிழாசிரியர் திருமிகு பரமசிவம் அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பள்ளிக்கு மேலும் பல உதவிகளை செய்து தருவதாகக்கூறி திருமிகு பஷீர் அலி அவர்கள் கூறிய போது இவர்களைப்போன்ற கொடையாளிகளால் அரசுப்பள்ளிகள் வளம் பெறுகின்றது என பள்ளியின் ஆசிரியர்கள் கூறி மகிழ்ந்தனர்.

Tirupur Tamil Paleo Conference - Mr.Manoj Vijayakumar - Paleo for Obesit...




எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி,தமிழ்நாட்ல இருந்து நீரிழிவு நோயை துரத்தியே தீருவோம்,உடல் எடை நோயைத்தீர்ப்போம்னு உண்மையை சொல்லும் போது நம்பாம இருக்க முடியல...@ஆரோக்கியம்&நல்வாழ்வு என்ற முகநூல் குழுவில் பாருங்களேன்..

Tuesday, 4 October 2016

பெண்

1980-
உடைகள் மாறின
உலக்கைகள் தடை செய்தன
 வெளியை

நிம்மதியான உறக்கம்
நிகழ மறுத்த காலம்

 இச்சைக்கு கால்கள் விரியக்கூடாதென
ரிப்பனால் கட்டிப்போடப்பட்டன...

அன்று முதல் இன்று வரை
இருகால்களும் கைகளும்
சுதந்திரமிழந்தன...

எங்கு சென்றாலும் ஒருகை இல்லாதவள்
போலவே பழக்கப்படுத்தப்பட்டது..

ஓடியகால்கள் தடுக்கிவிழாமல்
நடக்கவே சிரமப்பட்டன..

வெடிச்சிரிப்பு மத்தாப்பானது..
நான்குசுவர்களுக்குள் எல்லை சுருங்கியது.

ரேடியோ ஒன்றே உலகு காட்டியது.
ஆண்களிடம் பேசுவதும்
அவர்களைப்பார்ப்பதும்
தீண்டாதவையாகின.

கல்வியைவிட திருமணத்திற்கு
தயாராகவே நாட்கள் கழிந்தன..

2016
உலக்கைகள் முறிந்தன
உடைகள் மாறின

கால்கள் விரித்து ஓடவும் ஆடவும்
தூங்கவும் முடிகின்றது

இருகைகளும் இருப்பை உணர்ந்தன.


எல்லைகள் விரியத்துவங்கி விட்டன
உலகம் ஒருவிரலில் சுருண்டுவிட்டது

திருமணத்தைவிட கல்வி முக்கியமானது

எல்லாம் மாறின..
வெளி இல்லையென்றாலும்
அச்சமின்றி வாழ்ந்த காலமில்லை
இப்போது...

அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..



Monday, 3 October 2016

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...