Wednesday, 30 December 2015

பசங்க -2

திரைப்படம்னா இது தாங்க படம்-------பசங்க -2

வாழ்த்துகள் இயக்குனர் பாண்டிராஜ் சகோதரருக்கு

தரமான,தேவையான,,எந்த வித ஆபாசமும் இல்லாமல் சமூக அக்கறையோடு திரைப்படம் எடுத்து அதை வெற்றி ப்படமாக திரையிட்டமைக்கு..

வர்த்தரீதியாக மாறிப்போன கல்வி வியாபாரத்திற்கு ஒரு சாட்டையடி...

தனக்கு கிடைக்காத எல்லாம் குழந்தைகட்கு கிடைக்கணும்னு குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு ஒரு சவுக்கடி....

எத்தனை போலியான வாழ்க்கையை குழந்தைகட்கு கொடுத்து...அதுதான் சரி என்ற ஆதிக்கமனப்பான்மைக்கு,வெற்று ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு குண்டு வைத்து தகர்த்து உள்ளார்...

இதில் சூர்யா பாடம் எடுக்கிறார் ,,,வளவளன்னு பேசுறார்னு சொன்னவங்களுக்கு எல்லாம் அவர்கள் எதிர்பார்த்த ஆபாசக்காட்சிகள் இல்லையென்ற வருத்தம் இருக்கலாம்...ஆனா வேற வழியில்லை ....திரைப்படத்தால் அழிந்து போன இளந்தலைமுறைக்கு இப்படிப்பட்ட திரைப்படங்களில் வரிசையால்....கொஞ்சம் மாற்றம் மெல்ல மலரட்டும்...

ஒவ்வொரு ஆசிரியரும்,கல்வியாளர்களும் பார்க்க வேண்டிய ,படமாய் பசங்க-2 உள்ளது...

வாழ்த்துகள் இத்திரைப்படத்தை துணிந்து எடுத்த தயாரிப்பாளருக்கும்,இயக்குனருக்கும்...உண்மையாக வாழ்ந்த நடிகர்களுக்கும்....


Saturday, 26 December 2015

அவளதிகாரம்

அவளதிகாரம்

காற்றில் சமைத்த உணவை சாப்பிடவில்லை
ஓவியக்காரில் அவளோடு அமரவில்லை
எனக்கு காய்ச்சலென்று அவளெடுத்தமுடிவிற்கு
கட்டுப்பட்டு குத்திக்கொண்ட விரல் ஊசிக்கு
வலியில் துடித்து அழவில்லை...என
காரணங்கள் வரிசையில் நிற்க...

செருமிக்கொண்டே தோளில்
சாய்ந்து எனை அடிக்க
ஆள் தேடுகின்றாள்....

Friday, 25 December 2015

இன்று ஒரு சிறப்பு நாளாக...

இன்று ஒரு சிறப்பு நாளாக...

சுரபி அறக்கட்டளை-மதுரை

சுரபி-சேதுவை சந்தித்த நாள்

சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்கள் ,மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள்,பெண்கள்,குழந்தைகளுக்கு உணவு,மருத்துவ பராமரிப்பு போன்ற பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கின்றனர்.

சாலையில் கிடப்பவர்களைப் பார்த்து உச் கொட்டி , இரக்கத்தோடு பேசுகின்றவர்களில் நானும் ஒருத்தி.....

அவர்களுக்குஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உடையவள்.ஆனால் அவற்றை செயல்படுத்துகின்ற உள்ளங்களை நேரில் கண்ட பொழுது மனம் நெகிழ்ந்த நிலை.

எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்ற என் கேள்விக்கு,
சுரபி நிறுவனர் சேது, அரசு மருத்துவமணையில் ஒப்பந்த பணியாளராகப்பணிபுரிந்த போது அங்கு வருபவர்களில் பத்து பேருக்கு எட்டு பேர் ஆதரவின்றி தவிப்பவர்களாகவும்,வேறு ஆதரவின்றி அங்கேயே இறந்து .அடக்கம் செய்யக்கூட ஆளில்லாதவர்களின் நிலையை எண்ணியே இப்பணியைத்தேர்வு செய்ததாகக் கூறிய போது ....

கைக்கூப்பி வணங்கவே தோன்றியது...

சாலையில் வாழும் தன்னிலை மறந்த மனநோயாளிகள்,தானாக நடக்க இயலாத ஆதரவற்றவர்கள்,ஆகியோரைத் தேர்ந்தெடுத்து தினம் ஒருவேளை உணவு அளித்து வருகின்றார்கள்..அவர்களை சுத்தம் செய்து ஆடை அணிவித்து,உணவிட்டுவரும் அவர்களின் பணிக்கு ஈடில்லை .

மனம் இருப்பவர்கள் கை கொடுங்கள் அலைபேசி எண் சேது- 9500660394 குமார்- 9500660894

என்னால் முடிந்த உதவியைச்செய்துள்ளேன்.உணவு சமைக்கத் தேவையான மளிகைப்பொருட்கள்,ஆடைகள் ஆகியவை அத்தியாவசியத் தேவையாக உள்ளன.

இவர்களை அறிமுகப்படுத்திய விதைக்கலாம் மலையப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி....


Monday, 21 December 2015

வினோத்

வலைப்பதிவர் விழாவில் எல்லோரும் மகிழ்ந்து பாராட்டிய உணவுக்குழு தலைமை தோழி ஜெயாவின் மகன் விபத்துக்குள்ளாகி உயிருக்குப்போராடி இன்று பிழைத்துவிட்டான்...முகநூலில் இச்செய்தியைப்பகிர்ந்ததும் ஏராளமானோர் அவனுக்காக நேர்மறை எண்ணங்களையும் வேண்டுதல்களையும் அள்ளித்தந்ததால் இன்று ஜெயா நிம்மதியான மூச்சு விடுகின்றார்..
இணையத்தளம் தந்த உறவுகளின் வலிமையை உணருகின்றேன்..

முகநூல் பதிவை இங்கு பகிர்கின்றேன்.

17.12.15 அன்று மதுரையில் விபத்துக்குள்ளாகி இரவு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சேர்த்து உடனே அறுவை சிகிச்சை செய்தும் மூச்சு விட முடியாது போராடி தவித்த மூன்று நாட்களும் ஜெயாவின் தவிப்பை சொல்லிமாளமுடியாது...வினோத் பிழைத்துவிட்டான்.
மருத்தவத்தினால் மட்டும் இது நிகழவில்லை...

அனைவரின் வேண்டுதல்களாலும் என்பதே உண்மை.

நாள் 19.12.15..

வினோத் விரைவில் நலமடைவார்மா..

தோழி இரா.ஜெயா அவர்களின் மகன் வினோத் விபத்துக்குள்ளாகி திருச்சி பிரண்ட்லைன் மருத்தவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இன்னும் கண்விழிக்கவில்லை. ஜெயாவின் வேதனையை அளவிடமுடியாதது.

எண்ணங்களின் வலிமையால் அவன் விரைவில் நலமடைய உங்களது வாழ்த்துகளும் ,வினோத்தை சென்றடையட்டும்..

எப்போதும் தன்னம்பிக்கையுடன்,முகச்சிரிப்புடனே காணப்படும் தோழியை இப்படி வேதனையுடன் காண முடியவில்லை...

எழுந்திடு வினோத் உன் அம்மாவை தேற்ற..

நம் அனைவரின் நம்பிக்கையால் வினோத் நலமடையட்டும்..


நாள் 20.12.15

கவலை வேண்டாம் ஜெயா..காலையில் ஜெயா கண்ணீர் விட்டதும் மனம் தாளாமல் கிளம்பி விட்டேன்.நேற்று நீங்க வந்த பின் தான் கொஞ்சம் நல்லாருக்கேன்மா என்றதும் தேறிடுவாங்கன்னு நினச்சு வந்துவிட்டேன்.
உங்களின் வாழ்த்துகள் இன்று வினோத்தை சுவாசிக்க வைக்கும் என்று நம்புகின்றேன்.முகநூல் பொழுதுபோக்கு தளம் அல்ல என்பதை அடிக்கடி உணர்கின்றேன்.எத்தனை உள்ளங்கள் ஆறுதல் கூறி ஜெயாவின் கண்ணீரைத்துடைக்கின்றன...மனம் நெகிழ்ந்து போகின்றேன்.உனக்காக இத்தனை தோழமைகள்...இருக்கும் போது கவலை அழிம்மா...நன்றி தோழமைகளே..

21.12.15

உங்களின் மனம் நிறைந்த நம்பிக்கை நிறைந்த வாழ்த்துகளால் வினோத்தின் உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் வருகின்றது ..தானாகச் சுவாசிக்க துவங்கியுள்ளான்....ஆக்சிஜன் துணையுடன்...

இரவு முழுதும் இப்படியே இருந்தால் நாளை அறைக்கு மாற்ற வாய்ப்புள்ளது..என கவலை குறைந்த குரலில் ஜெயா கூறினார்கள்..

உங்களின் அன்பை எண்ணி மனம் நெகிழ்ந்து உள்ளார்கள்...முகம் தெரியாமல் என் மகனுக்காக வேண்டியவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என தழுதழுக்கின்றார்கள்....

இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை வினோத்துக்கு அளிப்போம்..அவன் அம்மா கலங்காமல் சிரிக்க...மிக்கநன்றி அனைவருக்கும்..
நாள் 22.12.15

பிழைத்துவிட்டான் வினோத் உங்களாலும்,மருத்துவர் இராதாக்கிருஷ்ணன் அவர்களாலும்....

மதுரையில் விபத்து நடந்து மண்ணீரல் சிதைந்து உள்ளேயே இரத்தம் சுற்றிச்சுழல...

வெளியே காயம் இல்லாத காரணத்தால் ஏதோ மயக்கம் என்றெண்ணி மதுரையிலிருந்து தன்னந்தனியாக ஏதோ ஒரு நம்பிக்கையில் திருச்சி கொண்டுவந்து பிரண்ட்லைன் மருத்துவனையில் சேர்த்த உடன்...பார்த்த மருத்துவர்..உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் இல்லையெனில் காப்பாற்ற முடியாதென கூறி 20% நம்பிக்கைதான் உள்ளது....முடிந்தவரை காப்பாற்றுகின்றேன்..என்று கூறி உள்ளே சென்றார்..

12 மணிநேரம் குருதி உடலெங்கும் பாய்ந்து ஆங்காங்கே உறைந்து நிற்க ,அதை வாட்டர் சர்வீஸ் பண்ணுவது போல் அலசி எடுத்து அறுவை சிகிச்சை முடிந்து இயந்திரங்களால் உயிரோடு இருந்தான்.

நேற்று இரவு மட்டும் அவனாக மூச்சு விட்டால் மட்டுமே நல்லது என மருத்துவர் கூறிச்சென்ற நிலையில் ...விடிய விடிய தூங்காமல் ஓடி ஓடி பார்த்து மகன் தானாக மூச்சு விடுவதைப்பார்த்து மகிழ்ந்த ஜெயா விடிந்ததும், கீதா நீங்கள் அனைவரும் தந்த குழந்தை அவன் எல்லோரின் வேண்டுதல்களால் ,நம்பிக்கைகளால்,மட்டுமே அவன் பிழைத்து விட்டான்மா...என மகிழ்வான அழுகையுடன் கூறிய பொழுது மனதிலிருந்த சுமை விலகியது..

உங்களது வாழ்த்துகளால் மட்டுமே அவன் பிழைத்து உள்ளான் என்பதை உணர்கின்றோம்...

என்ன சொல்ல...உங்களின் கரம் பிடித்து கண்கலங்குவதை விட...

இனி கவலையில்லை.....நன்றி மட்டும் சொல்லி ஒதுக்க முடியாது உங்களைத்தோழமைகளே...
தொடர்வோம் .கூடுதலான அன்புடனும்,நட்புடனும்...மகிழ்வாய்..

Tuesday, 15 December 2015

அன்பான திரை உலக சகோதரர்களுக்கு..

அன்பான திரை உலக சகோதரர்களுக்கு..


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சமூக அக்கறை உண்டு என நம்புகின்றேன்..ஏன்னா இதவரை இருந்தவர்களுக்கு இல்லை என்பது உண்மை.

வக்கிரப்பாடல்களைப்பாடித்தான் பணம் பண்ண வேண்டிய இழிநிலையை நீங்கள் எதிர்ப்பீர்கள் என நம்புகின்றேன்.

வெள்ளத்தில் தவித்த மக்களைக்காப்பாற்ற முன் நின்று உதவிய நல்ல உள்ளங்கள் இப்போது நடிகர் சங்க உறுப்பினர்களாக,நடிகர் விஷால் தலைமையில் இருப்பது...
இனி சினிமா சமூகச்சீர்கேடுகளை உண்டாக்கும் காட்சிகளைத்தவிர்க்கும் எனவும் நம்புகின்றோம்...

பெண்களை இத்தனை கேவலமாக்கிய.அவமானப்படுத்திய,தெருவில் இறங்கி போராட வைத்த சைக்கோ சிம்புவை ஏன் அவர்கள் தவிர்க்கிறார்கள்..

”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்கொளுத்துவோம் “”
என்றான் பாரதி..இப்ப யாரைக்கொளுத்துவது..

இதுவரை இவர்களும் இப்படித்தானே..பெண்ணைப்போகப்பொருளாக்கி காட்டி பணம் சம்பாதித்தோம்...இப்ப கேட்டா நம்மை குறை கூறுவார்களே என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்..போகட்டும் இதுவரை உங்களின் இழிநிலையை பொறுத்துக்கொண்டோம்...

பள்ளிவயது பெண்கள் படிக்காமல் காதல் செய்ய வைத்து சினிமா அவர்களை இளவயது தாயாக்கி மகிழும் நிலை இனி வேண்டாம்..
உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு இப்படித்தான் சொல்வீர்களா?
ஒருவேளை அவர்கள் தெளிவான அறிவுடன் இருக்கலாம்.ஆனால் இப்போது தான் வீட்டை விட்டு வெளிவரும் முதல்தலைமுறை பெண்களுக்கு படிப்பு முக்கியம் என்பதை சினிமா மறக்கடித்துவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இனியாவது உங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கின்றார்கள் அவர்கள் வெட்கித்தலைகுனியும் படியான பாடல்களிலும் படங்களிலும் நடிக்காதிருங்கள்...

உண்மையான உங்கள் உழைப்பு இதனால்...கேவலப்படுகிறது என்பதை உணர்வீர்களா சகோதரர்களே...?

பெண்களைப் போற்றிய நம் சமூகம் தான் இன்று அவளை பொதுவெளியில் இயங்க விடாமல் தடுக்க நீங்களும் ஒரு காரணமாகின்றீர்கள் என்பது தெரியுமா?

ஆணுக்கு உபயோகப்படும் போகப்பொருளாக திரைப்படங்கள் அவளை அடையாளப்படுத்தியதன் விளைவால் நாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை உங்களால் உணரமுடிகிறதா?

இனி தெருவில் நடக்கையில் மாங்கா சின்னது பெருசுன்னு கேலி செய்தவர்கள் அடுத்த வக்கிரமாக” பீப்” என கிண்டல் செய்யும் போது நாங்கள் நடுத்தெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டதாக கூனிக்குறுகி நிற்போம் என்பதை எப்படி உங்களுக்கு உணரவைக்க?

யோசியுங்கள்..மாற்றம் உங்களிடமிருந்தே...துவங்கட்டும்..

பெண் அழகனவள் என்பதை விட அறிவானவள், சமூகத்திற்கு தேவையானவள், அவளால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தட்டும் உங்கள் படங்கள்...


சென்னை வெள்ளம் கூவத்தை மட்டுமல்ல தமிழ்ச்சினிமாவில் உள்ள குப்பைகளையும் அகற்றி தூய்மை படுத்தட்டும்...நன்றி

Saturday, 12 December 2015

என்ன சொல்வது?

என்ன சொல்வது?

மக்களின் மகிழ்விற்காக உருவாக்கப்பட்டக் கலைகள்...அவனது வாழ்விற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தன ஒரு காலத்தில்...கவலையிலிருந்து விடுபடவும்,கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவும் பயன் பட்டக் கலைகளின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகிவிட்ட சூழ்நிலை.

ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டான்...பின் உயிர்கள் பிறக்க காரணமான மனித உறுப்புகளை ,இன்றும் கடவுளாக வழிபடும் சமூகம்...போற்றுதற்குரியவையாக எண்ணின...

பாதுகாப்பிற்காக மறைக்கப்பட்ட மனித உறுப்புகள்...பிற உறுப்புகளைப்போல் தான்..அதுவும் என்பதை சமூகம் உணரவில்லை...

காலப்போக்கில் திட்டுவதற்கு பயன்படுபவையாக அவை மாறிய கொடுமை...

கை கால்களைப்போல் தான் அவையும் ....அது எப்படி திட்டுவதற்கான உறுப்பாக மாறும் என்ற நிலையில்
இன்று தன் வக்கிரமான எண்ணங்களை வெளிப்படுத்த அந்த உறுப்புகளை கூறி தன் பாலியல் வக்கிரங்களைத்தீர்த்துக்கொள்ளும் கேவலமானப்பிறவிகளாக மாறிய நிலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதை அனைவரும் வன்மையாக எதிர்க்கும் நிலையில் நான் அப்படித்தான் செய்வேன்...என் உரிமை...என சிம்பு கூறியது வக்கிரம் நிறைந்த ஆணாதிக்கச்சிந்தனையின் வெளிப்பாடு....

பாடல்கள் என்பது மகிழூட்டுவதற்கே அன்றி வக்கிர எண்ணங்களைத்தூண்டுவதற்கு அல்ல....
அவன் மட்டுமல்ல....டாடி மம்மி வீட்டில் இல்லன்னு ஆணை உறவுக்கு அழைக்கும் பாடலை எழுதிய கைகளை அன்றே வெட்டியிருந்தால் இன்று இந்தப்பாடல்கள் பிறந்திருக்காது...

தான் அடிக்கடி பேசப்பட வேண்டும் என்பதற்காக அந்த கேவலமானப்பிறவிகள் இந்தப்பாடலை பாடியிருக்கின்றன...
இப்படிப்பட்ட அசிங்கம் தேவையா....இவனை மகனாகப்பெற என்ன பாவம் செய்தார்களோ...?

இப்பாடல் இப்படிப்பட்ட ஆண்களின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது...இது வெளியில் வந்து விட்டது..வராதவை எத்தனையோ?

ஆனால் பெண் என்பவள் போகப்பொருளுக்கே என்று திரைப்படங்கள் விதைத்த விதை இன்று மரமாக வளர்ந்துள்ளது.

பிறந்துஇருபத்து நான்கு நாட்களே ஆன குழந்தையையும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட இவைகளே முக்கியக்காரணமாகத்திகழ்கின்றன.

இனியாகிலும் இவற்றை கடுமையாக எதிர்க்க வேண்டும்...தன் இனத்தை சேர்ந்த ஒருவன் இப்படி பாடிய பாடலுக்கு கொதித்துக்கிளம்பிய சகோதரர்களுக்கு என் வணக்கத்தைக்கூறிக்கொள்கின்றேன்..

ஆனால் இது திடீரென கிளம்பிய ஒன்றல்ல என்பதை உணர வேண்டும்.

ஆரம்பத்தில் விட்டுவிட்டோம் என்பது ...நாம் மறுக்கமுடியாத உண்மை..