Saturday, 22 October 2016

வீதி கலை இலக்கியக்களம் 32 -23.10.16

வீதி கலை இலக்கியக்களம்

அன்புடன் அழைக்கின்றோம்...

இம்மாதச் சிறப்பு-திருநங்கைகளுக்கான வீதி...

”பாலின சமத்துவ வீதி”யாக நாளை புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் ..காலை 9.30 மணி அளவில்...

வேறு உலகத்தினரோ? என நினைத்தவர்கள் ஆனால் இன்று என் பெரு மதிப்பிற்குரியவர்கள்.

சிறு வயதில் அப்படித்தான் நினைத்தேன்...அவர்களை மோசமாக திரைப்படங்களில் காட்டிய போது ..ஏதோ ஒன்று அவர்களிடமிருந்து விலக்கியது....

ஒடுக்கப்பட்டவர்களில் கீழ்சாதி மக்கள்..அவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற எனது கருத்தை மாற்றி பெண்களை விட ஒடுக்கப்பட்டவர்களாக மாற்று பாலினத்தவர்கள் இருப்பதைக்காட்டியது...

”லிவிங் ஸ்மைல் வித்யா “என்ற நூல்..முதன் முதலாக அவர்களை நேசிக்க ஆரம்பித்த கணம் அது.அந்நூலை எழுதிய சரவணன் அலைஸ் வித்யா அவர்களிடம் பேசும் வாய்ப்பு தம்பி வி.சி. வில்வம் மூலம் கிடைத்தது.வாழ்வில் முதன் முதலாக தன்பால் மாறிய சகோதரியிடம் பேசிய போது மனம் பிரமித்தது.

அவர்களின் வலியை உணர்ந்து அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் தொடர்வண்டியில் அவர்கள் விழுப்புரம் பகுதியில் ஏறுகையில் ,புதுகையில் பார்க்கையில் அவர்களின் கை பிடித்து உங்களை நான் நேசிக்கின்றேன் சகோதரி என சொல்லத் தோணும்.

ஒரு நாள் புதுகை செல்வா சார் அலைபேசியில் அழைத்து நீங்க வர அலுவலகம் வர முடியுமா எனக்கேட்டார்.அங்கு சென்ற போது எனது முகநூல் நண்பரும் ,நான் ஆவலுடன் சந்திக்க விரும்பிய எனது தோழி Priya Babu அவர்கள் வந்திருந்தார்கள்...மனம் நிறைய அன்புடன் அவர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.சங்க இலக்கியத்தில் அவரது புலமை வியக்கத்தக்க ஒன்று.


அவரின் தேடல் மிக விரிவான ,ஆழமான ஒன்று..தன்னை போன்றவர்களுக்காக அவர்களின் மதிப்பை மற்றவர்களுக்கு உணர்த்தும் மாபெரும் தேடுதலில்..உள்ளார்.
எப்போதும் புதுமையாக வித்தியாசமாக யோசிக்கக்கூடிய Selva Kumar& புதுகை செல்வா இருவரும் இம்மாத வீதிக்கூட்டத்தின் அமைப்பாளர்கள்..அவர்களால் நாளை ”பாலின சமத்துவ வீதி”யாக பொலிவு பெற உள்ளது...

வீதி கலை இலக்கியக்களம் மனித நேயத்துடன் வளர்கின்றது..அனைவருக்கும் மதிப்பளித்து ,மதிக்க கூடிய களமாக வீதி செயல் படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக வீதி நாளை திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான முழு வீதியாக செயல் பட உள்ளது..

அன்புடன் அனைவரையும் வீதியின் சார்பாக அழைக்கின்றோம்...

உங்களின் அன்பை அவர்கள் பெற்றுச்செல்ல வருவீங்க தானே....


3 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  2. நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உங்கள் அனைவரின் முன்னெடுப்புகளுக்கும் முன்னடப்புகளுக்கும் அன்பான வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...