Sunday, 18 September 2016

”க ”இலக்கிய சந்திப்பு

                                             ”க” இலக்கிய சந்திப்பு
கரம்பக்குடியில்18.9.16 நேற்று த.மு.எ.க.ச வின் கரம்பக்குடி கிளை சார்பாக 
க இலக்கிய சந்திப்பின் முதல்கூட்டம் நடத்தப்பட்டது.

  தமிழோடு கலந்து ஒரு நாள் முழுவதும் இருந்தது மறக்க முடியாதது.
நான்கு அமர்வுகளாக நடத்தப்பட்ட நிகழ்வில்  எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் ”ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை”நூலும்,எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்களின் நூலும் சிறப்பாக கவிஞர் சுரேஷ்மான்யா மற்றும் த.மு.எ.க.ச.வின் மாவட்டத்தலைவர் திருமிகு இரமா.இராமநாதன் அவர்களாலும்  மிகச்சிறப்பாக விமர்சனம் செய்யப்பட்டன.

கவிதைகளாலும் பாடல்களாலும் நிகழ்வை த.மு.எ.க. ச உறுப்பினர்கள் அலங்கரித்தனர்.மறக்க முடியாத அந்நிகழ்வில் வாசிக்கப்பட்ட என் கவிதை...

                                        ”க” இலக்கிய சந்திப்பு

க- ஓரெழுத்து அகராதி
      உயிரின் முதலும்
    மெய்யின் முதலும்
    புணர்ந்து பிறந்த
    காதலின் வடிவம்
  உயிர் மெய்யின் உருவம்.

க- இதயத்திலிருந்து பிறக்கும்
     வல்லினத்தின் முதல்
      ஓசையின் வடிவம்

க-கல் என்பதன் முதன்மை
     ”கல்”மலையின் சிறுதுளி
      “கல்”மனித வளர்ச்சியின் வேர்.

க-தமிழனின் உயர்வை
    உலகுக்கு உணர்த்திய
    கலாமின் முதலெழுத்து

க-தமிழனின் வண்ணம் கூறும்
   உழைப்பின் நிறம் கூறும்
  தமிழ்ச்சொல்லின் முதலெழுத்து.

க-என்று எழுதினேன்
எனையா என்றருகில் வந்தது
காடு
அழுகையுடன் அழிந்து போன
கதை கூற.

க- என்றெழுத
ஓடி வந்தது குளம்
மனம் வெடித்து பிளந்து போன
நிலை கூற.

க-என்றதும்
காற்று கடிதில் வந்து
முதலில் எனைக்குளிப்பாட்டு
இல்லையெனில் அழிந்து போவீர்
என அச்சுறுத்தியது.

க-கர்நாடகாவின் முதலெழுத்து
தண்ணீருக்கான நம்
கண்ணீரின் தலையெழுத்து.

க-க க போ எனச் சொல்லிப்போகும்
காமெடி பீசு அல்ல.

க -கவிதையின் முதல்
    கதையின் முதல்
   கட்டுரையின் முதல்
    கலை இலக்கியத்தின் முதல்

ஓ....கரம்பக்குடியின் முதலும் அதுவே
      க- இலக்கியச்சந்திப்பு இன்றி
     கரம்பக்குடி இல்லையெனும் படி
      உடலாய் உயிராய்
     உயிர்மெய்யாய் வளர வாழ்த்துகள் .

நிகழ்வு திருமிகு ஸ்டாலின் சரவணன் மற்றும் அவர்களின் முயற்சியால் மிக அருமையாக இருந்தது ..வாழ்த்துகள் அனைவருக்கும்.வாய்ப்பை நல்கிய ஸ்டாலினுக்கு நன்றி.





  

8 comments:

  1. ஆகா! கம்பன்,கனித்தமிழ், கரும்பு, கணித்தமிழ்,... கரம்பக்குடி.. பிரமாதம்! - கிரேஸ் ;-)

    ReplyDelete
    Replies
    1. அட கீதாக்கும்....நன்றிம்மா..

      Delete
  2. நிகழ்வுப்பகிர்வுக்கு நன்றி. அமைப்பின் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தவறாமல் உங்கள் வருகையும் வாழ்த்தும்...மேலும் எழுதத்தூண்டுகின்றது நன்றி அய்யா.

      Delete
  3. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  4. நல்லதொரு நிகழ்வு பற்றிய பகிர்வு. பாராட்டுகள் - நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...