Wednesday, 6 October 2021

முதல் கார் பயணம்

இன்றென் வாழ்வில் மறக்க முடியாத நாள்...7.10.21

தனியாக காரில் நான் காரைக்குடிக்கு  நேற்று மாலை சென்று காலையில் திரும்பி வீட்டை அடைந்த போது எனது சிறகுகள் படபடத்தன...

நானா! நானே நானா! காரை ஓட்டி வந்தது.நம்ப முடியாமல் மகள் நிலா, சித்தி, தம்பி அதிர்ச்சியில் உறைய... நானும் நம்ப முடியாது உறைந்து நின்றேன்..

ஊருக்குள் ஓட்டி பழக முடிவு செய்து காரை எடுத்து பிறகு ஏன் காரைக்குடி செல்லக்கூடாதென்று மாலை 5.30 மணிக்கு கிளம்பினேன்...

எதிரில் வந்த வாகன ஓட்டிகள் நான் புதிதாக காரை ஓட்டுகிறேன் என அறிந்து எனக்கிசைவாக ஓட்டினர்..அன்பு சூழ் ஓட்டுநர்களால் நான் சென்று வர சாத்தியமானது..

மாமா சைக்கிள் பழகக்கற்றுக்கொடுத்த போது விழுந்து எழுந்து பிறகு சைக்கிளில் பறக்க துவங்கிய போது முளைத்த சிறகு பிறகு முதன்முறையாக இருசக்கர வாகனத்தை ஓட்ட  கற்கத்துவங்கிய போது வளரத்துவங்கியது...
பத்தாம் வகுப்பில் வண்டி ஓட்ட அனுமதித்த அம்மா இன்று எனைப் பார்த்தால் உச்சி முகர்ந்து இருப்பார்கள்.

மழையூரில் எனது தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த சரஸ்வதி குமாரி அவர்கள் கார் பயிற்சி எடுத்து லைசன்ஸ் வாங்க அடித்தளமிட்டார்.. அதற்கு பிறகு சிலமுறை ஓட்டி இருந்தாலும் சொந்தக்காரில் ஓட்டுவதே குறிக்கோளாக இருந்தது.

ஒரு மாத காலமாக லக்கி ஸ்டார் டிரைவிங் கிளாஸ் சகோதரர் பிரசாத் அத்தனை பொறுமையாக காரை ஓட்ட பயிற்சி அளித்து வருகிறார் அவருக்கு முதல் நன்றி...

தம்பி சாக்ரடீஸ் காரை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை அளித்து பயிற்சி அளித்தது எனது அச்சத்தை நீக்கியது.

இதோ இன்றென் சிறகுகள் விரியத் துவங்கி விட்டது.... மனதில் சிறிது அச்சமும் நிறைய தன்னம்பிக்கையும் சுமந்து காரை ஓட்டி வந்தது த்ரில்லர் படம் பார்ப்பது போல....

வீட்டில் நிறுத்தி எனக்கு நானே கை கொடுத்து கொண்டேன்..

நான் வந்துவிட்டனா என உறுதி செய்து மகிழ்ந்த தோழி வேணி  என எனது வளர்ச்சியில் பேரன்பு கொண்ட உறவுகள் தோழமைகள் சூழ வாழ்தல் வரம்...