Thursday, 3 April 2014

வாழ்க்கை போராட்டத்தில்



வாழ்க்கை  போராட்டத்தில்
----------------------------------------

வைகறையில்
 இனிமையாக
கூவி எனை எழுப்பும்
கருப்புக்குருவிகள்
வீட்டின் முன் அறையில்
வீரமாய் சன்னலில்
வீற்றிருக்கும் இடுப்பளவு
கருப்பு குதிரை பொம்மையில்
கலக்கமின்றி முட்டையிட்டு
இருமுறை குஞ்சு பொரித்து
இனிய சந்ததி வளர்த்து
மகிழ்வுடனே சென்றன.

வெறுமை தாக்க
காத்திருந்த என்னை நாடி
கூடமைத்து முட்டையிட்டு
காத்தன மூன்றாம் முறையாய்

எப்போது போவேனென
எதிர்பார்த்து வாசலில்
எட்டி எட்டி காத்திருக்கும்
வம்படியாய் அதை நோக்கி
வாயேன் உள்ளே
என்றாலும் போ போ
என்றே எதிர்நோக்கும்!

ஓர் அதிகாலையில்
முத்தாய் மூன்று குஞ்சுகள்
சுறுசுறுப்பாய் பறந்து பறந்து
இரை தேடி ஊட்டி
வளர்த்தன!

நேற்றிரவு வீடு திரும்பிய
நேரம் நிசப்தம் எனைத்தாக்க
புரியாமல் உள்ளே நுழைய..

கதறிய குருவிகளின் ஓலம்
கேட்டு மனம் கலங்கி
வெளியே வந்தால்
என்செய்வேன்! என்செய்வேன்!

பொல்லாத பூனை தன்
பசியாற்ற கண் திறவா குஞ்சுகளை
புசித்து விட்ட கொடுமைதனை...

பாதுகாப்பேனென எனை நம்பி
பார்ப்புகளை பொரித்து
பத்திரமாய் போய்வாவென
எனை வழியனுப்பிக்காத்திருக்கும்
குருவிகளுக்கு எப்படி ஆறுதல் கூற?

 பூனையின் பசியை நோக்கவோ..
கதறும் தாய்க்குருவியை காணவோ..
இயலாத
கையறு நிலையில் மனம்
கலங்கித் தவிக்கின்றேன்...

காப்பாற்றவில்லையே நீயென
கதறும் குரலைக்

கேட்க முடியாமல் என்
காலைப்பொழுதுகள்
விடிகின்றன
-------------------------
அய்ய்ய்
மீண்டும்
கருப்புகுதிரையில்
கருப்புக்குருவியின் கூடு

வெளியில் பசியோடு
சுற்றுகிறது பூனையும்

இந்த முறை சந்ததி வளருமா?
பூனை பசியாற்றுமா
இரண்டையும் காக்க
தவிப்புடன் நானும்

மகிழ்வும் கலக்கமுமாய்
நான் எழுதிய கவிதையை
நினைவுகூர்கிறேன்

2 comments:

  1. வணக்கம் சகோதரி
    இம்முறை நமது வேண்டல்களால் குருவிக்குஞ்சுகள் புதிதாய் வலம் வரும். பூனையின் பசிக்கு பூட்டுப்போட முடியாது. குருவி கூட்டருகே பூனையின் நடமாட்டத்திற்கு தடை போட முடியுமா என்று பாருங்களேன். தங்கள் இரக்க குணம் பதிவில் ததும்பி நிற்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
  2. ஒன்றை மட்டுமே
    உருப்படியாக
    செய்ய
    முடியும்
    பூனையை கடாசுங்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...