Saturday, 10 January 2015

27.12.14 கம்பன் விழா கவியரங்கில்

கம்பன் விழா கவியரங்கில்

சூர்ப்பனகைத்தோளில் நிழற்படக்கருவி...தலைப்பில்

27.12.14 அன்று மாலை மணப்பாறையில் சிறப்புரை முடித்த மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் 5மணி அளவில் நான் மிகவும் மதிக்கும் சம்பத்குமார் சாரின் அழைப்பு...இன்று நடக்க உள்ள கம்பன் விழா கவியரங்க நிகழ்வில் ரேவதி என்பவர் வரவில்லை அவருக்கு மாற்றாக நீங்கள் “சூர்ப்பனகைத் தோளில் நிழற்படக்கருவி” என்ற தலைப்பில் கவிதை படியுங்க உங்களால் முடியும்னு நம்பிக்கை கூறி வைத்துவிட்டார் அலைபேசியை..ஒரு நிமிடம் நம்ப முடியாமல் நாமா? கவிச்சான்றோர்கள் நிறைந்த அவையிலா ?அதுவும் குறுகிய காலத்திற்குள்ளாகவா...வேறு வழியில்லை ...யோசிக்க கூட நேரமில்லை 6.30மணிக்கு போகனும் ...உட்கார்ந்து எழுதத்துவங்கி விட்டேன்...பிரதி எடுக்க நேரமின்றி விழா நடந்து கொண்டிருக்கையில் எழுதிக்கொண்டிருந்தேன்..

கவிஞர்கள் தங்கம் மூர்த்தி,தஞ்சை இனியன் ,சக்திஸ்ரீ,ஆகியோருடன் நானும் .

கவிதை-சூர்ப்பனகைத் தோளில் நிழற்படக்கருவி

சூர்ப்பனகை நினைக்குமுன்னே
நினைத்ததெல்லாம் நிகழ்த்திடுவான்
இப்போதவள் கேட்டதையெண்ணி
மலைத்தே மீண்டும் கேட்டான்
கேட்டதென்ன தங்காய்..?



கொஞ்சும் இயற்கையில் கலந்தேன்
கொஞ்சமும் மனமில்லை பிரிய
கண்கள் போதவில்லை உனைப்போல
கண்களிருபதும் எனக்கில்லை..
ஆசைப்பட்ட காட்சிகளெல்லாம்
மீண்டும் மீண்டும் காண
நீயே வழிக்காட்டென்று அடம் பிடித்தாள்.

சீதையை சிறைப்பிடிக்க கலங்காதவன்
கலங்கினான்..தவித்தான் .

ஆசைத்தங்கையின் ஆவல்தீர்க்க..
வழியறியாமல்..திகைத்தான்
மண்டோதரியின் தொலைக்காட்சியில்
கண்டான் கேனான் விளம்பரம்..

தரை அதிர ,தலைகள் குலுங்க மகிழ்ந்தே
வரியின்றி சலுகை விலையில்
வாங்கித்தந்தானே..நிழற்படக்கருவியை

மலைக்குதித்ததோ விண் இடிந்ததோவென
மகிழ்ந்து ஆசையுடன் அணைத்து வருடினாள்
கங்குலாள் கருவிதன்னை

அன்பு அண்ணனை படமெடுக்க
அய்ந்து தலைகள் உள்ளேயும்
மற்றவை வெளியேயும்..
தலைகள் காணோமென்று
தமையன் தவிக்க..
இடியென சிரித்து தாவிக்குதித்து
கானகம் புகுந்து
காடு,மலை,கடல் அலை,பாடும் குருவி என
கண்டதெல்லாம் படமெடுத்து அலைந்தாளின்
கண்ணில் பட்டான் கார்வண்ணன்

இராவணனை அழிக்கும்
இலக்குடனே பிறந்தாலவள்
உயிருடன் தோன்றி
உயிரை அழிக்கக்காத்த விடமாய்..

தீயசக்தியை அழிக்கவே
தீயத்தன்மைக்கொண்டவளாய்
கம்பனாள் பிறப்பிக்கப்பட்டவள்
இவ்வுலகத்திற்கு மட்டுமல்ல
ஏழு உலகிற்கும் இடியானவள்

இலக்கு நோக்கி கானில் அலைந்தாள்
காலும் அஞ்சும் புயற்காற்றாள்
காலம் வந்ததென கடமை முடிக்க
கங்குலெனவே வந்தாள்
கண்டாள்,கொண்டாள் காமம்
காமத்திற்கே காமம் வரும்
இவளின் காமம் கண்டு..

மன்மதனுக்கோ வடிவமில்லை
இந்திரனோ ஆயிரம் கண்களுடன்
ஆலகால கண்டனுக்கோ மூன்றுகண்கள்
சீச்சீ வேண்டாம் இவர்கள்
உந்தியால் உலகைப்படைத்தோன்
மலையும் மலைக்கும் தோள்கள் கொண்டோன்
கண்டே மயங்கித் தலை சாய்ந்தாள்..
கொடியாய் படர தோள்நாடி
சிவன் எரித்தவனோ உயிர்பெற்றே..
சீர்கொண்ட மேனி பெற்றான்  தோளழகை
கண்களால் விழுங்கிட முடியாமல்

நிழலானவள் நிழற்படக்கருவியில்
சிறைப்பிடிக்கத்துடித்தாள்

பனைமரமொத்த கைகளை
மலையென்றும்
யானையின் துதிக்கையென்றும் எண்ணி
மலைத்தது கருவி

கல் கொண்ட மலையும்
பொன்னணிந்த மலையும் ஈடன்று
நீலமணியணிந்த நல்மலையே
வில் தாங்கும் தோளுக்கு
ஒப்பாகுமென்று முனகியது தனக்குள்
படமெடுக்க முடியாமல் காதலால்
பதறியது கருவியும்
ஆண்டவனைத் தனக்குள் அடக்கும்
ஆவல் கொண்டே அளந்தது
அவனழகை...

தோளோடு தோள் ஒரு சேர காண
முடியாமல் அவள் தவிக்க
மாலவனின் மார்பழகைத் தன்
ஒற்றைக்கண் சிமிட்டி ரசித்தது..

மெல்ல மேல் நோக்கியது
தாமரையோ, முழுநிலவோ,
ஒப்புமோ களங்கம் கொண்ட நிலவு
களங்கமில்லா ஒளி வீசும்
கண்ணனின் திருமுகம் கண்டு
மின்னலென மயங்கியது
ஒளி வீச மறந்து...

தவம் தவமென்ன செய்தது
தலைவனவன் தவம் செய்ய..
அவன் திருவடியால் பெண்மை மலர
புல் ரோமம் சிலிர்த்தாள் புவியன்னை...

ஒளியின் தலைவன் அறியானோ
ஒளியானவன் ஒளியை..

ஒப்பிலா இதழ்களை
ஒப்புமோ பவளமும்..
பிதற்றினாள் பேதையவள்..கருவியிடம்

படமெடுக்கத் திணறிய கருவியும்
பகர்ன்றது மரவுரிகள் செய்த தவம்
மறந்தனவோ மணிஆடைகள்
நன்றி நன்றி கண்ணாரக்கண்டேன்
நாராயணனின் முழுஅழகையென

கொண்ட காமம் மனதைக்கொல்ல
கொண்டவனை தான் ஆசைக்கொண்டவனை
கண்டு கண்டு மகிழவே
நிழலைச்சிறைப்பிடித்தாள்
நிழற்படக்கருவியால்..

பெண் அணங்கின் பேதமையெண்ணி
நகைத்தே ஒளிர்ந்தது கருவியும்

கொல்லும் காமம் கொல்ல
சேரவில்லை இவன் தோளையெனில்
சேர்வேனே மரணத்தை என்றே
மனதுள் புகைந்தாள்..
சுழன்று சுழன்று புகைப்படமெடுத்தாள்
புகையாக இலங்கை புகைச்சூழ

பட்டென்று புகைந்தே அணைந்தது
புகைப்படக்கருவியும்
தவறுக்கு துணைசெய்யேன் என்றே...


















5 comments:

  1. இனிமேல் உங்களைத்தான் கூப்பிடுவார்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா வாழ்த்துக்கள் தோழி மேலும் பல வாய்ப்புகள் கிட்ட வாழ்த்துக்கள் அருமையான சந்தர்ப்பதை சரியாக பயன் படுத் தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. அருமையாக கவிதை படித்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வணக்கம்
    நிகழ்வில் பங்கு பற்றியமைக்கு வாழ்த்துக்கள்..பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...