Tuesday, 30 March 2021

தேர்தல் பணி

நானும் தேர்தல் பணியும்...
1988 இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அடுத்த வருடமே சட்டமன்றத் தேர்தல் பணி.திருமானூர் அருகே அழகிய மணவாளன் என்ற ஊரில்...
தேர்தல் நாளுக்கு
முதல் நாள் தான் தெரியும், எந்த ஊரில் பணி  என்பதால் எனது அப்பாவும் கூட துணையாக வர ..பேரூந்தே இல்லாத ஊருக்கு எப்படி போவது?
பணிபுரியும் பள்ளிக்கு இரண்டு பஸ் ஏறி இரண்டு கிமீ நடந்து செல்ல வேண்டும்.பேருந்து இல்லாத போது சிமெண்ட் ஆலைக்கு ஜிப்சம் எடுத்து செல்லும் டிப்பர் லாரியில் ஏறி பல நாட்கள் சென்றிருக்கிறேன்.
அழகிய மணவாளன் ஊருக்கு முதலில் செம்மண் லாரியில் சென்று பிறகு சைக்கிளில் அப்பா கொண்டு விட்டார்கள்..
ஒரு உடைந்த ஓடுகளால் ஆன பள்ளி அது.இரண்டு வகுப்பறைகள் கொண்ட ஒரே ஒரு கட்டிடம்.
ஒரு பக்கம் போலீஸ்காரர் உறங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் செய்வதறியாது அமர்ந்திருந்தேன்.நல்லவேளையாக இன்னொரு பெண் ஆசிரியர் துணைக்கு வந்த பிறகு அப்பா சென்றார்கள்...
இரவு இருபது வயதில் முதன் முறையாக தனியே அத்துவானக் காட்டில் தங்கிய உணர்வு...
காலையில் குளிக்க கழிவறை எங்கே என்று கேட்டபோது பள்ளிக்கு பின்புறம் சற்று தொலைவில் குளத்தைக் காட்டி போக சொன்னார்கள்..

பயத்தில் குளிக்காமல் முகம் மட்டும் கழுவிக் கொண்டு தேர்தல் பணி செய்தேன்...இரவு ஒரு மணிக்கு கடைசி பூத் என்பதால் தாமதமாக வந்தனர்.வாக்குப்பெட்டியை ஏற்றிய  லாரியில் நல்லவேளையாக எங்களையும் ஏற்றிக்கொண்டு அரியலூரில் இறக்கிவிட்ட போது மணி இரண்டு...

இரண்டு கிமீ தொலைவில் உள்ள வீட்டிற்கு ,முதன் முறையாக தனியே நாய் ஊளையிடும் சத்தத்திற்கு அஞ்சி ஓடாத குறையாக ஓடி அடைந்தேன்.அப்போதெல்லாம் அலைபேசி இல்லை என்பதால் தகவல் தெரிவிக்க முடியாத நிலை...

அடுத்து வந்த அத்தனை தேர்தல் பணிகளும் இதே நிலை தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்
 32 வருடங்கள் கழித்து பாராளுமன்ற தேர்தல் பணி இலுப்பூருக்கு அருகே ஒரு கிராமத்தில்... அங்கு ஒரு மோட்டார் ரூம் போல தொங்கிய கதவு தான் கழிப்பறை என்றதும்..சொல்ல முடியாத துயர்..
பெண்கள் தங்கள் மாதவிடாய் துன்பத்திலும் தேர்தல் பணிக்கு வரும் போது இப்படி கழிவறை இருந்தால் என்ன செய்வது?
சில நேரங்களில் ஐந்து கிலோமீட்டர் கூட நடந்து சென்று பணி பார்த்து திரும்பியது உண்டு...

முகநூலில் வேதனையைப் பகிர்ந்ததும் பதறித் துடித்த தலைமைஆசிரியர் பள்ளிக்கு பின்புறம் இருந்த வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி கொள்ள அனுமதி வாங்கி தந்தார்.. ஒரு வழியாகப் பணி முடித்து, வாக்குப்பெட்டி எடுக்க பதினோரு மணி ஆயிற்று..

வாக்கு பதிவு முடியும் வரை சில ஊர்களில் உணவு ஏற்பாடு செய்து தருவார்கள்.முடிந்ததும் மாலை டீக்கடைகள் கூட அடைக்கப்பட்ட நிலையில் உணவுக்கு வழி ஏது?
இரவு வீடு வந்தபிறகு தான் உணவு..

கார் இருந்த ஆசிரியர்கள் உடனே கிளம்ப மற்ற பெண் ஆசிரியர்கள் அந்த நள்ளிரவில் பேரூந்தே இல்லாத பேரூந்து நிலையத்தில் காத்து இருந்தார்கள்.ஒரு நாள் முழுவதும் சாப்பிட நேரமின்றி பணியாற்றி தேர்தல் பணிக்கான கடமையைச் செய்யும் ஆசிரியர்களின் நிலைமை இது தான்...

ஒரு கழிப்பறை தண்ணீர் வசதியுடன் கேட்கிறோம் அதைக்கூட தர இயலாத நிலை தான்  சுதந்திர இந்தியாவில்...
இதோ அடுத்த தேர்தல் பணிக்கு தயாராகி விட்டோம்... 
இந்த கோடைகாலத்தில் எந்த பள்ளியில் பணி என்று தெரியாமல் தவிக்கும் நிலை.எனது தோழி தேர்தல் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு கீழே மூன்று ஆண் ஆசிரியர்கள்...இரவு பாதுகாப்பு இல்லாத பள்ளியில் இவர்களோடு வாக்குப் பெட்டிகளைப் பாதுகாத்து மறுநாள் பணி புரிய வேண்டும்...

எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை..அதற்கு துணிந்தே தான் பணியை ஏற்கின்றோம்..பல ஆசிரியர்களை தேர்தல் பணியில் இழந்து உள்ளோம்.. இருந்தாலும் இந்த நிலையில் சற்றும் மாற்றமில்லை என்பது  வேதனையான உண்மை....