Tuesday, 26 January 2016

kaviyarangam-கவியரங்கம்[26.1.16]

                                       சமூகநீதி கூட்டமைப்பு-நாகுடி 
                         66 ஆம் ஆண்டு குடியரசுதினவிழா-கவியரங்கம்
                                   தலைப்பு -சட்டம் பேசு

கவிஞர் சோலச்சி 10 நாட்களுக்கு முன் அழைத்து நாகுடியில் ஒரு கவியரங்கம் நீங்க கவிதை படிக்கனும்னு கேட்டபொழுது சரி என்றேன்..
என்னுடன் கவிஞர்  சோலச்சி,கவிஞர் அப்துல் ஜலீல்,
கவிஞர் புதுகைப்புதல்வன்மற்றும் சிவகவி காளிதாஸ் ஆகியோருடன் ஆலங்குடி கவிஞர் அருள்மொழி கவியரங்கத்தலைவராக இருந்தார்...

எனது சற்றே நீள்கவிதை


சட்டம் பேசு

ஏன் பேச வேண்டும் சட்டம்?
எதற்காக அறிதல் வேண்டும் சட்டம்?

எளியோரை வலியோர் வீழ்த்துவதை
தடுக்கவே சட்டம் பேசு...

உனக்குள்ள உரிமை
உன்நாட்டில் ஒலிக்கவே
சட்டம் பேசு
உன்வாழ்வை நீயே நிர்ணயம்
செய்யவே சட்டம் பேசு..

செப்படி வித்தைகளால்
சுரண்டும் ஆதிக்கச்சக்திகளுக்கு
செருப்படி கொடுக்கவே சட்டம் பேசு

தூக்கிலிடும் போதும்
என் நாட்டை காண்பது
என் உரிமை என முழங்கி
கந்திறந்தே தூக்கில் தொங்கிய
பகத்சிங்கின் வழி நின்று
சட்டம் பேசு.

பெண்ணென்று இகழ்ந்து
நாட்டைப்பிடுங்கிய ஆங்கிலேயரை
எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து
எட்டும் வரை படைதிரட்டி
விரட்டி ,விரட்டி சிவகங்கையை மீட்ட
வேலுநாச்சியாரின் வழி நின்று
உரிமை பேசு.

ஒன்றுபட்ட இந்தியாவின்
ஒற்றுமை குலைக்கும் தீவிரவாதிகளை
கதறவைத்து கூண்டிலேற்றவே
சட்டம் பேசு.

மொழி காக்க உயிர்தந்த
மொழிப்போர் தியாகிகளின்
வீரத்தில் நின்று சட்டம் பேசு.

உனது நிலம் அழிப்பவனை
உனது நீரைத்தர மறுப்பவனை
உனது சுற்றம் கெடுப்பவனை
தண்டிக்கவே சட்டம் பேசு.

இறையாண்மைக்கு எதிரான
கரையான்களை அழித்தொழிக்கவே
சட்டம் பேசு.

கீழ்வெண்மணி மீண்டும்
தோன்றாதிருக்கவும்
தீண்டாமை வளர்ப்பவர்களை
தீயென எரித்திடவும்
சட்டம் பேசு.

வார்த்தை சாட்டைகளாலும்
உடல் சிதைக்கும் அமிலத்தாலும்
பாலியல் வன்முறையாலும்
பெண்களைச்சிதைப்போரை
மோதி மிதித்திடவே
சட்டம் பேசு.

வாக்கு கொடுத்து
வாக்கு பெற்று வென்றவுடன்
வாக்கு மறந்தவர்களை
வாக்குகளால் தோற்கடிப்போமென்றே
சட்டம் பேசு.

உள்நாட்டு வியாபாரி அழிய
அயல்நாட்டு வணிகத்தை
ஊக்குவிக்கும்நோக்கம்
கேட்டு சட்டம் பேசு.

நீ கட்டும் வரிப்பணம்
நீராக சிதறடிக்கும்
காரணமறிய சட்டம் பேசு.

உயர்நிலையில் மாணவர்கள்
உயிர்விட்டு மாய்வதன்
வேதனை அறிய சட்டம் பேசு.

சகிக்க முடியாத சங்கடகளை
சட்டத்தால் வென்றிடவே
சட்டம் பேசு.

ஊழல் செய்து
லஞ்சம் வாங்கி
மக்களுக்கு பணிசெய்ய
மறுப்பவனை உலகறியச்செய்ய
சட்டம் பேசு.

நம்மை நாமே ஆட்சி செய்ய
அருமையான சட்டம் இயற்றிய
பாரதம் போற்றி புகழும் மாமேதை,
அண்ணல் அம்பேத்காரின்
சட்டம் பேசு.

சாக்குப்பையே பலகையாக்கி
கூனிக்குறுகி கல்வி கற்றவர்.

மாட்டுவண்டியில் ஏற்ற மறுத்தவனை
மனதிற்குள் சகித்தவர்.

அவர் தொட்ட இடத்தையெல்லாம்
தீட்டென்று கழுவியது வீணர் கூட்டம்.

குளம் நிறைய நீரிருக்க
குடிக்க நீரின்றி வாடியவர்.

பசியெடுக்க தேநீர் தர மறுத்தவர்களை
பகிஷ்கரிக்கவே  கல்வி கற்றார்.

யார் அவரை அவமதித்தனரோ?

யார் அவரை தீட்டென்றார்களோ?

யார் அவர் நின்ற இடத்தைக்
கழுவினார்களோ?

யார் அவருக்கு நீரும் தேநீரும்
தரமறுத்தனரோ?

யார் அவர் கல்விபயில்வதைத்
தடுத்தார்களோ?

அவர்களுக்கே சட்டம் இயற்றிய
மாதவப்புதல்வன்...

அவர்கள் வாயாலேயே தன்னை
புகழ வைத்த ஒழுக்க சீலர்.

அவர்களுக்குரிய இடத்தை
அவரே அறியவைத்தார்.

வடநாட்டு பெரியார்.
வடநாட்டு சாக்ரடீஸ்
வடநாட்டு பெர்னாட்ஷா
அண்ணல் அம்பேத்கர்
அருளிய சட்டம் உணர்
சட்டம் உணர வை
சட்டம் பேசு...
--------------------------------------------------------------------------------------------------------------------------






8 comments:

  1. நீள்கவிதையாயினும் ரசிக்கும்படி இருந்தது. நன்றி.

    ReplyDelete
  2. எந்நாளும் விழா விழா என
    புதுகையே களை கட்டுகிறது
    மகிழ்ந்தேன் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
  3. அம்பேத்கார் பறிய நினைவு நன்று/

    ReplyDelete
  4. நல்லதோர் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  6. அருமை சகோதரி! அது சரி புதுகையில் எப்போதும் தமிழ்த் திருவிழாதான் போலும்...தொடருங்கள்!

    ReplyDelete
  7. வணக்கம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...