Monday, 4 July 2016

பவித்ரா

அம்மா பவித்ரா வரலம்மா...

 எட்டாம் வகுப்பைக்கடந்து போகும் முன் பவித்ரா இருக்காலான்னு பார்த்துவிட்டு கடந்து செல்வது வழக்கம்.

 சிலநாட்கள் விடுப்பில் இருந்து விட்டு சென்ற பொழுது எட்டாம் வகுப்பு குழந்தைகள் ஓடி வந்து ,அம்மா என அழைத்துவிட்டு அமைதியாக தங்களுக்குள் சிரித்துக்கொண்டு நின்றனர்..

என்னாடான்னு கேட்டு எங்க பவித்ராவைக்காணும்னு கேட்டேன்.. அம்ம்ம்ம்ம்மான்னு இழுத்து அவ வயசுக்கு வந்துட்டான்னு சொன்னார்கள்...மனதில் ஓர் அழுத்தம் வந்தது...நல்லா இருக்குற குழந்தைகளே சிரமப்படுவாகளே...இந்தக்குழந்தை என்ன பண்ணுமோன்னு தோன்றியது..








 ஆறாம் வகுப்பில் என்னிடம் வந்த பொழுது அவர்கள் அம்மா பவித்ரா கொஞ்சம் அடம் பண்ணும் பார்த்துக்குங்கன்னு சொல்லிவிட்டு சென்றார்கள்.பார்த்து எழுதுவா ஆனா படிக்கத்தெரியாது..

நாளடைவில் அவள் சிறப்புக்குழந்தைன்னு தெரிந்து கொண்ட போது ,அவளின் அம்மாவை அழைத்து இவளைப்போல உள்ள குழந்தைகட்கு என சிறப்பு பள்ளி உள்ளது, அதில் சேர்த்தால் இவள் இன்னும் நல்லா வருவாம்மா என்றேன்..

 உடனே இல்லம்மா இவ நல்லாத்தான் இருக்கா என்றார்..அம்மான்னா அப்படித்தானே சொல்வார்கள்.
 மேலும் இங்கன்னா இவளே வந்துடுவா...அந்தப்பள்ளிக்கு கொண்டுவிட என்னால முடியாதும்மா என்றபோது, என்னால் முடிந்தவரை பார்த்துக்கொள்கின்றேன் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து சொல்லிக்கொடுப்பேன்...
சரியா படிச்சு எழுதிட்டா ஒரு சாக்லேட் உண்டு..

 நான் வராத நாட்களில் அவளின் தன்மை மாறி எல்லா குழந்தைகளையும் அடிக்கிறாள்னு சக ஆசிரியர்கள் சொல்வார்கள். பெரிய மாணவிகள் அவளை சீண்டி வம்பிழுக்கும் போது கல்லால் அடித்துவிடும் முரட்டுத்தனம் உடையவள்..

வகுப்பிலேயே சில நேரம் சிறுநீர் கழித்துவிட்டு குற்ற உணர்வில் எழாமல் பிடிவாதம் பிடிப்பாள்... அவளைவிட வலிமைகுறைந்த மகேஸ்வரியை எப்போதும் அடித்துவிடுவாள்..செல்லம் கொடுத்து கெடுப்பதாக என்னை குறை.. கூறுவார்கள் .

அவள் ஏழாம் வகுப்பு சென்றால் என்ன செய்வாளோன்னு கவலை வரும்.. 

தற்போது எட்டாம் வகுப்பில் படிக்கிறாள்..அவள்தான் வயதுக்கு வந்துவிட்டதாக ,குழந்தைகள் கூறினார்கள்.

அம்மா, அவ முதல்ல உங்க கிட்ட தான் சொல்லச்சொன்னாளாம்..அவ அம்மா உங்கள தேடிக்கிட்டு வந்தாகம்மான்னு சொன்ன போது அந்தக்குழந்தையின் மனதில் இன்னும் இருக்கிறேன்னு மகிழ்வாய் இருந்தது.

 சென்ற வார பாடவேளையில் குழந்தைகட்கு சிறுவர் மணி,சுட்டிவிகடன் புத்தகங்களைக்கொடுத்து படிக்க கொடுத்து, பவித்ராவையும் சேர்த்துக்கடா என்றேன்..

 சிறிது நேரத்தில் பவித்ரா ,அடம் பிடித்து தனக்கென புத்தகத்தைப்பெற்று அவள் படித்துக்கொண்டிருந்த போது மனம் நெகிழ்ந்து போனது.

 இப்போது அவளின் அடம் குறைந்துள்ளதை உணர முடிகிறது...இருந்தாலும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய குழந்தை...காலம் அவளை சிறக்கச்செய்யட்டும்.
ஒரு ஓரமாகக் குனிந்து மும்மரமாகப் படிக்கிறாள்...எங்கள் பவித்ரா.

4 comments:

  1. பவித்ராவை வாசித்தேன்...
    நல்ல பணி...
    பவித்ரா உலகம் புரிந்து வாழப் பழகிக் கொள்ளட்டும்...

    ReplyDelete
  2. சிறப்பு குழந்தைகள் அனைவரும் பல்வேறு தனித்திறமைகளைக் கொண்டவர்களே. அதனைக் கண்டறிவது பெற்றோர் & ஆசிரியர் கடமை...

    ReplyDelete
  3. ஃபேஸ்புக்கிலும் படித்து நெகிழ்ந்தேன். தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

    ReplyDelete
  4. பவித்ரா!
    அருமையான பதிவு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...